Published:Updated:

Tamil News Today: `தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி!'

10-11-2021 | இன்றைய மழை நிலவரம் மற்றும் முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!

10 Nov 2021 9 PM

தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி!

வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியானது, தாழ்வு மண்டலமாக வலுவடைந்திருப்பதாக சென்னை வானிலை ஆராய்வு மையம் தெரிவித்திருக்கிறது. சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு இன்றும், நாளையும் அதிகனமழைக்கான 'ரெட் அலெர்ட்' எச்சரிக்கை விடப்பட்டிருக்கிறது.

காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்.
காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்.

இந்த நிலையில், சென்னையிலிருந்து 430 கிலோமீட்டர் தொலைவிலும், புதுவையிலிருந்து 420 கிலோமீட்டர் தொலைவிலும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டிருப்பதாகவும், ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா - காரைக்கால் இடையே நாளை கரையை கடக்கும் என்றும், சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

10 Nov 2021 8 PM

சென்னை வால்டாக்ஸ் சாலையில் கனமழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண பொருள்கள் வழங்கப்பட்டது!

10 Nov 2021 8 PM

`கனமழையால் கலங்கும் விவசாயிகள்!' - திருச்சி மழை பாதிப்பு நிலவரம்!

தென்கிழக்கு வங்கக் கடலில் உருவாகியிருக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்,நாளை மாலை கடலூர் அருகே கரையைக் கடக்கவிருக்கிறது. இந்த காற்றழுத்த தாழ்வு நிலையின் தாக்கம் காரணமாக டெல்டா மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. பல மாவட்டங்களுக்கு அதிகனமழைக்கான 'ரெட் அலெர்ட்' எச்சரிக்கையும் விடப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில், திருச்சியில் கடந்த 3 நாள்களாக மிதமான மற்றும் கனமழை பெய்து வருகிறது. இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. திருச்சியில் நேற்று மட்டும் 2 சென்டிமீட்டருக்கும் அதிகமாக மழைப் பதிவாகியிருக்கிறது. மழையின் தாக்கம் அதிகரிக்கும் பட்சத்தில் திருச்சி மாவட்டத்தில் பயிரிடப்பட்டிருக்கும் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி வீணாகும் அபாயம் ஏற்பட்டிருப்பதாகவும், ஏற்கெனவே, மாவட்டத்தில் சிறி, புலிவலம், கொடியாலம்,குழுமணி போன்ற பகுதிகளில் வாழை, நெற்பயிர்கள் நீரில் மூழ்கி விட்டதாகவும் வேதனை தெரிவித்தனர்.

10 Nov 2021 8 PM

`சென்னை உட்பட 13 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!´ - வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்தில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், கன்னியாகுமரி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளிலும் மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

10 Nov 2021 6 PM

``பொதுமக்கள் அவசியமின்றி வெளியே வர வேண்டாம்!”  - வருவாய்த்துறை அமைச்சர்

வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், ``மாமல்லபுரம் - ஸ்ரீஹரிகோட்டா இடையே காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் நாளை கரையக் கடக்கும். காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் கரையைக் கடக்கும்போது சென்னையில் அதிக மழை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்னையிலும், அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களிலும் அதிக மழை இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை மழை
சென்னை மழை
வி.ஸ்ரீனிவாசுலு

சென்னையில் மீட்புப் பணிக்காக தயார்நிலையில் மூன்று பேரிடர் மீட்புப் படைகள் உள்ளன. மழை குறைந்த பிறகு பயிர்ச் சேதம் குறித்து முழுமையாகக் கணக்கெடுப்பு நடத்தப்படும். இன்று இரவிலிருந்து நாளை வரை பொதுமக்கள் அவசியமின்றி வெளியே வர வேண்டாம். நீர்நிலைகளின் அருகில் நின்று செல்ஃபி எடுப்பதோ, ஆற்றைக் கடப்பதோ கூடாது” எனக் கூறியிருக்கிறார். வீட்டில் ஆதார் கார்டு, ரேஷன் கார்டு, கல்விச் சான்றிதழ் போன்ற ஆவணங்களை பத்திரமாக வைத்துக்கொள்ள வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

10 Nov 2021 3 PM

கனமழை எதிரொலி - சென்னையில் எட்டு விமானங்கள் ரத்து!

சென்னையில் இன்றும் நாளையும் அதிகனமழை பெய்யக்கூடும் என்பதால் வானிலை ஆய்வு மையம் சென்னைக்கு இரண்டு நாள்களுக்கு 'ரெட் அலர்ட்' விடுத்திருக்கிறது. காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் தற்போது வலுவடைந்திருப்பதால், சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்துவருகிறது. இந்த நிலையில், சென்னையில் கனமழை காரணமாக விமான சேவை ரத்து செய்யப்பட்டிருக்கிறது.

விமான சேவை
விமான சேவை

மதுரை, திருச்சி, மும்பை, ஷார்ஜா ஆகிய பகுதிகளிலிருந்து சென்னைக்கு வரும் விமானங்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. அதேபோல, சென்னையிலிருந்தும் மேற்குறிப்பிடப்பட்டிருக்கும் பகுதிகளுக்கு விமான சேவை மோசமான வானிலை காரணமாக ரத்து செய்யப்பட்டிருக்கிறது.

10 Nov 2021 1 PM

`சென்னைக்கு ரெட் அலர்ட்... இன்றும் நாளையும் அதிகனமழைக்கு வாய்ப்பு' - வானிலை ஆய்வு மையம்

சென்னையில் இன்றும் நாளையும் அதிகனமழைக்கு வாய்ப்பிருப்பதால் 'ரெட் அலர்ட்' விடுக்கப்பட்டிருக்கிறது. முன்னதாக இன்று மட்டுமே சென்னைக்கு அதிகனமழை எச்சரிக்கைவிடப்பட்டிருந்த நிலையில், தற்போது நாளையும் அதிகனமழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

பாலச்சந்திரன்
பாலச்சந்திரன்
வி.ஸ்ரீனிவாசுலு

வலுவடைந்திருக்கும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், நாளை மாலை கடலூர் அருகே கரையைக் கடப்பதால், அதன் எதிரொலியாக சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களுக்கு அதிகனமழை எச்சரிக்கைவிடப்பட்டிருக்கிறது.

10 Nov 2021 10 AM

புதுச்சேரியில் கனமழை காரணமாக வீதிகளில் ஆறுபோல் ஓடும் வெள்ளத்தில் நீந்திச் செல்லும் வாகனங்கள்!

- ஜெ.முருகன், வீடியோ - அ.குரூஸ்தனம்.

10 Nov 2021 10 AM

வெள்ளத்தில் தத்தளிக்கும் விழுப்புரம் புதிய பேருந்து நிலையம்!

நேற்று முன்தினம், விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் தேங்கிய நீரை அகற்றுவதற்குக் கால்வாய்களை மீட்டெடுக்கும் பணி மாவட்ட நிர்வாகம் சார்பில் மேற்கொள்ளப்பட்டபோதும், அந்தப் பணி முழுமை பெறாததால் தண்ணீர் வெளியேற வழியின்றி மினி கடல்போல் காட்சியளிக்கிறது. இதனால் பயணிகள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர்.

வீடியோ தே.சிலம்பரசன்

10 Nov 2021 10 AM

நவம்பர் 13-ம் தேதி வங்கக் கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி!

காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி
காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி
Source: Windy.com

வங்கக் கடலில் நேற்று உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, வலுவடைந்து ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக மாறியிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கும் நிலையில், வரும் நவம்பர் 13-ம் தேதி வங்கக் கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. தெற்கு அந்தமான், அதை ஒட்டியுள்ள பகுதியில் இந்தப் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

10 Nov 2021 7 AM

ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி

வங்கக் கடலில் நேற்று உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, வலுவடைந்து ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக மாறியிருக்கிறது. இந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

சென்னை கனமழை
சென்னை கனமழை

வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காரணமாக, தமிழகத்தில் பரவலாகத் தொடர் கனமழை பெய்துவருகிறது. இதன் காரணமாக இன்று மாநிலத்தில் 27 மாவட்டங்களிலுள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சேலம், விழுப்புரம், கரூர், கள்ளக்குறிச்சி, சென்னை, திருவள்ளூர், பெரம்பலூர், மதுரை, அரியலூர், விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை, திண்டுக்கல், தேனி, நாமக்கல், விழுப்புரம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் ராமநாதபுரம், திருச்சி, திருவண்ணாமலை, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில், பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது. நாகை, தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை வரை விடுமுறை அறிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு