Published:Updated:

Tamil News Today: `கன்னியாகுமரியில் அதி கனமழைக்கு வாய்ப்பு!' - சென்னை வானிலை ஆய்வு மையம்

14-11-2021 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!

14 Nov 2021 1 PM

தொடர் மழை எதிரொலி: `தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு!'

14 Nov 2021 1 PM

கன்னியாகுமரி: வெள்ள பாதிப்பு இடங்களில் மீட்புப் பணி!

14 Nov 2021 1 PM

`கன்னியாகுமரியில் அதி கனமழைக்கு வாய்ப்பு!' - சென்னை வானிலை ஆய்வு மையம்

காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று சில இடங்களில் அதி கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. அதேபோல, நீலகிரி, திண்டுக்கல், தேனி, திருப்பூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட 19 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் தெரிவித்திருக்கிறது. காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக தமிழகத்தில் அடுத்த 5 நாள்களுக்கு கனமழை நீடிக்கும் என்று எச்சரிக்கை விடப்பட்டிருக்கிறது.

தெற்கு அந்தமான் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியானது, மத்திய அந்தமான் பகுதியில் நிலைகொண்டிருப்பதாகவும், அது தாமதமாக வரும் 17-ம் தேதி தாழ்வு மண்டலமாக நிலைமாறும் என்றும் கணிக்கப்பட்டிருக்கிறது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக குமரிக்கடல், மன்னார் வளைகுடா, தெற்கு வந்தமான, மத்திய வங்கக்கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியிருக்கிறது.

14 Nov 2021 9 AM

`தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் நவம்பர் 30-ம் தேதி வரை நீட்டிப்பு' - முதல்வர் ஸ்டாலின்

முதல்வர்   ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்

தமிழகத்தில் பருவமழை பரவலாக பெய்து வருவதால், டெங்கு நோய் அபாயத்தை கருத்தில் கொண்டு, கொரோனா கட்டுப்பாடுகள் இம்மாதம் (நவம்பர்) 30-ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டிருக்கிறார். நாளை காலை 6 மணியுடன் தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு முடியவிருக்கும் நிலையில், தற்போது 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருக்கிறது.

14 Nov 2021 9 AM

கோவை: `பள்ளி முதல்வர் கைதை தொடர்ந்து, மாணவியின் உடலை வாங்க உறவினர்கள் சம்மதம்!' 

கோவை சின்மயா பள்ளியில் ஆசிரியரின் பாலியல் தொல்லையால் 12-ம் வகுப்பு மாணவி தற்கொலை செய்துகொண்டார். மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் கோவை போலீஸார் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி, பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன் ஆகியோர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்தனர். ஆசிரியர் மிதுன் நேற்று கைது செய்யப்பட்ட நிலையில், தலைமறைவான பள்ளி முதல்வர் மீரா ஜாக்சனை போலீஸார் தேடி வந்தனர்.

மகேஷ் பொய்யாமொழி, செந்தில் பாலாஜி
மகேஷ் பொய்யாமொழி, செந்தில் பாலாஜி

இந்த விவகாரத்தில் தொடர்புடைய அனைவரும் கைது செய்யும் வரை, மாணவியின் உடலை வாங்க மாட்டோம் என அவரின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில், தற்போது பெங்களூருவில் தலைமறைவாக இருந்த முதல்வர் மீரா கைது செய்யப்பட்டிருக்கிறார். அதனால், மாணவியின் உடலை வாங்க அவர் உறவினர்கள் சம்மதம் தெரிவித்திருக்கின்றனர். மாணவியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தத் தமிழக அமைச்சர்கள் மகேஷ் பொய்யாமொழி, செந்தில் பாலாஜி ஆகியோர் அவர் இல்லத்துக்கு தற்போது வந்திருக்கிறார்கள்.

14 Nov 2021 8 AM

முழு கொள்ளளவை எட்டியது மேட்டூர் அணை..!

மேட்டூர் அணை
மேட்டூர் அணை

சேலம் மேட்டூர் அணை, நீர்வரத்து அதிகரிப்பின் காரணமாக அதன் முழு கொள்ளளவை எட்டியிருக்கிறது. அணையின் நீர்வரத்து 25,000 கன அடியாக உயர்ந்ததால், அணை இருப்பு 120 அடியை எட்டியிருக்கிறது. அதன் காரணமாக அணையிலிருந்து உபரிநீர் திறப்பு 24,000 கன அடியாக அதிகரித்திருக்கிறது.

14 Nov 2021 8 AM

கோவை: `மாணவி தற்கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த பள்ளி முதல்வர் கைது!'

கோவை ஆர்.எஸ்.புரம், சின்மயா வித்யாலயா பள்ளியில் 12-ம் வகுப்பு படித்துவந்த மாணவி ஒருவருக்கு, அந்த பள்ளியில் பணியாற்றி வந்த இயற்பியல் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி என்பவர் பாலியல் தொல்லை அளித்ததால், அந்த மாணவி மன உளைச்சலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மாணவியின் தற்கொலை விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் மாணவியின் தற்கொலைக்கு காரணமான ஆசிரியர் மிதுனை போலீஸார் போக்சோ சட்டத்தின் கீழ் நேற்றைய தினம் கைது செய்தனர். இந்த நிலையில், ஆசிரியர் மிதுன் மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்தது தெரிந்தும், அவர் மீது நடவடிக்கை எடுக்காமல் குற்றத்துக்கு துணை போனதாக, சின்மயா பள்ளியின் முதல்வர் மீரா ஜாக்சன் மீதும் போலீஸார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்தனர்.

சின்மயா வித்யாலயா பள்ளி
சின்மயா வித்யாலயா பள்ளி

அதையறிந்த மீரா ஜாக்சன் கோவையிலிருந்து தலைமறைவாகினார். அதனால், அவரை பிடிக்க 2 தனிப்படைகளை அமைத்து கோவை போலீஸார் தேடி வந்தனர். இந்த நிலையில், தனிப்படை போலீஸார் பெங்களூரூவில் தலைமறைவாக இருந்த மீரா ஜாக்சனை தற்போது கைது செய்திருக்கின்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு