Published:Updated:

Tamil News Today: பஞ்சாப்: காங்கிரஸிலிருந்து விலகி புதிய கட்சி தொடங்கினார் அமரீந்தர் சிங்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
 புதிய கட்சி தொடங்கினார் அமரீந்தர் சிங்!
புதிய கட்சி தொடங்கினார் அமரீந்தர் சிங்!

02-11-2021 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!

02 Nov 2021 6 PM

பஞ்சாப்: காங்கிரஸிலிருந்து விலகி புதிய கட்சி தொடங்கினார் அமரீந்தர் சிங்! 

பஞ்சாப் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங், அந்த மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் நவஜோத் சிங் சித்துவுடனான உட்கட்சி மோதலின் காரணமாக அண்மையில் முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகினார். அது தொடர்பாகப் பேசிய அமரீந்தர் சிங், ``காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகுகிறேன். ஆனால், பாஜக-வில் இணைய மாட்டேன். புதிய கட்சி தொடங்குவது தொடர்பாக ஆலோசித்துக்கொண்டிருக்கிறேன்" என்று தெரிவித்திருந்தார்.

அமரீந்தர் சிங்
அமரீந்தர் சிங்

இந்த நிலையில், அமரீந்தர் சிங் இன்று, தான் புதிதாகத் தொடங்கவிருக்கும் கட்சியின் பெயரை அறிவித்திருக்கிறார். 'பஞ்சாப் லோக் காங்கிரஸ்' எனத் தன் கட்சிக்குப் பெயர் சூட்டியிருக்கும் அமரீந்தர் சிங், கட்சி தொடங்கிய கையோடு காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகுவது தொடர்பாக அந்தக் கட்சியின் தலைவர் சோனியா காந்திக்கு ராஜினாமா கடிதம் அனுப்பியிருக்கிறார்.

02 Nov 2021 5 PM

ஆப்கன்: ராணுவ மருத்துவமனையில் பயங்கரவாதத் தாக்குதல்; 19 பேர் உயிரிழப்பு!

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலிலுள்ள ராணுவ மருத்துவமனை ஒன்றில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்பு தாக்குதலில் 19 பேர் உயிரிழந்திருப்பதாகவும், 50-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்திருப்பதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.

ஆப்கன்
ஆப்கன்
Twitter/@TOLOnews

இன்று மதியம் சுமார் 2 மணியளவில், காபூல் ராணுவ மருத்துவமனைக்கு அருகில் அடுத்தடுத்து இரண்டு வெடிகுண்டுகள் வெடித்ததாகவும், அதைத் தொடர்ந்து ராணுவ மருத்துவமனைக்குள் துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது. தாலிபன்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் காபூல் நகரத்தில் அரங்கேறியிருக்கும் இந்த பயங்கரவாத தாக்குதல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நிலையில், தாலிபன்களின் பாதுகாப்புப் படையினரைக் குறிவைத்து ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பினர் இந்தத் தாக்குதலை நடத்தியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

02 Nov 2021 9 AM

மரம் விழுந்ததில் காவலர் பலி!

சென்னையில் நேற்று இரவு முதல் மழை பெய்துவருகிறது. இன்று காலை முதல் அது கனமழையாகக் கொட்டி வருவதன் காரணமாக பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும் சென்னையில் விடுமுறை அளிக்கப்பட்டிருக்கிறது.

தலைமைச் செயலகம்
தலைமைச் செயலகம்

இந்த நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில், பெரிய மரம் ஒன்று வேரோடு சாய்ந்து விழுந்ததில் பெண் காவலர் ஒருவர் பலியானார். வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் நின்ற பெரிய மரம், முறிந்து விழுந்ததில் போக்குவரத்துக் காவலர் ஒருவர் காயமடைந்தார் என்றும், இரண்டு கார்கள் சேதமடைந்ததாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.

02 Nov 2021 8 AM

தொடரும் கனமழை... பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

தமிழகத்தில் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்துவருகிறது. தொடர்மழை காரணமாக பெரம்பலூர், திருவண்ணாமலை, அரியலூர், விழுப்புரம், கடலூர், செங்கல்பட்டு, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, கொடைக்கானலிலும் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சில மாவட்டங்களில் தாலுகா அளவில் பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

மழை
மழை

சென்னையில் நேற்று இரவு முதல் மழை பெய்துவரும் நிலையில், இன்று காலை முதல் கனமழையாகப் பெய்துவருகிறது. கனமழை தொடர்வதால், சென்னையில், பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு