Published:Updated:

Tamil News Today: ``தாலிபன் அரசுடன் நட்புரீதியாக உறவை மேம்படுத்தத் தயார்!” - சீனா

தாலிபன்
தாலிபன்

16-08-2021 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

16 Aug 2021 2 PM

ஆப்கானிஸ்தானை தாலிபன்கள் முழுமையாகக் கட்டுக்குள் கொண்டுவந்திருக்கும் நிலையில், அந்நாட்டிலிருக்கும் வெளிநாட்டினர், பொதுமக்கள் பலர் அங்கிருந்து வெளியேற முயன்றுவருகிறனர். இதன் காரணமாக விமான நிலையத்தில் மக்கள் பெருமளவில் கூடினர்.

இந்தநிலையில், காபூல் விமான நிலையத்தை மூடுவதாக அறிவித்திருக்கிறது தாலிபன். மேலும் அனைத்து வெளிநாடுகளுக்குமான விமான சேவையை ரத்து செய்வதாக அறிவித்தது. இதன் காரணமாக அங்கிருக்கும் இந்தியர்களை மீட்பதில் சிக்கல் எழுந்திருக்கிறது. அங்கு சிக்கியிருக்கும் இந்தியர்களை மீட்க இன்று மதியம் ஆப்கானிஸ்தான் செல்லவிருந்த விமானம், தற்போது செல்ல முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது.

ஆப்கானிஸ்தான்
ஆப்கானிஸ்தான்
Hamed Sarfarazi

ஆப்கானிஸ்தானிலிருக்கும் மக்கள் பெரும் அச்சத்துடன் வாழ்ந்துவரும் நிலையில், `தாலிபன் அரசுடன் நட்புரீதியாக உறவை மேம்படுத்தத் தயார்’ என சீனா தெரிவித்திருக்கிறது. ஏற்கெனவே தாலிபன் அரசை பாகிஸ்தான் அங்கீகரித்திருக்கிறது. தாலிபன்களின் செயல்பாடுகளைப் பொறுத்து அந்த அரசை அங்கீகரிப்பது குறித்து முடிவெடுக்கப்படும் என் ரஷ்யா அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது!

16 Aug 2021 11 AM

`வல்லுநர்குழு அமைக்கப்படும்!’

பெகாசஸ் செயலி
பெகாசஸ் செயலி

நாடு முழுவதும் பெரும் பரபரப்பைக் கிளப்பிய பெகாசஸ் விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையில், ``பெகாசஸ் மென்பொருள் மூலம் உளவு பார்க்கப்பட்டதாக வெளியான தகவலில் உண்மை இல்லை. இது தொடர்பான அனைத்துக் குற்றசாட்டுகளையும் மறுக்கிறோம். ஆதாரமற்றவிதத்தில் வழக்குகள் பதியப்பட்டுள்ளன” என மத்திய அரசு தெரிவித்திருக்கிறது.

மேலும், ``பெகாசஸ் விவகாரம் தொடர்பாக விசாரிக்க வல்லுநர்குழு அமைக்கப்படும்” எனவும் தெரிவித்திருக்கிறது மத்திய அரசு!

16 Aug 2021 10 AM

`பட்ஜெட் உரை மீதான விவாதம்!’

திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் முதன்முறையாக மாநில பட்ஜெடை கடந்த 13-ம் தேதி சட்டப்பேரவையில் காகிதமில்லா பட்ஜெட்டாக நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். தொடர்ந்து சட்டப்பேரவை வரலாற்றில் வேளாண்மை மற்றும் உழவர்நலத்துறைக்கு முதன்முறையாக தனி பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டது.

பட்ஜெட் தாக்கல் செய்யும் பி.டி.ஆர்
பட்ஜெட் தாக்கல் செய்யும் பி.டி.ஆர்

இதற்கிடையே, பட்ஜெட் உரை மீதான விவாதம் நான்கு நாள்களுக்கு சட்டப்பேரவையில் நடைபெறவிருக்கிறது. அதைத் தொடர்ந்து துறை சார்ந்த மானியக் கோரிக்கைகள் மீதான விவாதமும் நடைபெறுகிறது. இந்த நிகழ்வின்போது, மறைந்த முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்கள் மதுசூதனன், திண்டிவனம் ராமமூர்த்தி ஆகியோருக்கு இரங்கல் தெரிவித்து மௌன அஞ்சலி செலுத்தப்படவிருப்பது குறிப்பிடத்தக்கது.

16 Aug 2021 9 AM

`ஆப்கன் போர் முடிந்தது..!’ - தாலிபன்கள்

ஆப்கானிஸ்தானில் கடந்த சில வாரங்களாக நீடித்துவந்த போர் முடிவுக்கு வந்ததாக தாலிபன்கள் அறிவித்திருக்கிறார்கள். ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறுவதாக அறிவித்த நிலையில் தாலிபன்கள், மீண்டும் ஆப்கானிஸ்தான் நகரங்களைக் கைப்பற்றத் தொடங்கினர். நேற்று உச்சகட்டமாக தலைநகர் காபூல் நகரையும் கைப்பற்றினர். இதைத் தொடர்ந்து ஆப்கன் அதிபர் அஷ்ரப் கனி ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறினார்.

ஆப்கானிஸ்தான்
ஆப்கானிஸ்தான்

இந்தநிலையில் ஆப்கானிஸ்தானின் ஆட்சி அதிகாரம் தாலின்பன்கள் வசம் சென்றது. தற்போது ஆப்கன் போர் முடிவுக்கு வந்ததாக தாலிபன்கள் அறிவித்திருக்கிறார்கள். இதற்கிடையே பல்வேறு நாடுகள், அங்கிருந்து வெளியேற விரும்பும் மக்களைத் தாலிபன்கள் தடுக்க கூடாது என்ற கோரிக்கையை வைத்திருக்கின்றன.

16 Aug 2021 9 AM

எல்.முருகன் தலைமையில் `மக்கள் ஆசீர்வாத யாத்திரை’

எல்.முருகன்
எல்.முருகன்

மத்திய அமைச்சரும் முன்னாள் பா.ஜ.க மாநிலத் தலைவருமான எல்.முருகன் தலைமையில் `மக்கள் ஆசீர்வாத யாத்திரை’ கோவையில் இன்று (திங்கள்) தொடங்கவிருக்கிறது. மூன்று நாள்கள் நடக்கும் இந்த யாத்திரை, இன்று கோவையில் தொடங்கி நாளை திருப்பூரிலும், நாளை மறுநாள் சேலம், நாமக்கல் மாவட்டத்திலும் நடைபெறுகிறது. இதில், மத்திய அரசின் நலத்திட்டங்கள் குறித்து மக்களிடம் விளக்கப்படும். இந்த யாத்திரையின் தொடக்கவிழாவில் பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட முக்கிய மாநிலத் தலைவர்கள் கலந்துகொள்ளவிருக்கிறார்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு