Published:Updated:

Tamil News Today: `பெகாசஸ் விவகாரம்... என்.எஸ்.ஓ நிறுவனத்துடன் எந்த வர்த்தகமும் நடைபெறவில்லை!’ - மத்திய அரசு விளக்கம்

09-08-2021 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!

09 Aug 2021 4 PM

`பெகாசஸ் நிறுவனத்துடன் எந்த வர்த்தகமும் நடைபெறவில்லை!’ - மத்திய அரசு 

நாடாளுமன்றத்தில் நடப்பு கூட்டத்தொடரில் தொடர்ந்து புயலை கிளப்பி வரும் விவகாரம் பெகாசஸ் மென்பொருள் மூலம் முக்கிய தலைவர்கள், பத்திரிகையாளர்கள் உளவு பார்க்கப்பட்டதாக எழுந்த விவகாரம். இந்த விவகாரத்துக்கு விளக்கம் அளிக்க கோரி கடந்த இருவாரமாக இரு அவைகளையும் எதிர்க்கட்சிகள் முடக்கி வருகின்றன. இந்த விவகாரத்தில் தொடர்ந்து மெளனமாக இருந்த நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்திருக்கிறது மத்திய அரசு.

நாடாளுமன்றம்
நாடாளுமன்றம்

மத்திய பாதுகாப்புத்துறை அளித்திருக்கும் விளக்கத்தில், ``பெகாசஸ் பென்பொருளை செயல்படுத்தும் என்.எஸ்.ஓ நிறுவனத்துடன் எந்த வர்த்தகமும் நடைபெறவில்லை” என எழுத்துப்பூர்வமாக தெரிவித்திருக்கிறது.

09 Aug 2021 12 PM

தமிழகத்தின் கடன் சுமை ரூ. 5,70,189 கோடி!

வெள்ளை அறிக்கையை வெளியிட்ட தமிழ்நாடு மாநில நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், ``தமிழகத்தின் கடன் சுமை 5,70,189 கோடியாக அதிகரித்திருக்கிறது” என்றார்.

09 Aug 2021 11 AM

வெளியானது வெள்ளை அறிக்கை!

தமிழ்நாடு மாநில நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தற்போது மாநில நிதி நிலை குறித்த வெள்ளை அறிக்கையை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றுவரும் செய்தியாளர்கள் சந்திப்பில் வெளியிட்டு, பேசிவருகிறார். அவர், ``முதல்வர் ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி இன்று இந்த வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது. மற்ற மாநிலங்களில் வெளியான வெள்ளை அறிக்கைகளும் ஆய்வுசெய்யப்பட்டன.

Tamil News Today: `பெகாசஸ் விவகாரம்... என்.எஸ்.ஓ நிறுவனத்துடன் எந்த வர்த்தகமும் நடைபெறவில்லை!’ - மத்திய அரசு விளக்கம்

தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்டிருக்கும் வாக்குறுதிகளை நிறைவேற்றும் கடைமைக்காகவெ வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. கடன்களின் நிலை, வருமானம் செலவினம் ஆகியவை எவ்வாறு மாறியுள்ளன என்பது குறித்து அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறோம். மாநிலத்தில் வளர்ச்சி, வேலைவாய்ப்பு எப்படியிருக்கிறது என்பது குறித்தும் இதில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் அரசுக்கு வரவேண்டிய வருமானம் பல மடங்கு சரிந்துவிட்டது” என்றார்.

Tamil News Today: `பெகாசஸ் விவகாரம்... என்.எஸ்.ஓ நிறுவனத்துடன் எந்த வர்த்தகமும் நடைபெறவில்லை!’ - மத்திய அரசு விளக்கம்

தொடர்ந்து பேசியவர், ``கடந்த ஐந்து ஆண்டுகளில் எந்த மாநிலத்திலும் இந்த அளவுக்கு வருவாய்ப் பற்றாக்குறை இல்லை. வருமானம் சரிந்திருப்பதை ரிசர்வ் வங்கியும் குறிப்பிட்டிருக்கிறது. கொரோனா தொற்றுக்கு முன்பே தமிழகத்தில் வருவாய் சரிந்துவிட்டது. 2011-16 அதிமுக ஆட்சிக்காலத்தில், வருவாய்ப் பற்றாக்குறை ரூ.17,000 கோடி ஆக இருந்தது. 2016-2021-ல் அதிமுக ஆட்சியின் வருவாய்ப் பற்றாக்குறை ரூ. 1.5 லட்சம் கோடியாக உள்ளது. மாநிலத்தில் கடனைத் திருப்பிச் செலுத்தும் திறன் குறைந்ததால், வட்டியும் அதிகரித்திருக்கிறது. தற்போதைய நிலையில் தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்தின் தலையிலும் ரூ. 2,63,976 கடன் உள்ளது” என்றார்.

09 Aug 2021 10 AM

`ராஜேந்திர பாலாஜி பா.ஜ.க-வில் இணைய மாட்டார்!’ - எடப்பாடி பழனிசாமி

ஆவின் முறைகேடு, சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணை என முன்னாள் அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு நாலா பக்கமும் நெருக்கடிகள் அதிகரித்துக்கொண்டிருக்கும் நிலையில், அவரின் திடீர் டெல்லி விஜயம் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அவர் இன்று பா.ஜ.க-வில் இணையவிருப்பதாக நேற்று முதல் தகவல் வெளியானது. இந்தநிலையில், இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, ``முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தொடர்ந்து அதிமுக-வில்தான் இருக்கிறார். அவர் நிச்சயம் கட்சி மாற மாட்டார். அவரிடம் பேசியிருக்கிறேன். திட்டமிட்டு ராஜேந்திர பாலாஜி மீது அவதூறு பரப்பப்பட்டுவருகிறது. அவர் சொந்த வேலையாகத்தான் டெல்லி சென்றிருக்கிறார்” என்றார்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

தொடர்ந்து பேசியவர், ``ஒவ்வோர் ஆண்டும் தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்டில் வரவு செலவு தெரிவிக்கப்படும். 2011-ம் ஆண்டில் அதிமுக ஆட்சிக்கு வந்தபோது ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமாகக் கடன் இருந்தது. அனைத்து மாநில அரசாங்கமும் கடன் வாங்கித்தான் இயங்கிவருகின்றன. கடன் சுமை அதிகரித்தபோதும் அதிமுக ஆட்சியில் மின் கட்டணம் உயர்த்தப்படவில்லை” என்றார்.

மேலும், ``திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று கூறினர். நீட் தேர்வை ரத்து செய்ய இதுவரை என்ன தீர்வு காணப்பட்டுள்ளது?’’ எனக் கேள்வி எழுப்பினார்.

09 Aug 2021 8 AM

இன்று வெளியாகிறது நிதிநிலை தொடர்பான வெள்ளை அறிக்கை!

தமிழ்நாட்டில் கடந்த 10 ஆண்டுக்காலமாக அதிமுக தலைமையிலான ஆட்சி நடைபெற்றுவந்த நிலையில் 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி வெற்றிபெற்று ஆட்சி அமைத்தது. ஸ்டாலின் முதல்வராக பதவியேற்ற பின்னர் நடைபெற்ற முதலாவது சட்டப்பேரவைக் கூட்டத்தில் ஆளுநர் உரையில் தமிழ்நாட்டின் நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டது. மாநில நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனும் தொடர்ந்து இதைப் பல்வேறு செய்தியாளர் சந்திப்புகளில் தெரிவித்துவந்தார். இது தொடர்பாக துறை அதிகாரிகளுடன் தொடர் ஆய்வுக் கூட்டங்கள் நடத்தப்பட்டு அறிக்கை தயாரிக்கும் பணிகளும் நடைபெற்றுவந்தன.

பழனிவேல் தியாகராஜன்
பழனிவேல் தியாகராஜன்

இந்தநிலையில், இன்று காலை 11:30 மணி அளவில் மாநில நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் வெள்ளை அறிக்கையை வெளியிடுகிறார். மாநிலத்தில் கடன் சுமை, வரவு செலவு கணக்குகள், கடந்த ஆட்சியில் ஏற்பட்ட வருவாய் இழப்புகள் முதலியவை இதில் இடம்பெறும் எனக் கூறப்படுகிறது. கடைசியாக 2001-02 நிதி ஆண்டில் அப்போதைய நிதியமைச்சர் பொன்னையன், அதற்கு முந்தைய திமுக ஆட்சியில் நடைபெற்ற வரவு செலவு தொடர்பான வெள்ளை அறிக்கையை வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 20 ஆண்டுகள் கழித்து தற்போது மாநிலத்தில் நிதி நிலை குறித்த வெள்ளை அறிக்கை வெளியாகவிருப்பது தமிழக அரசியல் களத்தில் மிகுந்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு