Published:Updated:

Tamil News Today: `இந்து சமய அறநிலையத்துறை சார்பில் புதிதாகக் கல்லூரிகள் தொடங்கக் கூடாது!’ - சென்னை உயர் நீதிமன்றம்

15-11-2021 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!

15 Nov 2021 12 PM

`இந்து சமய அறநிலையத்துறை சார்பில் புதிதாகக் கல்லூரிகள் தொடங்கக் கூடாது!’

சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம்

`இந்து சமய அறநிலையத்துறை சார்பில் புதிதாகக் கல்லூரிகள் தொடங்கக் கூடாது’ என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. மேலும் உயர் நீதிமன்றம் தனது உத்தரவில் ஏற்கெனவே தொடங்கிய கல்லூரிகளின் செயல்பாடு வழக்கின் இறுதித் தீர்ப்புக்கு கட்டுப்பட்டது எனவும் தெரிவித்திருக்கிறது. இந்த வழக்கு ஐந்து வாரத்துக்கு ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது.

15 Nov 2021 12 PM

காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியின் நிலை!

அந்தமானில் உருவாகியிருக்கும் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, தீவிர காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக மாறும் என்றாலும், தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்பில்லை என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. மேலும், இது வட தமிழகம் நோக்கி நகரும் வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

15 Nov 2021 8 AM

குமரியில் இன்று முதல்வர் ஆய்வு..!

தமிழ்நாட்டில் பருவமழை தீவிரமடைந்திருக்கிறது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்துவருகிறது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், தஞ்சாவூர், கடலூர், நாகை, மயிலாடுதுறை, கன்னியாகுமரி மாவட்டங்களில் வெள்ளம் ஊருக்குள் புகுந்தது. இதன் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. குறிப்பாக கன்னியாகுமரி மாவட்டத்தில் மழை வெள்ளத்தின் பாதிப்பு அதிக அளவில் இருக்கிறது. பிரதான சாலைகள்கூட வெள்ளத்தால் மூடப்பட்டன.

கன்னியாகுமரி மாவட்ட மழை வெள்ள பாதிப்புகள்
கன்னியாகுமரி மாவட்ட மழை வெள்ள பாதிப்புகள்

குமரியில் தற்போது மழை குறைந்திருந்தாலும், பெரும்பாலான இடங்களில் தற்போதும் வெள்ளம் தேங்கி நிற்கிறது. இந்த நிலையில் குமரி மாவட்ட வெள்ள பாதிப்பைப் பார்வையிடுவதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று குமரி மாவட்டம் வருகிறார். சென்னையிலிருந்து விமானம் மூலம் புறப்படும் முதல்வர், மதுரை விமான நிலையம் வந்து, அங்கிருந்து கார் மூலம் குமரி செல்கிறார், பின்னர் தோவாளைப் பகுதியில் மழை வெள்ளத்தால் சேதமடைந்த பகுதிகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்கிறார். அதைத் தொடர்ந்து பேச்சிப்பாறைப் பகுதிக்குச் சென்று அணை மற்றும் வெள்ள சேதப் பகுதிகளையும், மணவாளக்குறிச்சிப் பகுதியில் வெள்ள சேதப் பகுதிகளையும் பார்வையிடுகிறார். தொடர்ந்து ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வுக் கூட்டத்தில் கலந்துகொள்ளும் முதல்வர் ஸ்டாலின், கார் மூலம் நெல்லைக்குச் செல்கிறார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு