Published:Updated:

காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்: தரைக்காற்று 50 கி.மீ வேகம்; கடற்காற்று 65 கி.மீ வேகம்!’ - நாளை அதிகாலை கரையைக் கடக்கும்!

18-11-2021 | இன்றைய மழை நிலவரம் மற்றும் முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!

18 Nov 2021 1 PM

நாளை அதிகாலை கரையைக் கடக்கும்!

வங்கக் கடலில் நிலைகொண்டிருக்கும் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் தற்போது கனமழை பெய்துவருகிறது. காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தால் தரைக்காற்று 50 கிலோமீட்டர் வேகத்திலும், கடற்காற்று 65 கிலோமீட்டர் வேகத்திலும் வீசும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புயலாக வலுப் பெறாமல், நாளை அதிகாலை கரையைக் கடக்கும் எனவும், சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் இன்று மாலை முதல் மீண்டும் மழை அதிகரிக்கத் தொடங்கும் எனவும் வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் தெரிவித்திருக்கிறார்.

மழை
மழை

நாளை அதிகாலை காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் கரையைக் கடந்ததும், நாளை பிற்பகலுக்குப் பின்னர் மழை குறைய வாய்ப்புள்ளது எனத் தெரிவித்த வானிலை ஆய்வு மைய இயக்குநர், அரபிக் கடலில் காற்று புதிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி நோக்கி நகர்ந்ததால் நெல்லையில் நேற்று கனமழை பெய்தது என்றார். கடலூர், நாகை, காரைக்கால் துறைமுகங்களில் 3-ம் எண் புயல் எச்சரிக்கைக்கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. நாளை அதிகாலை தாழ்வு மண்டலம் கரையைக் கடக்கவிருப்பதால் எச்சரிக்கைக்கூண்டு ஏற்றப்பட்டிருக்கிறது.

18 Nov 2021 11 AM

காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது!

வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி தற்போது தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. இந்தக் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வட தமிழகம் - தெற்கு ஆந்திரக் கடலோரப் பகுதியில் இன்று இரவு நெருங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னையில் மழை
சென்னையில் மழை
வி.ஸ்ரீனிவாசலு

தற்போது சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட தமிழக மாவட்டங்களில் கனமழை பெய்துவருகிறது. முன்னதாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம் ஆகிய ஆறு மாவட்டங்களுக்கும், புதுச்சேரிக்கும் இன்று ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

18 Nov 2021 10 AM

ஆறு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!

வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி தற்போது வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக மாறியிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. இது, காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மேலும் வலுவடையும் எனவும், அப்போது மழை மேலும் தீவிரமடையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரெட் அலர்ட்  | மழை
ரெட் அலர்ட் | மழை

இந்தநிலையில், இன்று சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம் ஆகிய ஆறு மாவட்டங்களுக்கும், புதுச்சேரிக்கும் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டிருக்கிறது.

18 Nov 2021 10 AM

மயானப் பணியாளர்களை முன்களப் பணியாளர்களாக அறிவித்து தமிழக அரசு அரசாணை!

கொரோனா காலத்தில் பணிசெய்யும் மயானப் பணியாளர்களை முன்களப் பணியாளர்களாக அறிவித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டிருக்கிறது. அங்கீகாரம், சிறப்பு சலுகை கிடைக்கும் வகையில் மயானப் பணியாளர்கள் முன்களப் பணியாளர்களாக அறிவிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

18 Nov 2021 8 AM

வலுப்பெற்றது குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி!

வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி தற்போது வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக மாறியிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 12 மணி நேரத்தில், இந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மேலும் வலுவடையும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெறும்போது மழை தீவிடமடையும் எனவும் கூறப்படுகிறது.

மெரினா கடற்கரை
மெரினா கடற்கரை
மாதிரிப் படம்

தற்போது சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட வட தமிழக மாவட்டங்களில் கனமழை பெய்துவருகிறது. முன்னதாக இந்தக் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி, மண்டலமாக வலுப்பெற வாய்ப்புகள் குறைவு எனக் கூறப்பட்ட நிலையில், அடுத்த 12 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவடையும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது

18 Nov 2021 7 AM

தொடர் கனமழை... தமிழ்நாட்டில் 26 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை!

வங்கக்கடலில் அந்தமான் அருகே உருவான குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி, தற்போது ஆந்திரா மற்றும் வட தமிழகம் இடையே நிலைகொண்டிருக்கிறது. இதன் காரணமாக சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் வட மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டிருந்தது. எனினும் இந்தக் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெறாது எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. இன்று அதிகனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்த நிலையில் சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு முதல் பரவலாக மழை பெய்துவருகிறது.

மழை
மழை

இந்த நிலையில் மழை பாதிப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று தமிழகத்தில் 26 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, திருவாரூர், கடலூர், திண்டுக்கல், தேனி, தருமபுரி, செங்கல்பட்டு, திருவண்ணாமலை, சேலம், நெல்லை, தூத்துக்குடி, திருச்சி, கிருஷ்ணகிரி, சென்னை, திருவள்ளுர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 26 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் மழையின் எதிரொலியாக ஒன்று முதல் ஐந்தாம் வகுப்புகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி, காரைகாலிலும் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு