Published:Updated:

Tamil News Today: `மக்கள் அத்தியாவசியமற்ற நடமாட்டத்தைத் தவிர்க்க வேண்டும் - தமிழக ஆளுநர் வேண்டுகோள்!'

09-11-2021 | இன்றைய மழை நிலவரம் மற்றும் முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!

09 Nov 2021 6 PM

`மக்கள் அத்தியாவசியமற்ற நடமாட்டத்தைத் தவிர்க்க வேண்டும் - தமிழக ஆளுநர் வேண்டுகோள்!'

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் அடுத்த சில நாள்களுக்குக் கனமழை மற்றும் அதி கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருக்கிறது. இந்த நிலையில், வானிலை ஆய்வு மையத்தின் முன்னறிவிப்பைத் தொடர்ந்து, தமிழக மக்கள் அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அத்தியாவசியமற்ற நடமாட்டத்தைத் தவிர்க்க வேண்டும் என்றும், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

ஆளுநர் ஆர்.என்.ரவி
ஆளுநர் ஆர்.என்.ரவி

மேலும், கனமழை நேரத்தில் மக்கள் தேவையற்ற நடமாட்டத்தைத் தவிர்த்து, அதன் மூலமாக நிகழும் விரும்பத்தகாத சம்பவங்களைத் தவிர்க்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.

09 Nov 2021 1 PM

புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி... தமிழகத்துக்கு ரெட் அலர்ட்!

இன்று இரவு புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, வரும் 11-ம் தேதி அதிகாலை தமிழகத்தை நெருங்கும் எனக் கணிக்கப்பட்டிருப்பதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காரணமாக, வரும் 10-ம் தேதி, அதாவது நாளை, கடலூர், பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களுக்கும் புதுச்சேரிக்கும் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அதே நாளில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை, திருவண்ணாமலை மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டிருக்கிறது.

கனமழை
கனமழை

அதே 11-ம் தேதி கடலூர், விழுப்புரம், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரிக்கு ரெட் அலர்ட்டும், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, வேலூர், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்கள் மற்றும் காரைக்காலுக்கு ஆரஞ்சு அலர்ட்டும் விடுக்கப்பட்டிருக்கிறது.

09 Nov 2021 11 AM

இன்று இரவு உருவாகிறது புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி!

இன்று இரவு புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, வரும் 11-ம் தேதி அதிகாலை தமிழகத்தை நெருங்கும் எனக் கணிக்கப்பட்டிருப்பதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. இதற்கிடையே சென்னையில் மீட்புப் பணியில் ஈடுபட அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்புப் படையைச் சேர்ந்த மூன்று குழுக்கள் விரைந்திருக்கின்றன. மீட்புப் பணிக்கு தேவையான அதிநவீன கருவிகளுடன் மூன்று குழுவினரும் புறப்பட்டிருப்பதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

மழை
மழை

புதுச்சேரி, கடலூர் பகுதிகளிலும் கனமழை பெய்துவருகிறது. புதுச்சேரி கடற்கரைப் பகுதிகளில், கடல் சீற்றத்துடன் காணப்படுவதால், கடற்கரைகள் பொதுமக்கள் பார்வைக்குத் தடை விதிக்கப்பட்டு மூடப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

09 Nov 2021 11 AM

ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட எழில் நகர் பகுதியில் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

09 Nov 2021 11 AM

கனமழை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு சார்பில் நிவாரணப் பொருள்கள் வழங்கப்படுகின்றன. #Chennai #Rain

இடம்: பெரம்பூர், சென்னை.

09 Nov 2021 7 AM

மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு!

தமிழகத்தில் பருவமழை தீவிரமடைந்திருக்கிறது. சென்னையில் சாலைகளில் தேங்கி நிற்கும் தண்ணீரை அகற்றும் பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுவருகிறார்கள். தமிழகத்தில் 17 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மழை காரணமாக விடுமுறை அளிக்கப்பட்டிருக்கிறது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், மதுரை, சிவகங்கை, கடலூர், நெல்லை, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டிருக்கிறது.

கனமழை
கனமழை

சேலம் மாவட்டத்திலுள்ள மேட்டூர் அணையிலிருந்து இன்று காலை தண்ணீர் திறக்கப்பட்டது. காலை 5 மணிக்கு மேட்டூர் அணையிலிருந்து விநாடிக்கு 5,000 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது. பின்னர், அது 10,000 கனஅடி வீதமாகவும், 6 மணிக்கு 15,000 கனஅடியாகவும் அதிகரிக்கப்பட்டது. தற்போது விநாடிக்கு 20,000 கனஅடியாக நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டிருக்கிறது. இதனால், காவிரிக் கரையோரம் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு