Published:Updated:

Tamil News Today: சசிகலா தொடர்புடைய பையனூர் பங்களா முடக்கம்! - நோட்டீஸ் ஒட்டியது வருமான வரித்துறை

சசிகலா
சசிகலா

08-09-2021 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!

08 Sep 2021 1 PM

சசிகலாவுக்குச் சொந்தமான பங்களாவில் நோட்டீஸ்!

சசிகலா
சசிகலா

சசிகலா தொடர்புடைய பையனூர் பங்களாவில் வருமான வரித்துறையினர், பங்களாவை முடக்கியதற்கான நோட்டீஸ் ஒட்டியுள்ளனர். முன்னதாக, கடந்த ஆண்டுகளில் பினாமி சட்டத்தின் கீழ் சசிகலா தொடர்புடைய பல்வேறு இடங்கள் முடக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

08 Sep 2021 11 AM

``குடியுரிமை திருத்தச் சட்டத்தை ரத்துசெய்ய வேண்டும்!” - பேரவையில் ஸ்டாலின் 

சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின்
சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின்

இந்திய குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வந்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின். இது தொடர்பாக ஸ்டாலின் பேசுகையில், ``ஒன்றிய அரசு 2019-ம் ஆண்டில் கொண்டு வந்த சிஏஏ சட்டம் மத நல்லிணத்துக்கு உகந்ததாக இல்லை. அகதிகளாக வருபவர்களை மதரீதியாக பாகுபடுத்திப் பார்க்கும் வகையில் சட்டம் இருக்கிறது. சிஏஏ சட்டம் இலங்கை தமிழர்களுக்கு விதிக்கப்பட்ட துரோகம். குடியுரிமை திருத்தச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும்” என்றார்.

08 Sep 2021 10 AM

அதிமுக வெளிநடப்பு!

எடப்பாடி பழனிசாமி - ஓ.பன்னீர்செல்வம்
எடப்பாடி பழனிசாமி - ஓ.பன்னீர்செல்வம்
File Photo

சட்டப்பேரவையில் பேச வாய்ப்பு மறுக்கப்பட்டதாக அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்துள்ளனர். கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் செயல்படுத்திய திட்டங்களை திமுக அரசு முடக்கிவைத்திருப்பதாகவும், அது குறித்து சட்டப்பேரவையில் பேச அனுமதி கேட்ட நிலையில், அனுமதி மறுக்கப்பட்டதாகவும் கூறி அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

08 Sep 2021 9 AM

கவிஞர் புலமைப்பித்தன் காலமானார்!

புலமைப்பித்தன்
புலமைப்பித்தன்

பிரபல கவிஞரும், அதிமுக முன்னாள் அவைத் தலைவருமான கவிஞர் புலமைப்பித்தன் கடந்த சில நாள்களாக உடல்நலக் குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். இந்தநிலையில், இன்று காலை மருத்துவமனையில் அவரின் உயிர் பிரிந்தது. அவருக்கு வயது 86. எம்.ஜி.ஆர் நடித்த பல்வேறு படங்களுக்குப் பாடல்கள் எழுதியிருக்கிறார் புலமைப்பித்தன்.

08 Sep 2021 9 AM

கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை!

தமிழ்நாட்டில் தற்போது 9 -ம் வகுப்பு முதல் 12 -ம் வகுப்பு வரை பள்ளிகள் செயல்பட்டுவருகின்றன. பள்ளிகளில் ரேண்டம் முறையில் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் கொரோனா பரிசோதனை நடத்துவதில் சிலருக்குத் தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இந்தநிலையில் மாணவர்களுக்கு ஏற்படும் தொற்று பாதிப்புகள் குறித்து தமிழக தலைமைச் செயலாளர் இறையன்பு, மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தவிருக்கிறார்.

முதல்வர்  ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்

அதோடு, கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதல்வர் ஸ்டாலின் அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை நடத்தவிருக்கிறார். மகாராஷ்டிராவில் மூன்றாவது அலை குறித்த பேச்சுகள் தொடங்கியிருக்கும் சூழலில், தமிழகத்தில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து இன்றைய கூட்டத்தில் ஆலோசிக்கப்படும்.

08 Sep 2021 9 AM

இந்திய குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக பேரவையில் தனித் தீர்மானம்?!

தமிழக சட்டப்பேரவையில், நடப்பு பட்ஜெட் கூட்டத்தொடரில் துறைவாரியாக மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற்றுவருகிறது. வருகிற 13-ஆம் தேதியுடன் கூட்டத்தொடர் முடிவடையும் நிலையில், இன்று காலை பிற்படுத்தப்பட்டோர், ஆதிதிராவிடர் நலத்துறை மானியக் கோரிக்கை மீது விவாதம் நடைபெறுகிறது. மாலை 5 மணிக்கு அவை மீண்டும் கூடி, சட்டம், போக்குவரத்து, தகவல் தொழில்நுட்பவியல்துறை ஆகியவற்றின் மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெறவிருக்கிறது.

தமிழகச் சட்டப்பேரவை
தமிழகச் சட்டப்பேரவை

இதற்கிடையே, இந்திய குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக பேரவையில் இன்று தனித் தீர்மானம் கொண்டுவரப்படவிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு