Published:Updated:

Tamil News Today: ``தமிழகத்தில் இயல்புநிலை முழுமையாகத் திரும்ப அனைவரும் சேர்ந்து உழைப்போம்!'' - முதல்வர் ஸ்டாலின்

11-11-2021 | இன்றைய மழை நிலவரங்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!

11 Nov 2021 8 PM

`சென்னை அருகே கரையைக் கடந்தது காற்றழுத்த தாழ்வு மண்டலம்!' - வானிலை ஆய்வு மையம்

வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னை அருகே கரையைக் கடந்து விட்டதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. தமிழகத்தில் இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் காரணமாகச் சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் அதிகாலை முதலே கனமழை பெய்து வந்தது.

வானிலை ஆய்வு மையம்
வானிலை ஆய்வு மையம்

இன்று மாலை சென்னையிலிருந்து 30 கி.மீ. தொலைவில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது, கரையைக் கடக்கத் தொடங்கியது. இந்த நிலையில், தாழ்வு மண்டலம் கரையைக் கடந்த போது, 45 முதல் 55 கி.மீ வேகத்தில் காற்று வீசியதாகவும், மேற்கு வடமேற்கு திசையிலிருந்து நகர்ந்து, ஆழ்ந்த காற்றழுத்த பகுதியாக நாளை வலுவிழக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

11 Nov 2021 7 PM

தமிழகத்தில் இயல்புநிலை முழுமையாகத் திரும்ப அனைவரும் சேர்ந்து உழைப்போம்! - முதல்வர் ஸ்டாலின்

காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் காரணமாகத் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு என் பல்வேறு மாவட்டங்கள் வெள்ளக்காடாகக் காட்சியளிக்கின்றன. அரசு இயந்திரங்கள் வெள்ள பாதிப்பு ஏற்பட்டிருக்கும் பகுதிகளில் முழு வீச்சில் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றன. சென்னையில் முதல்வர் ஸ்டாலின் தொடர்ச்சியாக வெள்ளப்பாதிப்பு பகுதிகளில் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், வெள்ள பாதிப்பு நேரத்தில் தன்னலம் பாராமல் மக்களின் துயர் துடைக்க களப்பணியாற்றிக் கொண்டிருப்பவர்களுக்கு முதல்வர் நன்றி தெரிவித்திருக்கிறார்.

முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை
முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை

இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ``தமிழகம் இயல்பு நிலைக்குத் திரும்ப நாம் அனைவரும் சேர்ந்து உழைப்போம். இந்த நேரத்தில் மக்கள் துயர் துடைக்க களப்பணியாற்றிக் கொண்டிருக்கும், காவல்துறை, மின்துறை, தூய்மை பணியாளர்கள் உள்ளிட்டோருக்குத் தலை வணங்குகிறேன். தன்னலம் பாராத உங்களின் சேவை, தியாகத்தினால் மக்களின் துயர் துடைக்கப்படுகிறது. உங்கள் தியாகம் விலை மதிப்பில்லாதது, உங்கள் சேவை மகத்தானது, உங்கள் உள்ளத்துக்கு நன்றி" என முதல்வர் குறிப்பிட்டிருக்கிறார்.

11 Nov 2021 5 PM

காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடக்கத் தொடங்கியது!

சென்னையிலிருந்து 30 கி.மீ. தொலைவில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடக்கத் தொடங்கியுள்ளதாக சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் தகவல் தெரிவித்திருக்கிறது. இதனால் சென்னை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் இனி அதி கனமழைக்கான வாய்ப்பு குறைவு எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

11 Nov 2021 5 PM

பூண்டி ஏரியிலிருந்து கொசஸ்தலை ஆற்றில் நீர் திறப்பு!

பூண்டி ஏரியிலிருந்து கொசஸ்தலை ஆற்றில் வினாடிக்கு 9,000 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. நீர் வரத்து 11,000 கன அடியாக உள்ள நிலையில் தற்போது நீர் வெளியேற்றமும் 9,000 கன அடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

பூண்டி ஏரி
பூண்டி ஏரி

கொட்டித்தீர்க்கும் கனமழையால் தமிழகத்தில் 1.45 லட்சம் ஏக்கர் சம்பா பயிர் சேதமடைந்துள்ளது. மொத்தமாக சுமார் 44 லட்சம் ஏக்கரில் சம்பா பயிர் சாகுபடிசெய்யப்பட்ட நிலையில், கனமழை காரணமாக அதில் 1.45 லட்சம் ஏக்கர் சேதமடைந்திருக்கிறது.

11 Nov 2021 2 PM

இயல்பை விட 77% அதிக மழை!

சென்னையில் இயல்பை விட 77% அதிக கனமழை பெய்திருக்கிறது. கடந்த 1-ம் தேதி முதல் தற்போது வரை 42 செ.மீ. என்ற இயல்பான அளவுக்கு பதில் 74 செ.மீ. கனமழை பதிவாகியிருக்கிறது.

தமிழகம் மற்றும் புதுவையில் இயல்பை விட 54% அதிக கனமழை பெய்திருக்கிறது. கடந்த 1-ம் தேதி முதல் தற்போது வரை 26 செ.மீ. என்ற இயல்பான அளவுக்கு பதில் 40 செ.மீ. கனமழை பதிவாகியிருக்கிறது. இந்த அளவு இயல்பை விட 54% அதிகமானது.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் தீவிர கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருக்கிறது. அதேபோல, செங்கல்பட்டு, விழுப்புரம், வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டங்களிலும் இன்று கனமழை பெய்யும்.

நாளை முதல் தொடர்ந்து இரண்டு நாட்களுக்கு கோவை, நீலகிரி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்வதற்கான வாய்ப்பிருக்கிறது.

தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் சூராவளி காற்று மணிக்கு 40 கி.மீ முதல் 50 கி.மீ வரை வீசும். எனவே மீனவர்கள் இன்றும் நாளையும் கடலுக்குச் செல்ல வேண்டாம்.

- பாலச்சந்திரன், தென்மண்டல தலைவர், சென்னை வானிலை ஆய்வு மையம்

11 Nov 2021 1 PM

வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

வடதமிழக கடலோர பகுதிகளில் சூறாவளிக் காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்குச் செல்லவேண்டாம் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சென்னையிலிருந்து தென்கிழக்கு திசையில் 130 கி.மீ. தொலைவில் தாழ்வு மண்டலம் மையம் கொண்டிருக்கிறது. அதேபோல, புதுச்சேரியிலிருந்து வடகிழக்கு திசையில் 150 கி.மீ. தொலைவில் தாழ்வு மண்டலம் மையம் கொண்டிருக்கிறது.

Tamil News Today: ``தமிழகத்தில் இயல்புநிலை முழுமையாகத் திரும்ப அனைவரும் சேர்ந்து உழைப்போம்!'' - முதல்வர் ஸ்டாலின்

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் தீவிர கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருக்கிறது. அதேபோல, செங்கல்பட்டு, விழுப்புரம், வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டங்களிலும் இன்று கனமழை பெய்யும் எனவும் கூறப்பட்டிருக்கிறது.

Tamil News Today: ``தமிழகத்தில் இயல்புநிலை முழுமையாகத் திரும்ப அனைவரும் சேர்ந்து உழைப்போம்!'' - முதல்வர் ஸ்டாலின்

அரக்கோணம் அருகே சிறுமணியில் உள்ள கல்லூறு தரைப்பாலம் வெள்ளத்தில் மூழ்கியது. இதனால், அரக்கோணத்திலிருந்து நெமிலி வழியாக வேலூர் செல்லும் பாதை துண்டிக்கப்பட்டு, போக்குவரத்து பாதிக்கப்பட்டிருக்கிறது.

நாளை முதல் தொடர்ந்து இரண்டு நாட்களுக்குக் கோவை, நீலகிரி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்வதற்கான வாய்ப்பிருப்பதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

11 Nov 2021 8 AM

சென்னை அருகே இன்று மாலை கரையைக் கடக்கும்!

வங்கக் கடலில் நகர்ந்துவரும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் இன்று மாலை சென்னை அருகே கரையைக் கடக்கும் என இந்திய வானிலை மையம் தெரிவித்திருக்கிறது.

கனமழை
கனமழை

காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் சென்னையிலிருந்து 170 கிலோமீட்டர் தொலைவில் மையம்கொண்டிருக்கிறது. 5 கி.மீ வேகத்தில் காற்று வீசும் என்றும் கூறப்பட்டிருக்கிறது.

11 Nov 2021 10 AM

சென்னை காசிமேடு N4 கடற்கரையில் பலத்த காற்றுடன் அலைகள் சீறிப் பாய்கின்றன!

11 Nov 2021 9 AM

மண்ணிவாக்கம் பகுதியிலுள்ள ஏரிகள் நிரம்பி அடையாறு கால்வாயில் செல்லும் வெள்ள நீர்.

சென்னை ராஜகீழ்பாக்கம் ஏரி நிரம்பி தெருக்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும் காட்சி!

11 Nov 2021 7 AM

சென்னையில் 11 சுரங்கப்பாதைகள், 7 சாலைகள் மூடல்!

மேட்லி சுரங்கப்பாதை - தி.நகர்
மேட்லி சுரங்கப்பாதை - தி.நகர்

வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தீவிரமடைந்துள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட வட மாவட்டங்களில் நேற்று மாலை தொடங்கிய கனமழை தற்போது வரை நீடித்துவருகிறது. வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் இன்று மாலை கரையைக் கடக்கும் என கணிக்கப்பட்டிருக்கிறது. அதுவரையிலும் வட மாவட்டங்களில் அதிகனமழை இருக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருக்கிறது.

போக்குவரத்து காவல்துறை அறிவிப்பு
போக்குவரத்து காவல்துறை அறிவிப்பு

சென்னை புழுதிவாக்கம் பகுதியில் சூழ்ந்துள்ள மழை நீர்

இதற்டையே வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு, சென்னை மாநகரின் போக்குவரத்தில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அதன்படி மழைநீர் தேங்கி நிற்பதன் காரணமாக சென்னையில் 11 சுரங்கப்பாதைகள் மூடப்பட்டுள்ளன. வியாசர்பாடி சுரங்கப்பாதை, கணேசபுரம் சுரங்கப்பாதை, அஜாக்ஸ் சுரங்கப்பாதை, கொங்கு ரெட்டி சுரங்கப்பாதை, மேட்லி சுரங்கப்பாதை, துரைசாமி சுரங்கப்பாதை, பழவந்தாங்கல் சுரங்கப்பாதை, தாம்பரம் சுரங்கப்பாதை, அரங்கநாதன் சுரங்கப்பாதை, வில்லிவாக்கம் சுரங்கப்பாதை, காக்கன் சுரங்கப்பாதை என 11 சுரங்கப்பாதைகள் மழைநீர் தேங்கி நிற்பதன் காரணமாகவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும் மூடப்பட்டிருக்கின்றன.

போக்குவரத்து காவல்துறை அறிவிப்பு
போக்குவரத்து காவல்துறை அறிவிப்பு

அதே போன்று மழைநீர் தேங்கியிருப்பதால் சென்னையில் ஏழு சாலைகள் போக்குவரத்துக்குத் தடை செய்யப்பட்டுள்ளன. அதன்படி கே.கே.நகர் - ராஜமன்னார் சாலை, மயிலாப்பூர் - டாக்டர் சிவசாமி சாலை, ஈ.வி.ஆர்.சாலை - காந்தி இர்வின் சந்திப்பு முதல் டாக்டர் நாயர் பாலம் வரை, செம்பியம் - ஜவகர் நகர் சாலை, பெரவள்ளூர் - 70 அடி சாலை, புளியந்தோப்பு - டாக்டர் அம்பேத்கர் சாலை, வியாசர்பாடி - முல்லை நகர் பாலம் என ஏழு சாலைகளில் மழைநீர் தேங்கியிருப்பதால் போக்குவரத்துக்குத் தடைசெய்யப்பட்டிருப்பதாகப் போக்குவரத்து காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். சென்னை நகரின் பல்வேறு பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும், மரங்கள் விழுவதன் காரணமாகவும் மின்சாரம் துண்டிக்கப்பட்டிருக்கிறது.

11 Nov 2021 7 AM

சென்னையில் மிக கனமழை தொடரும்!

Tamil News Today: ``தமிழகத்தில் இயல்புநிலை முழுமையாகத் திரும்ப அனைவரும் சேர்ந்து உழைப்போம்!'' - முதல்வர் ஸ்டாலின்

சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய பகுதிகளில் இரவு தொடங்கிய மழை தொடர்ந்து பெய்துவருகிறது. இந்த நிலையில் இந்த நான்கு மாவட்டங்களிலும் அடுத்த மூன்று மணி நேரத்துக்கு (காலை 7 முதல் 10 மணி வரை) மிக கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

நேற்று இரவு முதல் கனமழை பெய்துவரும் நிலையில், செம்பரம்பக்கம் ஏரியின் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

11 Nov 2021 6 AM

சென்னையில் வெளுத்து வாங்கிய கனமழை!

வங்கக் கடலில் நேற்று முன்தினம் உருவான குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாகவும், பின்னர் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகவும் வலுவடைந்தது. இந்தக் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், இன்று மாலை மாமல்லபுரம், ஸ்ரீஹரிகோட்டா இடையே கரையை க்கடக்கும் என கணிக்கபட்டிருக்கிறது. இதன் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளுர், கடலூர் உள்ளிட்ட வட தமிழக மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் அதி கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது

மழை
மழை

சென்னையில் இரண்டு தினங்களுக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், நேற்று இரவு தொடங்கிய மழை தொடர்ச்சியாகப் பெய்துவருகிறது. இதன் காரணமாக சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெள்ளம் தேங்கி நிற்கிறது. ஒருசில இடங்களில் மரங்களும் விழுந்திருக்கின்றன. இன்று மாலை வரை கனமழை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளதால், தேங்கி நிற்கும் தண்ணீரின் அளவு மேலும் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் பெய்துவரும் தொடர் அதி கனமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருக்கிறது. இன்று பொதுமக்கள் தேவையின்றி வெளியே வர வேண்டாம் என அரசு சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு