Published:Updated:

Tamil News Today: தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் ஜனவரி 31-ம் தேதி வரை நீட்டிப்பு!

ஊரடங்கு
Live Update
ஊரடங்கு

10-01-2022 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!

10 Jan 2022 8 PM

தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் ஜனவரி 31-ம் தேதி வரை நீட்டிப்பு!

தமிழகத்தில் அமலில் இருக்கும் கொரோனா கட்டுப்பாடுகளை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டிருக்கிறது. நேற்றைய தினம் (ஞாயிற்றுக்கிழமை) தமிழகத்தில் முழு ஊரடங்கு அமலில் இருந்தது. இந்த நிலையில், அடுத்த (ஞாயிற்றுக்கிழமை) 16-ம் தேதியும் முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என்று அரசு தெரிவித்திருக்கிறது.

ஊரடங்கு...
ஊரடங்கு...

முழு ஊரடங்கு காலத்தில் ஏற்கெனவே நடைமுறையில் இருக்கும் கட்டுப்பாடுகள் தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும், பொங்கல் பண்டிகைக்காக வெளியூர் செல்வோர் நலன் கருதி பொது பேருந்துகளில் 75 சதவிகித பயணிகள் பயணிக்கவும் அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. ஏற்கெனவே நடைமுறையில் இருக்கும் கொரோனா கட்டுப்பாடுகளை வரும் 31-ம் தேதி வரை நீட்டித்து அரசு உத்தரவிட்டிருக்கிறது. அதேபோல, ஜனவரி 14 முதல் 18-ம் தேதி வரை வழிபாட்டு தலங்களில் பொதுமக்களுக்கு அனுமதியில்லை என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

10 Jan 2022 2 PM

ஜல்லிக்கட்டு; அதிகபட்சம் 150 பார்வையாளர்களுடன் நடத்த தமிழக அரசு அனுமதி!

தமிழகத்தில் கொரோனா பரவல் வேகமெடுக்கத் தொடங்கியிருப்பதால் தமிழக அரசு கொரோனா கட்டுப்பாடுகளை கடுமையாக்கி வருகிறது. அந்த வகையில், தமிழகத்தில் அதிகபட்சமாக 150 பார்வையாளர்களுடன் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த தமிழக அரசு அனுமதி அளித்திருக்கிறது.

அதேபோல, மாடுபிடி வீரர்களுக்கும், காளைகளை அழைத்துவருபவர்களுக்கும் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கிறது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
10 Jan 2022 12 PM

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தமிழகத்தில் பல்கலைக்கழகத் தேர்வுகள் ஒத்திவைப்பு! - அமைச்சர் பொன்முடி தகவல்

தமிழகத்தில் கொரோனா மற்றும் அதன் புதுவகை திரிபான ஒமைக்ரானின் பரவல் அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது. அதன் காரணமாக, தமிழக அரசு இரவு நேர ஊரடங்கு, வார இறுதி நாளில் முழு ஊரடங்கு, கொரோனா கட்டுப்பாடுகளை அதிகரிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது.

உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி
உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி

இந்த நிலையில், தமிழகத்தில் பல்கலைக்கழகத் தேர்வுகள் காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்திருக்கிறார். எழுத்துத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டாலும், செய்முறைத் தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் என்று அவர் தெரிவித்திருக்கிறார். மேலும், தமிழத்தில் கொரோனா பரவல் பாதிப்பு குறைந்த பின்னர் செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

10 Jan 2022 9 AM

கடும் பனிப்பொழிவிலும் பாதுகாப்புப் பணி!

ஜம்மு காஷ்மீரில் சில நாள்களாகக் கடும் பனிப்பொழிவு இருந்துவருகிறது. அடுத்த சில நள்களுக்கு இது மேலும் அதிகரிக்கும் எனக் கூறப்படுகிறது. கடும் பனிப்பொழிவிலும் எல்லையில் 17,000 அடி உயரத்தில் இந்திய வீரர்கள் எல்லைப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுவருகின்றனர். இது பற்றிய வீடியோவை மத்திய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

10 Jan 2022 9 AM

பிரேசில் படகு விபத்து... 10 பேர் பலி!

பிரேசில் நாட்டில் பாறை பிளந்து ஏரியில் விழுந்ததில் படகில் பயணித்த 10 சுற்றுலாப்பயணிகள் உயிரிழந்தனர். பிரேசில் நாட்டில், பர்னாஸ் ஏரி அமைந்துள்ளது. உயரமான மலைகளுக்கு இடையே அமைந்துள்ள பிரபலமான சுற்றுலாத்தலம் இது. பயணிகள் படகில் பயணம் செய்து இதன் அழகை ரசிப்பார்கள்.

இந்த நிலையில் பாறை ஒன்று பிளந்து விழுந்ததில் இரண்டு படகுகள் நீரில் மூழ்கின. தற்போது வரை இந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். 20 பேரைக் காணவில்லை எனக் கூறுகிறார்கள்.

10 Jan 2022 8 AM

ஊரடங்கு கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்படுமா?!

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. அதைக் கட்டுப்படுத்த ஞாயிற்றுக்கிழமை முழுமுடக்கம், இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன. இச்சூழலில் தலைமைச் செயலகத்தில் நடைபெறும் ஆலோசனையில், அதிகரித்துவரும் கொரோனா, ஒமைக்ரான் பரவலைக் கட்டுப்படுத்த மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் என்னென்ன என்பது குறித்து விவாதிக்கப்படவிருக்கிறது. ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட ஊரடங்கு கட்டுப்பாடுகள் இன்றுடன் நிறைவடைவதால், முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் எனத் தெரிகிறது.

ஊரடங்கு
ஊரடங்கு

மதியம் 12 மணிக்கு நடக்கும் இந்தக் கூட்டத்தில், தொற்று பாதிப்பு அதிகம் இருக்கும் மாவட்டங்களில் கூடுதல் கட்டுப்பாடுகள் அறிவிப்பது குறித்தும் மருத்துவ வல்லுநர்களுடன் ஆலோசிக்கிறார் முதல்வர் ஸ்டாலின். இந்தக் கூட்டத்தில் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், தலைமைச் செயலாளர் இறையன்பு உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொள்ளவிருக்கின்றனர்.

இதற்கிடையே, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, மாநில சுகாதார மற்றும் மருத்துவத்துறை அமைச்சர்களுடன் கொரோனா நிலவரம் குறித்து ஆலோசிக்கவிருக்கிறார்.

10 Jan 2022 8 AM

இன்று முதல் பூஸ்டர் டோஸ்கள்..!

முன்களப் பணியாளர்கள் மற்றும் இணை நோய் உள்ள 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இன்று முதல் நாடு முழுக்க பூஸ்டர் டோஸ்கள் (3-வது டோஸ்) வழங்கப்படுகின்றன. நீங்களோ அல்லது உங்களைச் சார்ந்தவர்களோ இந்தப் பிரிவில் வந்தால், இன்று முதல் பூஸ்டர் டோஸ் எடுத்துக்கொள்ளலாம்.

கொரோனா தடுப்பூசி
கொரோனா தடுப்பூசி

இன்றைய தேதிப்படி, தமிழகத்தில் சுமார் 35 லட்சம் பேர் இந்த பூஸ்டர் டோஸ்கள் பெறத் தகுதியுடையவர்கள். ஆனால், இவர்களில் சுமார் 4 லட்சம் பேரே, இரண்டாவது டோஸ் எடுத்து 39 வாரங்களை நிறைவு செய்திருப்பதால், அவர்கள் மட்டுமே இன்று பூஸ்டர்கள் பெற முடியும். அதாவது, 14 ஏப்ரல், 2021-க்கு முன்பு இரண்டு டோஸையும் எடுத்துக்கொண்டிருக்க வேண்டும். தமிழகத்தில் இந்தத் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கிவைக்கிறார்.