Published:Updated:

Tamil News Today: `இந்தியாவில் 50 கோடி டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது!’ - கொரோனா நிலவரம்

கொரோனா தடுப்பூசி
கொரோனா தடுப்பூசி

07-08-2021 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!

07 Aug 2021 9 AM

இந்தியாவில் கொரோனா நிலவரம்!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில், மேலும் புதிதாக 38,628 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது. இந்தியாவில், மொத்த கொரோனா பாதிப்பு 3,18,95,385 என்ற எண்ணிக்கையை எட்டியிருக்கிறது.

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 617. இந்தியாவில் இதுவரை கொரோனா பாதிப்பு காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 4,27,371-ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா
கொரோனா

இந்தியாவில் இதுவரை கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு வந்தவர்களின் எண்ணிக்கை 3,10,55,861-ஆக இருக்கிறது. தற்போது மருத்துவமனைகளில் 4,12,153 பேர் சிகிச்சையில் இருக்கிறார்கள். ஒரே நாளில் 40,017 பேர் பாதிப்பிலிருந்து மீண்டு வீடு திரும்பியிருக்கிறார்கள்.

இந்தியாவில் இதுவரை 50,10,09,609 டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது. நேற்று மட்டும் 49,55,138 டோஸ் தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது!

07 Aug 2021 8 AM

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவு தினம்!

திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான மு.கருணாநிதியின் மூன்றாம் ஆண்டு நினைவுதினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இந்தநிலையில் நேற்று தொண்டர்களுக்குக் கடிதம் எழுதிய முதல்வர் ஸ்டாலின், ``இன்று ஒவ்வொரு தொண்டரின் இதயமும் தகர்ந்தது போன்ற உணர்வுடன் கண்ணீர்ப் பெருக்கெடுத்த நாள். வைர நெஞ்சம் உடைய கருணாநிதியை, இயற்கை சதி செய்து நம்மிடமிருந்து பிரித்த நாள். உடலால் கருணாநிதி பிரிந்தாலும், தொண்டர்கள் மற்றும் உலகத் தமிழர்களின் நெஞ்சங்களில் என்றென்றும் வாழ்ந்துகொண்டிருக்கிறார்.

ஸ்டாலின்
ஸ்டாலின்

இது, மூன்றாவது ஆண்டு நினைவுதினம். இன்னும் எத்தனை ஆண்டுகளானாலும், எல்லா நாளிலும், அதன் ஒவ்வொரு நொடியிலும் அவர் நினைவின்றி நம் கட்சியில்லை. ஆறாவது முறையாக ஆட்சி அமைத்திருக்கும் தி.மு.க., இந்தத் தேர்தல் களத்தில் தென்றலைத் தீண்டவில்லை; தீயைத் தாண்டி வந்திருக்கிறது. இன்னும் கடக்க வேண்டிய பொறுப்புகள் உண்டு” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

இன்று காலை முதல்வர் ஸ்டாலின் தலைமையில், அமைச்சர்கள், திமுக நிர்வாகிகள், எம்.எல்.ஏ-க்கள் எனப் பலரும் சென்னை மெரினா கடற்கரையிலிருக்கும் கருணாநிதியின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர். முன்னதாக அவர்கள் அண்ணா நினைவிடத்திலும் மரியாதை செலுத்தினர்.

அடுத்த கட்டுரைக்கு