Published:Updated:

Tamil News Today: கனமழை: கன்னியாகுமரியில் பல்வேறு பகுதிகளைச் சூழ்ந்தது மழை வெள்ளம்!

12-11-2021 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!

12 Nov 2021 3 PM

கனமழை: கன்னியாகுமரியில் பல்வேறு பகுதிகளைச் சூழ்ந்தது மழை வெள்ளம்!

கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்த கனமழையால் தோவாளை தாலுகா, நாகர்கோவில் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள வீடுகள், சாலைகள், பள்ளிகள், கோயில்கள், வயல்வெளிகள், விவசாய நிலங்களில் மழை வெள்ளம் சூழ்ந்திருக்கிறது.

பழையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருப்பதால் பழையாறு சாணல்களில் மழை வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

12 Nov 2021 1 PM

புதுச்சேரி: `மழையால் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு ரூ.25,000 நிவாரணம்' - அரசு அறிவிப்பு!

புதுச்சேரியில், `மழையால் சேதமடைந்த வீடுகளுக்கு தலா ரூ.25000, பாதிப்படைந்த விளைநிலங்களுக்கு ஒரு ஹெக்டேருக்கு ரூ.20,000, மழையால் பாதிக்கப்பட்ட கட்டுமானத் தொழிலாளர், மீனவர்களின் குடும்ப அட்டைக்கு தலா ரூ.5,000 நிவாரணம் வழங்கப்படும்’ என புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவித்திருக்கிறார்.

12 Nov 2021 1 PM

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கமல்ஹாசன் நிவாரண உதவி!

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், சென்னையில் மழை வெள்ள பாதிப்பு பகுதிகளைப் பார்வையிட்டு, நிவாரண உதவி வழங்கிவருகிறார். சென்னை வேளச்சேரியை அடுத்த தரமணி பகுதியில் வெள்ள பாதிப்புகளை ஆய்வுசெய்த கமல்ஹாசன், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருள்களை வழங்கினார்.

வேளச்சேரியைத் தொடர்ந்து, தி.நகர் வழியாக சென்னை சென்ட்ரல், சத்தியமூர்த்தி பாலம் வரை கமல்ஹாசன் பார்வையிடவிருப்பதாக மக்கள் நீதி மய்யம் தெரிவித்திருக்கிறது.

12 Nov 2021 12 PM

மழை வெள்ள பாதிப்பு பகுதிகளில் சசிகலா நிவாரண உதவிகள் வழங்கிவருகிறார்!

காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தின் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நேற்றைய தினம் கனமழை கொட்டித்தீர்த்தது. அதனால், சென்னையில் பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாகிவிட்டன. இந்த நிலையில், அரசியல் தலைவர்கள் மழை வெள்ள பாதிப்புகள் ஏற்பட்டிருக்கும் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு, நிவாரண உதவிகள் வழங்கிவருகிறார்கள். அந்த வகையில், சசிகலா தற்போது சென்னை தியாகராய நகர், கிரியப்பா சாலையில் வெள்ள பாதிப்புகளைப் பார்வையிட்டு, நிவாரண உதவிகளை வழங்கிவருகிறார்.

தி.நகரைத் தொடர்ந்து, கோட்டூர்புரம், சைதாப்பேட்டை, அசோக்நகர், விருகம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும் பார்வையிட்டு நிவாரண உதவிகளை அவர் வழங்கவிருப்பதாகக் கூறப்படுகிறது.

12 Nov 2021 9 AM

தருமபுரி மாவட்டத்தில் ரயில் தடம் புரண்டு விபத்து!

தருமபுரி
தருமபுரி

தருமபுரி மாவட்டம், தொப்பூர் அருகே கேரளாவிலிருந்து கர்நாடகா செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டது. சிவடி ரயில் நிலையத்துக்கும் முட்டாம்பட்டி ரயில் நிலையத்துக்கும் இடையே விபத்து நடந்திருக்கிறது. கேரள மாநிலம் கண்ணூரிலிருந்து கர்நாடகா மாநிலம், பெங்களூருக்குச் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலின் மூன்றாம் வகுப்பு ஏசி கோச் மற்றும் இரண்டாம் படுக்கை வசதி கொண்ட ஐந்து கோச்சுகள் இன்று அதிகாலை 3:50 மணிக்கு தடம்புரண்டன. விபத்தில் உயிர்ச்சேதம் இல்லை. லேசான காயம்பட்டவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர். பெங்களூரு கோட்ட ரயில்வே அதிகாரிகளும், சேலம் கோட்ட ரயில்வே அதிகாரிகளும் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

- ஆர்.பி.

12 Nov 2021 8 AM

மழை, மழை பாதிப்பு காரணமாக விடுமுறை!

மழை வெள்ளம்
மழை வெள்ளம்

தமிழகத்தில் பருவமழை பரவலாகப் பெய்துவருகிறது. வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக கடந்த இரு நாள்களாக சென்னை உட்பட தமிழகம் முழுவதும் பரவலாக கனமழை பெய்தது. இந்த நிலையில் மழை காரணமாகவும், மழை பாதிப்பு காரணமாகவும் தருமபுரி (1-8-ம் வகுப்பு வரை மட்டும்), கன்னியாகுமரி, சென்னை, கடலூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம் உள்ளிட 16 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

12 Nov 2021 8 AM

மரம் விழுந்து குன்னூரில் அரசுப்பள்ளி ஆசிரியை உயிரிழப்பு!

மகேஷ்வரி
மகேஷ்வரி

நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகிலுள்ள வண்டிச்சோலை தொடக்கப்பள்ளி ஆசிரியை மகேஷ்வரி, நேற்று மாலை பள்ளியை முடித்துவிட்டு வீடு திரும்புகையில் தலையில் மரம் விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். நீலகிரியில் இடி, மின்னலுடன் அதிக மழைப்பொழிவு இருக்கும் என எச்சரிக்கப்பட்டிருப்பதால் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு