Published:Updated:

Tamil News Today: மேக்கேதாட்டு அணை விவகாரம்: நாளை டெல்லி செல்கிறது அனைத்துக் கட்சிக் குழு!

மேக்கேதாட்டு
மேக்கேதாட்டு

14-07-2021 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!

14 Jul 2021 4 PM

மேக்கேதாட்டு அணை விவகாரம்: டெல்லி செல்லும் அனைத்துக் கட்சிக் குழு! 

மேக்கேதாட்டு அணை விவகாரம் தொடர்பாக தமிழகத்தின் அனைத்துக் கட்சிக் குழு நாளை டெல்லிக்குச் செல்கிறது. மேக்கேதாட்டு அணை தொடர்பாக நாளை மதியம் ஒரு மணி அளவில் டெல்லி புறப்பட்டுச் செல்லும் அனைத்துக் கட்சிக் குழு அங்கு பிரதமர் மோடியைச் சந்தித்து மேக்கேதாட்டு அணைகட்ட அனுமதிக்கக் கூடாது என்று வலியுறுத்தவிருக்கிறது. முன்னதாக சென்னையில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தையும் டெல்லி சென்று பிரதமரிடம் வலியுறுத்தவிருக்கிறது.

14 Jul 2021 10 AM

`பெரும்பாலானோர் நீட் தேர்வுக்கு எதிராகக் கருத்து..!’

நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆய்வு செய்ய கடந்த மாதம் 10-ம் தேதி நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து நீட் தேர்வுக்கு எதிராகவும் ஆதரவாகவும் 80,000-க்கும் அதிகமானோர் தங்கள் கருத்துகளைத் தெரிவித்திருந்தார்கள். இந்தக் கருத்துகளை ஆய்வு செய்து, அது தொடர்பான அறிக்கையைத் தயார் செய்து இன்று அந்த அறிக்கை முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வால் அரசுப் பள்ளி மற்றும் ஏழை மாணவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு குறித்து இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்தநிலையில், பெரும்பாலானோர் நீட் தேர்வுக்கு எதிராகத் தங்கள் கருத்துகளைப் பதிவுசெய்திருப்பதாக அறிக்கையைச் சமர்ப்பித்த நீதிபடி ஏ.கே.ராஜன் கருத்து தெரிவித்திருக்கிறார். அறிக்கையைச் சமர்ப்பித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஏ.கே.ராஜன், ``நீட் தேர்வு வேண்டாம் என பெரும்பாலானோர் எங்களிடம் கருத்து தெரிவித்திருக்கிறார்கள் அனைத்துவிதமான கருத்துகளையும் ஆய்வுசெய்து அறிக்கையைச் சமர்ப்பித்திருக்கிறோம்.

நீட்
நீட்

நீட் தேர்வால் என்ன பாதிப்பு என்பது பற்றி 165 பக்க அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. எங்களது தனிப்பட்ட கருத்துகளை நாங்கள் ஆய்வறிக்கையில் முன்வைக்கவில்லை. ஆய்வு திருப்திகரமாக இருந்தது. நீட் தேர்வுக்கு ஆதரவாகவும் எதிராகவும் 86,342 பேர் தங்கள் கருத்துகளைப் பதிவுசெய்திருந்தார்கள். இதில் பல்வேறு அம்சங்களைக் கருத்தில்கொள்ள வேண்டும். இது ஒரு வாக்கெடுப்பு போன்றது கிடையாது. பல்வேறு கருத்துகள் இருந்தன. அனைத்துக் கருத்துகளையும் நாங்கள் ஆய்வறிக்கையில் சமர்ப்பித்திருக்கிறோம்” என்றார்.

14 Jul 2021 10 AM

இந்தியாவில் கொரோனா நிலவரம்!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில், மேலும் புதிதாக 38,792 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது. இந்தியாவில், மொத்த கொரோனா பாதிப்பு 3,09,46,074 என்ற எண்ணிக்கையை எட்டியிருக்கிறது.

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 624. இந்தியாவில் இதுவரை கொரோனா பாதிப்பு காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 4,11,408 -ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா
கொரோனா

இந்தியாவில் இதுவரை கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு வந்தவர்களின் எண்ணிக்கை 3,01,04,720-ஆக இருக்கிறது. தற்போது மருத்துவமனைகளில் 4,29,946 பேர் சிகிச்சையில் இருக்கிறார்கள். ஒரே நாளில் 41,000 பேர் பாதிப்பிலிருந்து மீண்டு வீடு திரும்பியிருக்கிறார்கள்.

இந்தியாவில் இதுவரை 38,76,97,935 டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது. இதில் நேற்று மட்டும் 37,14,441 டோஸ் தடுப்பூசி போடப்பட்டது.

அடுத்த கட்டுரைக்கு