
17-01-2022 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான இடஒதுக்கீடு அறிவிப்பு!
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான இடஒதுக்கீடு அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டிருக்கிறது. சென்னை, தாம்பரம் மாநகராட்சிகள் பட்டியலின மகளிர் பிரிவினருக்கும், ஆவடி மாநகராட்சி பட்டியலின (பொது) பிரிவினருக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன.

அதேபோல, கடலூர், திண்டுக்கல், வேலூர், கரூர், சிவகாசி, காஞ்சிபுரம், மதுரை, கோவை மற்றும் ஈரோடு ஆகிய மாநகராட்சிகள் மகளிர் பொதுப் பிரிவினருக்கும் ஒதுக்கப்பட்டிருக்கின்றன.
``எம்.ஜி.ஆர் திட்டங்கள் ஏழைகளின் வாழ்வில் பெரும் மாற்றத்தைக் கொண்டுவந்தன” - பிரதமர் மோடி

தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் பிறந்தநாளான இன்று, பிரதமர் மோடி, ``பாரத ரத்னா எம்.ஜி.ஆரை அவரது பிறந்தநாளில் நினைவுகூர்கிறேன். சமூகநீதி, அதிகாரமளித்தல் ஆகியவற்றில் முதன்மையான சிறந்த தலைவராக அவர் பரவலாகப் போற்றப்படுகிறார். அவரது திட்டங்கள் ஏழைகளின் வாழ்வில் பெரும் மாற்றத்தைக் கொண்டுவந்தன. அவரது திரையுலக பெருந்திறனும் அனைவராலும் போற்றப்படுகிறது!” என ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார்.
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSFollow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
மிதமான மழை தொடரும்!

சென்னையில் இன்று அதிகாலை தொடங்கி பல்வேறு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்துவருகிறது. வடபழனி, கிண்டி, அடையாறு பகுதிகளிலும், புறநகர்ப் பகுதிகளான தாம்பரம், வண்டலூர், அம்பத்தூர் ஆகிய பகுதிகளிலும் மழை பெய்தது. இந்நிலையில், சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், அடுத்த ஓரிரு மணி நேரத்தில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், வேலூர், கடலூர், விழுப்புரம், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.