Published:Updated:

Tamil News Today: `மத்திய அமைச்சராகப் பதவியேற்றார் பா.ஜ.க-வின் எல்.முருகன்!'

L.Murugan
L.Murugan ( ANI )

07-07-2021 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!

07 Jul 2021 7 PM

தமிழக பா.ஜ.க வின் தலைவர் எல்.முருகன் மத்திய அமைச்சராகப் பதவியேற்றார்.

L.Murugan
L.Murugan
ANI

பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை விரிவாக்கம் குறித்த பேச்சு எழுந்தபோதே தமிழகத்திலிருந்து யாருக்கு மத்திய அமைச்சரவையில் இடம் கிடைக்கும் என எதிர்பார்த்த நிலையில் தமிழக பா.ஜ.க தலைவர் எல்.முருகனின் பெயர் 43 புதிய அமைச்சர்கள் பட்டியலில் இடம்பெற்றது. இந்நிலையில் குடியரசுத் தலைவர் இல்லத்தில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் எல்.முருகனை மத்திய அமைச்சராக குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

07 Jul 2021 6 PM

மத்திய அமைச்சரவை விரிவாக்கம் குறித்து கமல்ஹாசன் ட்விட்டர் பதிவு!

பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்பட்டது. அதுகுறித்து மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அந்த பதிவில்,

" தமிழகத்திற்கு ஒரு மத்திய அமைச்சர் கிடைத்திருக்கிறார் என்று மகிழ முடியாதபடி இருக்கிறது அமைச்சரவை விரிவாக்கம். நாடு அனைத்துத் துறைகளிலும் பின்னடைந்திருக்கிறது. இந்தச் சரிவிலிருந்து மீளும் நோக்கத்தில் அமைச்சரவை மாற்றம் நடந்திருக்கவேண்டும். ஆனால், உள்கட்சித் தலைவர்கள், வேறு கட்சிகளிலிருந்து இணைந்தவர்கள், வரவிருக்கிற மாநில தேர்தல்கள் ஆகியவற்றை மனதில் வைத்து நடந்திருக்கும் இந்த விரிவாக்கம் பாஜகவிற்கு வேண்டுமானால் நன்மை பயக்கலாம். நாட்டிற்கு இதனால் ஆகப்போவதென்ன? " எனப் பதிவிட்டுள்ளார்.

07 Jul 2021 6 PM

'43 புதிய மத்திய அமைச்சர்கள் பதவியேற்பு; குடியரசுத் தலைவர் இல்லத்தில் தொடங்கியது விழா!'

43 புதிய மத்திய அமைச்சர்கள் பதவியேற்பு
43 புதிய மத்திய அமைச்சர்கள் பதவியேற்பு
ANI

பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்பட்டது. இன்று மாலை 4 மணியளவில் புதிதாகப் பதவியேற்கவிருக்கும் அமைச்சர்களின் பட்டியல் வெளியானது. அந்தப் பட்டியலில் தமிழக பா.ஜ.க தலைவர் எல்.முருகனுக்கும் இடம் கிடைத்திருக்கிறது. இந்தநிலையில், குடியரசுத் தலைவர் இல்லத்தில் தற்போது பதவியேற்பு விழா தொடங்கியது. புதிய அமைச்சர்களுக்கு, குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.

07 Jul 2021 10 AM

முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு நிபந்தனை ஜாமீன்!

முன்னாள் அதிமுக அமைச்சர் மணிகண்டன்  மீது நடிகை  புகார்
முன்னாள் அதிமுக அமைச்சர் மணிகண்டன் மீது நடிகை புகார்

முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டிருக்கிறது. திருமணம் செய்வதாகக் கூறி, ஏமாற்றிவிட்டதாக நடிகை ஒருவர் அளித்த புகாரில், முன்னாள் அமைச்சர் மணிகண்டன் கைதுசெய்யப்பட்டிருந்தார். இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடைபெற்றுவந்த நிலையில், ஜாமீன் மனு மீதான விசாரணையில் அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டிருக்கிறது. `அவரின் பாஸ்போர்ட்டை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் தனது ஜாமீன் உத்தரவில் தெரிவித்துள்ளது. மேலும், இரண்டு வாரங்களுக்கு அடையார் மகளிர் காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்றும் கூறப்பட்டிருக்கிறது.

07 Jul 2021 10 AM

இந்தியாவில் கொரோனா நிலவரம்!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில், மேலும் புதிதாக 43,733 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது. இந்தியாவில், மொத்த கொரோனா பாதிப்பு 3,06,20,594 என்ற எண்ணிக்கையை எட்டியிருக்கிறது.

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 930. இந்தியாவில் இதுவரை கொரோனா பாதிப்பு காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 4,04,211-ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா சிகிச்சைப் பிரிவு
கொரோனா சிகிச்சைப் பிரிவு

இந்தியாவில் இதுவரை கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு வந்தவர்களின் எண்ணிக்கை 2,97,99,534-ஆக இருக்கிறது. தற்போது மருத்துவமனைகளில் 4,59,920 பேர் சிகிச்சையில் இருக்கிறார்கள். ஒரே நாளில் 47,241 பேர் பாதிப்பிலிருந்து மீண்டு வீடு திரும்பியிருக்கிறார்கள்.

07 Jul 2021 8 AM

மத்திய அமைச்சரவைக் கூட்டம் ரத்து!

மோடி அமைச்சரவைக் கூட்டம்
மோடி அமைச்சரவைக் கூட்டம்
-

டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் இன்று நடத்தத் திட்டமிடப்பட்ட பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுக் கூட்டம் (சி.சி.இ.ஏ) மற்றும் அமைச்சரவைக் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. விரைவில் மத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படும் என்ற தகவல் வெளியாகியிருக்கும் நிலையில், இன்று அமைச்சரவைக் கூட்டம் ரத்து செய்யப்பட்டிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு