Published:Updated:

Tamil News Today: `தமிழ்நாடு வரவேற்கிறது' ; `தமிழ்நாடு வாழ்த்தி வழியனுப்புகிறது’ - ஆளுநர்களுக்குத் தலைவர்கள் வாழ்த்து

பன்வாரிலால் புரோஹித் - ஆர்.என்.ரவி
பன்வாரிலால் புரோஹித் - ஆர்.என்.ரவி

10-09-2021 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!

10 Sep 2021 8 AM

புதிய ஆளுநர்... தமிழக தலைவர்கள் வாழ்த்து!

நாகாலாந்து ஆளுநராக இருந்த ஆர்.என்.ரவியை தமிழக ஆளுநராக நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அறிவித்திருக்கிறார். கேரள கேடர் ஐ.பி.எஸ் அதிகாரியான ரவி, இந்திய உளவுத்துறையான ஐ.பி சிறப்பு இயக்குநராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழக ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோஹித், பஞ்சாப் மாநில ஆளுநராகக் கூடுதல் பொறுப்பு வகித்துவந்தார். இந்தநிலையில் அவர் பஞ்சாப் ஆளுநராக நியமனம் செய்யப்பட்டிருக்கி்றார்.

ஆளுநர் ஆர்.என்.ரவி
ஆளுநர் ஆர்.என்.ரவி

தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின், `தமிழ்நாட்டின் ஆளுநராக நியமிக்கப்பட்டிருக்கும் மாண்புமிகு ஆர்.என்.ரவி அவர்களுக்கு எனது வணக்கமும் வாழ்த்தும்! தங்களது வருகை தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும் வளத்துக்கும் ஊக்கமளிப்பதாக இருக்கட்டும்! தங்களை தமிழ்நாடு வரவேற்கிறது!’ என ட்வீட் செய்திருக்கிறார்.

முதல்வர்  ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்

மேலும், `பஞ்சாப் மாநில ஆளுநராகப் பொறுப்பேற்கவிருக்கும் மாண்புமிகு பன்வாரிலால் புரோஹித் அவர்களை அன்புடனும் மரியாதையுடனும் வழியனுப்பிவைக்கிறோம்! தனிப்பட்ட முறையில் என்மீது அன்புடன் பழகியவர் அவர். இனிமையான நட்பு உங்களுடையது. தமிழ்நாடு தங்களை வாழ்த்தி வழியனுப்புகிறது!’ என தமிழக ஆளுநராகச் செயல்பட்டுவந்த பன்வாரிலால் புரோஹித்துக்கு வாழ்த்து செய்தியும் தெரிவித்திருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.

எடப்பாடி பழனிசாமி, பன்வாரிலால்
எடப்பாடி பழனிசாமி, பன்வாரிலால்

தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, `கேரளாவில் சிறந்த காவல்துறை தலைமை அதிகாரியாகவும், நாகலாந்து மாநில ஆளுநராகவும் சிறப்பாகப் பணியாற்றி, தற்போது தமிழ்நாட்டின் புதிய ஆளுநராகப் பொறுப்பேற்கவுள்ள பீகாரைச் சேர்ந்த ஓய்வுபெற்ற IPS அதிகாரியான மாண்புமிகு ஆர்.என்.ரவி அவர்களின் பணி சிறக்க வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்’ என்றவர், `தமிழ்நாட்டின் ஆளுநராக, தமிழகத்தின் வளர்ச்சிக்கு சிறப்பான முறையில் பணியாற்றி, தற்போது பஞ்சாப் மாநிலத்தின் ஆளுநராகப் பொறுப்பேற்கவுள்ள மாண்புமிகு பன்வாரிலால் புரோஹித் அவர்களுக்கு என் நன்றிகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்’ எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

அடுத்த கட்டுரைக்கு