Published:Updated:

Tamil News Today: `மேக்கேதாட்டு அணைக்கு ஒத்துழைப்பு தரவேண்டும்!’ - தமிழக முதல்வருக்கு கர்நாடக முதல்வர் கடிதம்

ஸ்டாலின்
ஸ்டாலின்

03-07-2021 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!

03 Jul 2021 4 PM

தமிழ்நாடு முதல்வருக்கு கர்நாடக முதல்வருக்கு கடிதம்!

எடியூரப்பா
எடியூரப்பா

தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலினுக்கு கர்நாடக முதல்வர் எடியூரப்பா மேக்கேதாட்டு அணை விவகாரம் தொடர்பாக கடிதம் எழுதியிருக்கிறார். அதில், ``மேக்கேதாட்டு அணைக்கு ஒத்துழைப்பு தரவேண்டும். மேக்கேதாட்டு அணை கட்டுவதன், மூலம் தமிழகம் கர்நாடகம் என இரு மாநிலங்களும் பயன்பெறும். மேக்கேதாட்டு அணை குறித்து இரு மாநில பிரதிநிதிகள் முன்னிலையில் தேவைப்பட்டால் பேச்சுவார்த்தை நடத்த தான் தயாராக இருப்பதாகவும்” அந்த கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார். கடந்த சில மாதங்களாகவே கர்நாடகா மேக்கேதாட்டு அணை கட்ட தீவிரம் காட்டு வரும் நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலினுக்கு அம்மாநில முதல்வரே கடிதம் எழுதி இருப்பது குறிப்பிடதக்கது. எனினும் மேக்கேதாட்டுவில் அணை கட்ட தமிழகம் தொடர்ந்து எதிர்ப்பினை பதிவு செய்து வருகிறது.

03 Jul 2021 1 PM

`விளம்பர நோக்கில் பா.ஜ.க பிரமுகர் வழக்கு தொடர்ந்திருக்கிறார்!’

நீட் தேர்வு
நீட் தேர்வு

முன்னாள் நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் நீட் தேர்வு ஆய்வுக்குழு அமைக்கப்பட்டதற்கு எதிராக பா.ஜ.க பிரமுகர் கரு.நாகராஜன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இது தொடர்பான வழக்கு விசாரணையில் தமிழக அரசு தனது பதில் மனுவில், `நீட் தேர்வு ஆய்வுக்குழுவுக்கு எதிராக விளம்பர நோக்கில் பா.ஜ.க பிரமுகர் வழக்கு தொடர்ந்திருக்கிறார். ஜனநாயகத்தை ஒடுக்கும் வகையில் தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்” என தெரிவித்திருக்கிறது.

03 Jul 2021 9 AM

இந்தியாவில் கொரோனா நிலவரம்!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில், மேலும் புதிதாக 44,111 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது. இந்தியாவில், மொத்த கொரோனா பாதிப்பு 3,05,02,362 என்ற எண்ணிக்கையை எட்டியிருக்கிறது.

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 738. இந்தியாவில் இதுவரை கொரோனா பாதிப்பு காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 4,01,050-ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா சிகிச்சைப் பிரிவு
கொரோனா சிகிச்சைப் பிரிவு

இந்தியாவில் இதுவரை கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு வந்தவர்களின் எண்ணிக்கை 2,96,05,779-ஆக இருக்கிறது. தற்போது மருத்துவமனைகளில் 4,95,533 பேர் சிகிச்சையில் இருக்கிறார்கள். ஒரே நாளில் 57,477 பேர் பாதிப்பிலிருந்து மீண்டு வீடு திரும்பியிருக்கிறார்கள்.

இந்தியாவில் இதுவரை 34,46,11,291 டோஸ் கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டிருக்கின்றன!

அடுத்த கட்டுரைக்கு