Published:Updated:

Tamil News Today: ``பஞ்சாப் சம்பவத்தைக் கண்டித்து தமிழக பாஜக அறவழிப் போராட்டம் நடத்தும்!" - அண்ணாமலை

பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை
Live Update
பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை

06-01-2021 | இன்றைய சட்டப்பேரவை நிகழ்வுகள் மற்றும் முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!

06 Jan 2022 6 PM

Tamil News Today: ``பஞ்சாப் சம்பவத்தைக் கண்டித்து தமிழக பாஜக அறவழிப் போராட்டம் நடத்தும்!" - அண்ணாமலை

மதுரையில் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.

06 Jan 2022 5 PM

காரைக்கால் : சம்பள பாக்கி விவகாரம்; நகராட்சி ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம் 2-ம் நாளாக தொடர்கிறது!

காரைக்கால் நகராட்சி ஊழியர்களுக்கு நிலுவையில் உள்ள 6 மாத ஊதியத்தை வழங்க வலியுறுத்தி நகராட்சி ஊழியர்கள் இரண்டாவது நாளாக உள்ளிருப்பு வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

புதுச்சேரி அரசின் கொள்கை முடிவுகளாலும், காரைக்கால் நகராட்சிக்கு அரசு தருவதாக வாக்களித்த ஊதியத்திற்கான மானியத்தொகை முறையாக வழங்காததாலும், ஆக்ட்ராய் நிதி நிறுத்தம், வீட்டு வரி குறைப்பு, குப்பை வரி நிறுத்தம், கேபிள் டிவி வரி நிறுத்தம் ஆகியவற்றாலும் காரைக்கால் நகராட்சி ஊழியர்களுக்கு கடந்த 6 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை என்று ஊழியர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

போராட்டம்
போராட்டம்

எனவே, நகராட்சி ஊழியர்களை தொடர்ச்சியாக ஏமாற்றி வரும் புதுச்சேரி அரசையும், உள்ளாட்சித்துறை நிர்வாகத்தையும், மாவட்ட ஆட்சியரையும், நகராட்சி ஆணையரையும் கண்டித்தும், ஏற்கனவே வாக்களித்தபடி தற்போது கையிருப்பிலுள்ள மேம்பாட்டு நிதியிலிருந்து (Development charge) கடனாக எடுத்து நிலுவையிலுள்ள 6 மாத ஊதியம் மற்றும் ஓய்வூதியத்தை வழங்க வலியுறுத்தி நகராட்சி ஊழியர்கள் பணி புறக்கணிப்பு செய்து இரண்டாவது நாளாக உள்ளிருப்பு வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

செய்தி - மு.ராகவன்

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
06 Jan 2022 5 PM

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கொரோனா பரவல்; புதுச்சேரியில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அறிவிப்பு!

தமிழகத்தின் அண்டை மாநிலமான புதுச்சேரியில் கொரோனா பரவல் வேகமெடுக்கத் தொடங்கியிருக்கிறது. அதன் காரணமாக, நேற்று முன் தினம் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அதில், நோய் பரவலை கட்டுக்குள் கொண்டுவர பல்வேறு கட்டுப்பாடுகளை அமல்படுத்த முடிவு செய்யப்பட்டது.

கழிவறை இல்லாவிட்டால் ரேஷன் பொருள்கள் இல்லை- புதுச்சேரி அரசு அதிரடி
கழிவறை இல்லாவிட்டால் ரேஷன் பொருள்கள் இல்லை- புதுச்சேரி அரசு அதிரடி

இந்த நிலையில், இன்று புதுச்சேரி அரசு பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை அறிவித்திருக்கிறது. இன்று முதல் புதுச்சேரியில் மால்கள், வணிக நிறுவனங்கள், உணவகங்கள், பார்கள், உள்ளிட்ட இடங்களில் 50 சதவிகிதம் பேர் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும் என புதுச்சேரி அரசு அறிவித்திருக்கிறது. அதேபோல, வெளிமாநிலங்களிலிருந்து புதுச்சேரிக்கு வரும் வாகனங்களில் 50 சதவிகிதம் பேர் மட்டுமே பயணிக்க வேண்டும், கோயில்களில் பக்தர்கள் இன்றி கும்பாபிஷேகம் போன்ற விழாக்கள் நடத்த வேண்டும், என பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது. பள்ளிகளில் கொரோனா வழிகாட்டுதல்களை பின்பற்றி வழக்கம் போல் வகுப்புகளை நடத்தலாம் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

06 Jan 2022 4 PM

பஞ்சாப்: இத்தாலியிலிருந்து வந்த 125 பயணிகளுக்கு கொரோனா தொற்று உறுதி!

இத்தாலியிலிருந்து இன்றுகாலை பஞ்சாப் மாநிலம், அமிர்தசரஸ் விமானம் நிலையம் வந்திறங்கிய விமானத்தில் பயணித்தவர்களில் சுமார் 120-க்கும் மேற்பட்ட பயணிகளுக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டிருக்கிறது.

ஒமைக்ரான்
ஒமைக்ரான்
pixa bay

15-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உட்பட மொத்தம் 179 பேர் பயணித்த அந்த விமானத்தில், 125 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. அவர்களில், பலருக்கு ஒமைக்ரான் நோய்த்தொற்று பாதிப்பு உறுதிசெய்யப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

06 Jan 2022 3 PM

குடியரசுத் தலைவர் - பிரதமர் சந்திப்பு!

குடியரசுத் தலைவர் - பிரதமர்
குடியரசுத் தலைவர் - பிரதமர்

பிரதமர் மோடியின் பஞ்சாப் பயணம் பாதுகாப்புக் காரணங்களால் ரத்துசெய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடிக்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பு கவலையளிப்பதாகத் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், பிரதமரை நேரில் வருமாறும் அவர் அழைப்பு விடுத்திருந்தார். குடியரசுத் தலைவரின் அழைப்பை ஏற்று டெல்லியில் குடியரசுத் தலைவர் மாளிகைக்குச் சென்ற பிரதமர் மோடி, பஞ்சாப் மாநிலத்தில் நேற்றைய தினம் என்ன நடந்தது என்பது பற்றி நேரில் விளக்கம் அளித்திருக்கிறார்.

06 Jan 2022 3 PM

திருச்சி சிறையில் ராஜேந்திர பாலாஜி..!

வேலை வாங்கித் தருவதாக பண மோசடி செய்த வழக்கில் கைதுசெய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு வரும் 20-ம் தேதிவரை நீதிமன்றக் காவல் அளிக்கப்பட்ட நிலையில் மதுரை மத்தியச் சிறையிலிருந்து திருச்சி மத்தியச் சிறைக்கு தற்போது அழைத்து வரப்பட்டு அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

06 Jan 2022 3 PM

`ஸ்மார்ட் சிட்டி திட்ட முறைகேடு தொடர்பாக விசாரிக்க, குழு அமைக்கப்படும்!’

ஸ்டாலின்
ஸ்டாலின்

பேரவையில் முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், ``ஸ்மார்ட் சிட்டி திட்ட முறைகேடு தொடர்பாக விசாரிக்க, குழு அமைக்கப்படும். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தைச் சரியாக வடிவமைக்காத காரணத்தினால் தியாகராயநகரில் மழைநீர் தேங்கியது” என்றார்.

06 Jan 2022 1 PM

``துணைவேந்தர்களை தமிழக அரசே நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும்!" - முதல்வர் ஸ்டாலின்

``பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை தமிழக அரசே நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும். மார்ச் மாதம் சட்டப்பேரவைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படும்’’ என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.

முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்

மகாராஷ்டிரா, மேற்கு வங்கத்தைத் தொடர்ந்து தமிழக அரசும் இத்தகைய அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. தற்போதுவரை, பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் ஆளுநர் ஒருவருக்கு மட்டுமே இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

06 Jan 2022 1 PM

`பஞ்சாப் விவகாரம் - குடியரசுத் தலைவரை சந்திக்கிறார் பிரதமர் மோடி!'

ஜனாதிபதி மாளிகையில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை பிரதமர் நரேந்திர மோடி சந்திக்கவிருக்கிறார். குடியரசுத் தலைவர் அழைப்பின் பேரில் பிரதமர் அவரைச் சந்திக்கவிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. நேற்றைய தினம் பஞ்சாபில் நடந்த பாதுகாப்பு குளறுபடிகள் குறித்து குடியரசுத் தலைவர் பிரதமர் மோடியிடம் போனில் கவலை தெரிவித்திருந்தார்.

ராம்நாத் கோவிந்த்
ராம்நாத் கோவிந்த்

இந்த நிலையில், மோடியை ஜனாதிபதி மாளிகைக்கு அவர் அழைத்திருப்பது அனைவராலும் உற்று நோக்கப்பட்டுவருகிறது. இந்தச் சந்திப்பின்போது, இருவரும் பஞ்சாப் சம்பவம் குறித்து விவாதிப்பார்கள் என்று கூறப்படுகிறது.

06 Jan 2022 12 PM

நீட் விலக்கு... ஜனவரி 8-ம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டம்!

இன்று தமிழக சட்டப்பேரவையில் நீட் தேர்வு குறித்துப் பேசிய தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின், `வரும் ஜனவரி 8-ம் தேதி நீட் தேர்வு தொடர்பாக அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறும்’ எனத் தெரிவித்தார். மேலும், ``எந்த ஒரு நுழைவுத்தேர்வு என்றாலும் அது ஏழை எளிய மாணவர்களை பாதிக்கும். ப்ளஸ் டூ மதிப்பெண் அடிப்படையில் கல்லூரி மாணவர் சேர்க்கை நடத்துவதில் அரசு உறுதியாக உள்ளது. நீட் தேர்வு விலக்கு மசோதா பற்றிக் கடிதம் கொடுக்க மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேரம் கொடுக்கவில்லை” என்று தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின்
சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின்

தொடர்ந்து பேசியவர், `நீட் தேர்வு என்பது கூட்டாட்சித் தத்துவத்தை சீர்குலைக்கும் வகையில் உள்ளது’ எனவும், `நீட் விலக்கு தொடர்பாக ஜனவரி 8-ம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறும்’ எனவும், `போராட்டத்தின் மூலமே அனைத்து உரிமைகளையும் பெற்றிருப்பதால் நீட் போராட்டம் தொடரும்’ எனவும் தெரிவித்தார்

06 Jan 2022 10 AM

இந்தியாவில் ஒரே நாளில் 90,928 பேர் பாதிப்பு!

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. நேற்று ஒரே நாளில் 90,928 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டிருக்கிறது. நேற்று இந்த பாதிப்பின் அளவு 58 ஆயிரம் என்ற அளவில் இருந்தது. தற்போது இந்தியாவில் 2,85,401 பேர் சிகிச்சையில் இருக்கிறார்கள். நேற்று ஒரே நாளில் 19,206 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதே போன்று ஒரே நாளில் 325 பேர் கொரோனா காரணமாக உயிரிழந்திருக்கிறார்கள்.

ஒமைக்ரான்
ஒமைக்ரான்
pixa bay

மேலும், இந்தியாவில் 148.67 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது. இந்தியாவில் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிகையும் 2,630-ஆக அதிகரித்திருக்கிறது.

06 Jan 2022 8 AM

மாவட்ட குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் ராஜேந்திர பாலாஜி ஆஜர்!

பண மோசடி வழக்கில் கர்நாடக மாநிலத்தில் கைதுசெய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை தனிப்படை போலீஸார், விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட குற்றப்பிரிவு காவல் நிலையத்துக்கு அழைத்துவந்தனர்.

ஆர்ப்பாட்டம்
ஆர்ப்பாட்டம்

இந்த நிலையில் ஆட்சியர் அலுவலகம் முன்பாக முன்னாள் எம்.எல்.ஏ ராஜவர்மன் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட அதிமுகவினர் கூடியதாலும், ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தின் முன்பும் 50-க்கும் மேற்பட்டோர் கூடியதாலும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து ராஜவர்மன் தலைமையில் திரண்ட 70 பேர், ஸ்ரீவில்லிபுத்தூரில் திரண்ட 53 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். பின்னர் ராஜேந்திர பாலாஜி விருதுநகர் மாவட்ட குற்றவியல் நீதிமன்ற நீதிபதி பரம்வீர் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, ராஜேந்திர பாலாஜியை வரும் 20-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி பரம்வீர் உத்தரவு பிறப்பித்தார்.