Published:Updated:

Tamil News Today: உருவானது புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி! - தொடரும் கனமழை... கன்னியாகுமரிக்கு விரைகிறார் அமைச்சர்!

13-11-2021 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!

13 Nov 2021 6 PM

கனமழையால் துண்டிக்கப்பட்ட குமரி-நெல்லை தேசிய நெடுஞ்சாலை.!

கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் கன்னியாகுமரி-திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் மழை வெள்ளம் சூழ்ந்ததால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. மழை வெள்ளத்தில் சிக்கியவர்களை கயிறு கட்டி மீட்கும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

படங்கள்: ரா.ராம்குமார்.

13 Nov 2021 12 PM

தொடரும் கனமழை..!

தமிழகத்தில் கன்னியாகுமரி, நெல்லை மாவட்டங்களில் கடந்த மூன்று தினங்களாகத் தொடர்ந்து கனமழை பெய்துவருகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கிறது. ஊருக்குள் தண்ணீர் புகுந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவுக்கு பாதிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம், கன்னியாகுமரி, நெல்லை மாவட்டங்களில் இன்றும் நாளையும் மிக கனமழை தொடரும் என அறிவித்துள்ளது. கன்னியாகுமரியில் வெள்ள பாதிப்பு பெரிய அளவில் ஏற்பட்டிருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் கன்னியாகுமரி மாவட்ட வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்வதற்காக இன்று கன்னியாகுமரி விரைகிறார்

குமரி
குமரி

வங்கக் கடலில், தெற்கு அந்தமான் பகுதியில் புதிய குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

13 Nov 2021 11 AM

கடலூர் மாவட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்ததையடுத்து கடந்த சில தினங்களாக கனமழை பெய்துவந்தது. டெல்டா மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆய்வு மேற்கொண்டுவருகிறார். கடலூர் மாவட்டத்தில், குறிஞ்சிப்பாடி தொகுதி, அரங்கமங்கலத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கிய பின்னர் ஆடூர் அகரம் கிராமத்தில் மூழ்கிய நெற்பயிர்களைப் பார்வையிட்டு விவசாயிகளுக்கு ஆறுதல் கூறினார்.

கடலூர் மாவட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு
கடலூர் மாவட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு

வடகிழக்குப் பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் தமிழகமெங்கும் தொடர் மழை பெய்துவருகிறது. கடந்த வாரம் உருவான காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக தொடர் மழையால் டெல்டா உள்ளிட்ட கடலோர மாவட்டங்களும், சென்னை பெருநகரமும் வெள்ளத்தில் தத்தளித்தன. ஆண்டு சராசரி மழைப்பொழிவைவிட தற்போது பெய்த மழை கூடுதலாகவே இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. மழை பாதிப்பின் காரணமாக மாவட்டம் முழுவதும் சுமார் 2,000 ஏக்கர் நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

கடலூர் மாவட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு
கடலூர் மாவட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு

சென்னையில் கடந்த ஆறு நாள்களாகத் தொடர்ந்து வெள்ள பாதிப்பு பகுதிகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்த தமிழக முதல்வர் ஸ்டாலின், இன்று டெல்டா பகுதிளில் ஆய்வு மேற்கொண்டிருக்கிறார். புதுச்சேரியிலிருந்து கடலூர் மாவட்டத்துக்கு இன்று காலை 7:30 மணிக்குப் புறப்பட்ட முதல்வர் கடலூர், முதுநகர் குள்ளஞ்சாவடி வழியாக குறிஞ்சிப்பாடி அருகே உள்ள அரங்க மங்கலம் மாருதி நகர் சென்றடைந்தார். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சுந்தர் குடியிருப்புப் பகுதிகளைப் பார்வையிட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு அங்கு நிவாரண உதவிகள் வழங்கினார். இதைத் தொடர்ந்து ஆடூர் அகரம் கிராமத்தில் வெள்ளப்பெருக்கு காரணமாக மூழ்கிய விளைநிலங்களைப் பார்வையிட்டு விவசாயிகளுக்கு ஆறுதல் கூறினார். பின்னர் கொத்தவாச்சேரி, சாத்தப்பாடி, புவனகிரி, கீரப்பாளையம் வழியாக சிதம்பரத்துக்குச் சென்று காலை உணவைச் சாப்பிட்டார்.

கடலூர் மாவட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு
கடலூர் மாவட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு

முன்னதாக புதுச்சேரியிலிருந்து புறப்பட்டவுடன் வழிநெடுகிலும் முதல்வர் ஸ்டாலினிடம் கடலூர், குறிஞ்சிப்பாடி, புவனகிரி, சிதம்பரம் தொகுதி மக்கள் சந்தித்து மனுக்களை வழங்கினார்கள். பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்றுக்கொண்ட முதல்வர் உரிய நடவடிக்கை மேற்கொள்வதாகத் தெரிவித்தார்.

கடலூர் மாவட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு
கடலூர் மாவட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு

நிவாரண உதவி 

கடலூர் மாவட்டத்தில் வெள்ள பாதிப்பு குறித்து ஆய்வுப் பணி மேற்கொள்ள வந்த தமிழக முதல்வர் ஸ்டாலின் வெள்ளத்தால் பலியான கால்நடைகள், இடிந்த வீடுகள் உள்ளிட்டவற்றுக்கு சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு நிவாரண உதவிகள் வழங்கினார். அதன்படி இறந்த பசு மாட்டுக்கு ரூபாய் 30,000, கன்றுக்கு ரூபாய் 16,000, இதே போன்று பகுதி இடிந்து வீடுகளுக்கு ரூபாய் 4,100 என நிவாரண உதவிகளை பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கினார். மேலும் குறிஞ்சிப்பாடி அரங்கம் மங்கலத்தில் 13 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கினார்.

- ஜெ.முருகன்

படங்கள்: குரூஸ்தனம்

13 Nov 2021 10 AM

தமிழகத்துக்கு ரூ.805 கோடி நிதி ஒதுக்கீடு - மத்திய அரசு

நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம்
நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம்

தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளின் சுகாதாரத் திட்டங்களுக்காக மத்திய அரசு ரூபாய் ரூ.805 கோடி ஒதுக்கீடு செய்திருக்கிறது. கர்நாடகா, மேற்கு வங்கம் உள்ளிட்ட 19 மாநிலங்களுக்கு மொத்தம் 8,453.92 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 15=வது நிதிக்குழு பரிந்துரையின்படி நகர்புறம், கிராமப்புறங்களில் சுகாதாரத்தை மேம்படுத்த இந்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது

13 Nov 2021 9 AM

தமிழ்வழியில் படித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை: அரசாணை

முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு நடந்த சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் ஆளுநர் உரையின்போது, ``தமிழ்நாட்டில் தமிழ்வழியில் பயின்றவர்களுக்கும், அரசுப் பள்ளியில் பயின்றவர்களுக்கும் அரசு பதவிகளுக்கான வேலைவாய்ப்பில் முன்னுரிமை கொடுக்கப்படுவதை அரசு உறுதி செய்யும்” என்று அறிவித்திருந்தார்.

ஸ்டாலின்
ஸ்டாலின்

தொடர்ந்து அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், கொரோனா தொற்றால் பெற்றோர் இருவரையும் இழந்த இளைஞர்கள், முதல் தலைமுறைப் பட்டதாரிகள், தமிழக அரசுப் பள்ளிகளில் தமிழ்மொழியில் பயின்ற நபர்களுக்கு அரசுப் பணியிடங்களில் முன்னுரிமை அளிக்கப்படும் என்று அறிவித்தார். இந்த நிலையில் இதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.

13 Nov 2021 8 AM

முல்லைப்பெரியாறு அணை விவகாரம்:தமிழக அரசு பதில் மனு!

முல்லைப்பெரியாறு அணை
முல்லைப்பெரியாறு அணை

முல்லைப்பெரியாறு அணை தொடர்பான வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றுவருகிறது. இதில் முல்லைப்பெரியாறு அணையின் உறுதித்தன்மை குறித்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் புதிய பதில் மனு தாக்கல் செய்துள்ளது. அந்த பதில் மனுவில், ``முல்லைப்பெரியாறு அணையின் உறுதித்தன்மையை அதன் ஆண்டுகளைவைத்து கணக்கிடக் கூடாது. வயதைவைத்து கணக்கிடாமல், அதன் பராமரிப்பு, புதுப்பித்தல் ஆகியவற்றின் அடிப்படையில் அணையின் உறுதித்தன்மையை கணக்கிட வேண்டும். எத்தனை காலம் மழை வெள்ளத்தைத் தாங்கி நிற்கிறதோ, அதுவே அதன் ஆயுள்” என்று தமிழக அரசு கூறியிருக்கிறது.

13 Nov 2021 8 AM

முதல்வரின் டெல்டா ஆய்வு விசிட்!

டெல்டா மாவட்டங்களில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை இன்று ஒரே நாளில் பார்வையிடுகிறார் தமிழக முதல்வர் ஸ்டாலின்.

நேற்று மாலை சென்னையிலிருந்து கிளம்பி இரவு 8:30 மணிக்கு புதுச்சேரி வந்த முதல்வர், திமுக எம்.பி ஜெகத்ரட்சகனுக்குச் சொந்தமான ஹோட்டலில் தங்கினார். இன்று காலை 7:30 மணிக்கு புதுச்சேரியிலிருந்து கிளம்பும் அவர், கடலூர் மாவட்டத்தில் குறிஞ்சிப்பாடி அரங்கமங்கலம் ஊராட்சி மாருதி நகரிலும், ஆடூர் அகரம் பகுதிகளிலும் மழையால் பாதிக்கப்பட்ட இடங்களைப் பார்வையிடுகிறார்.

 முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்

அங்கிருந்து 9 மணிக்கு சிதம்பரம் சென்று, பிறகு மயிலாடுதுறை மாவட்டத்துக்குச் செல்கிறார். அங்கிருக்கும் தரங்கம்பாடி பகுதியில் ஆய்வு செய்கிறார். 11:30-க்கு வேளாங்கண்ணி செல்லும் முதல்வர், நாகை மாவட்டத்தில் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளான கருங்கணியிலும்ம் அருந்தவக்குளத்திலும் ஆய்வு செய்கிறார்.

அங்கிருந்து திருவாரூர் மாவட்டத்துக்குச் செல்லும் அவர் ராயநல்லூரிலும், புழுதிக்குடி கிராமங்களிலும் மழை பாதிப்புகளைப் பார்வையிடுகிறார். தொடர்ந்து மதியம் 2:30 மணிக்கு மன்னார்குடியில் மதிய உணவை முடித்துக்கொண்டு முதல்வர் 3:30 மணிக்குக் கிளம்பி தஞ்சாவூர் மாவட்டத்துக்குச் செல்கிறார். அங்கு பெரிய கோட்டை என்ற பகுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்துவிட்டு இன்று மாலை சென்னை திரும்புகிறார்.

- ஜெ.முருகன்

13 Nov 2021 7 AM

டெல்டா மாவட்டங்களில் முதல்வர் ஸ்டாலின் இன்று ஆய்வு!

தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்த நிலையில், குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக கனமழை பெய்தது. சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களிலும், டெல்டா மாவட்டங்களிலும் கனமழை காரணமாக பாதிப்புகள் ஏற்பட்டன. குறிப்பாக டெல்டா பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த சம்பா பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன.

ஸ்டாலின்
ஸ்டாலின்

இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் இன்று டெல்டா பகுதியில் மழை வெள்ளச் சேதங்களை பார்வையிடுகிறார். கடந்த சில நாள்களாக சென்னையிலும்ம் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களிலும் ஆய்வு மேற்கொண்ட முதல்வர் இன்று டெல்டா மாவட்டத்தில் ஆய்வு மேற்கொள்கிறார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு