Published:Updated:

Tamil News Today: குஜராத் முதல்வர் விஜய் ரூபானி திடீர் ராஜினாமா! - டெல்லி உத்தரவு காரணமா?

விஜய் ரூபானி
விஜய் ரூபானி

11-09-2021 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!

11 Sep 2021 3 PM

குஜராத் முதல்வர் விஜய் ரூபானி ராஜினாமா!

விஜய் ரூபானி
விஜய் ரூபானி

குஜராத் முதல்வர் விஜய் ரூபானி தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். ஆளுநரிடம் தனது ராஜினாமா கடிதத்தை வழங்கியிருக்கும் விஜய் ரூபானி, `அடுத்த முதல்வர் தேர்ந்தெடுக்கப்படும் வரையில் நான் முதல்வராக நீடிப்பேன்’ என்றும் கூறியிருக்கிறார். அடுத்த வருடம் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் என்ன காரணத்துக்காக ராஜினாமா செய்தார் என்ற தகவல் வெளியாகவில்லை. எனினும் டெல்லியின் உத்தரவின்பேரிலேயே அவர் ராஜினாமா செய்திருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

11 Sep 2021 2 PM

ஓபிஎஸ் மனைவி மறைவு - மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்நேரில்ஆறுதல்!

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மனைவி விஜயலட்சுமி செப்டம்பர் 1 -ம் தேதி உடல்நலக்குறைவால் காலமானார். அவரது மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி உள்ளிட்ட பல்வேறு கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்ததுடன் ஓ.பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.

இதையடுத்து பெரியகுளத்தில் நடந்த இறுதிச் சடங்கு நிகழ்ச்சியில் திமுக அமைச்சர்கள், அதிமுக-வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள், எம்எல்ஏ-க்கள் பங்கேற்றனர். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஏற்கெனவே ஓபிஎஸ் வீட்டுக்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்திருந்தார்.

மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்
மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்
ஈ.ஜெ நந்த குமார்

இந்தநிலையில் தமிழக பாஜக முன்னாள் தலைவரும், மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை இணை அமைச்சருமான எல்.முருகன் பெரியகுளம் தென்கரை தெற்கு அக்ரஹாரத்திலுள்ள ஓ.பன்னீர்செல்வம் வீட்டுக்கு நேரில் சென்றார். அங்கு ஓ.பன்னீர்செல்வம் மனைவி விஜயலட்சுமியின் உருவப்படத்துக்கு மலர் அஞ்சலி செலுத்தினார். அவருடைய மகன் தேனி எம்.பி ஓ.பி.ரவீந்திரநாத் குமாருக்கும் குடும்பத்தினருக்கும் ஆறுதல் தெரிவித்தார்.

- கார்த்திக்

11 Sep 2021 12 PM

பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் தமிழுக்கான சுப்பிரமணிய பாரதி அமர்வு! - பிரதமர் மோடி

இன்று மகாகவி பாரதியாரின் நினைவு நூற்றாண்டை ஒட்டி, பிரதமர் மோடி, `பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் பாரதியார் பெயரில் தமிழ் இருக்கை அமைக்கப்படும்’ என்ற அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். ``உலகின் மிகப் பழைமையான மொழியான தமிழின் தாயகம் என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது. இன்று, சுப்பிரமணிய பாரதியின் 100-வது நினைவுநாளில் அவருக்கு மரியாதை செலுத்தும்விதமாக, காசியின் பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் தமிழுக்கான சுப்பிரமணிய பாரதி அமர்வை நிறுவுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது’ எனத் தெரிவித்திருக்கிறார் மோடி.

11 Sep 2021 11 AM

`சேகர் பாபு அல்ல; செயல் பாபு என்றுதான் அழைக்க வேண்டும்’ - முதல்வர்

ஸ்டாலின்
ஸ்டாலின்

சென்னையில், அர்ச்சகர்கள், பட்டாச்சார்யார்கள், பூசாரிகள் என 12,959 பேருக்கு மாத ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார். பின்னர் பேசிய ஸ்டாலின், ``அமைச்சர் சேகர் பாபு சிறப்பாகப் பணியாற்றிவருகிறார். அவரை `சேகர் பாபு’ என்று அழைப்பதைவிட, `செயல் பாபு’ என்றுதான் அழைக்க வேண்டும். அதற்கு இந்த நிகழ்ச்சியே சான்று. சட்டமன்றத்தில் ஒரு திட்டத்தை அறிவித்து, ஒரு வாரம்தான் ஆகிறது. சட்டமன்றம்கூட இன்னும் நிறைவடையவில்லை. ஆனால், அதற்குள் அந்தத் திட்டத்தை நிறைவேற்றிவிட்டார். எள் என்று சொல்வதற்கு முன்பே எண்ணெயாக மாறக்கூடியவர்” எனப் பாராட்டிப் பேசினார்.

11 Sep 2021 11 AM

ஸ்டாலின், திமுக அமைச்சர்கள் மகாகவி பாரதியாரின் உருவப்படத்துக்கு மரியாதை!

மகாகவி பாரதியாரின் நினைவுநாளான இன்று முதலமைச்சர் ஸ்டாலின், திமுக அமைச்சர்கள் அவரின் உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். முன்னதாக, ``பாரதியாரின் நினைவுநாளான செப்டம்பர் 11-ம் நாள், அரசின் சார்பில் இனி ஆண்டுதோறும் 'மகாகவி நாளாக' கடைப்பிடிக்கப்படும். இதையொட்டி, பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு மாநில அளவில் கவிதைப் போட்டி நடத்தி 'பாரதி இளங்கவிஞர் விருது' மாணவன் ஒருவருக்கும், மாணவி ஒருவருக்கும் தலா ஒரு லட்சம் ரூபாய் பரிசுத்தொகையுடன் வழங்கப்படும்” என முதல்வர் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த கட்டுரைக்கு