Published:Updated:

Tamil News Today: தனிப்படைகள் எண்ணிக்கை அதிகரிப்பு... ராஜேந்திர பாலாஜியைக் கைதுசெய்யத் தீவிரம்காட்டும் காவல்துறை!

ராஜேந்திர பாலாஜி
Live Update
ராஜேந்திர பாலாஜி

18-12-2021 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!

18 Dec 2021 10 AM

தனியார் தொழிற்சாலையில் பணியாற்றும் பெண்கள் போராட்டம்!

காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார் சத்திரம் பகுதியில் செல்போன் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலையில் பணியாற்றும் பெண்கள் புதுச்சத்திரம் பகுதியிலுள்ள தனியார் கப்பல் கட்டும் பொறியியல் கல்லூரி வளாகத்திலுள்ள அடுக்கு மாடிக் கட்டடத்தில் விடுதி போன்று தங்கவைக்கப்பட்டுள்ளனர். அங்கு வழங்கப்பட்ட உணவைச் சாப்பிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் வாந்தி, மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலோனோர் சிகிச்சை பெற்று திரும்பிய நிலையில் எட்டுப் பெண்களின் நிலை மட்டும் என்னவென்று தெரியாததால் அங்கு பணிபுரியும் பெண் தொழிலாளர்கள் நேற்று இரவு முதல் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

சம்பவ இடத்துக்கு வந்த மாவட்ட ஆட்சியர் பாதிக்கப்பட்ட பெண்கள் நலமுடன் இருப்பதாக வீடியோ காலில் காண்பித்தார். 10 மணி நேரமாகப் போராட்டம் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது!

ஏ.சூர்யா

மாணவப் பத்திரிக்கையாளர்

18 Dec 2021 8 AM

தனிப்படைகள் அதிகரிப்பு... ராஜேந்திர பாலாஜியைக் கைதுசெய்ய தீவிரம்!

ஆவின் உள்ளிட்ட அரசின் பல்வேறு துறைகளில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூபாய் 3 கோடி வரையில் பணம் பெற்று பணியும் வழங்காமல், பணத்தையும் திருப்பிக் கொடுக்காமல் மோசடி செய்ததாக விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவில் தமிழக பால்வளத்துறை முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி உள்ளிட்டவர்கள் மீது புகார் அளிக்கப்பட்டு, வழக்கும் பதிவும் செய்யப்பட்டது.

ஆவின் இல்லம்
ஆவின் இல்லம்

இந்த நிலையில் கே.டி.ராஜேந்திர பாலாஜி சார்பில் முன்ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம், ராஜேந்திர பாலாஜி உள்ளிட்டோருக்கு முன் ஜாமீன் வழங்க முடியாது என்று கூறி அவர்களின் மனுக்களைத் தள்ளுபடி செய்தது. இதைத் தொடர்ந்து ராஜேந்திர பாலாஜியைக் கைதுசெய்வது தொடர்பாக போலீஸார் தீவிரம் காட்டினர். தொடர்ந்து ராஜேந்திர பாலாஜியைக் கைதுசெய்ய நேற்று நான்கு தனிப்படைகள் அமைப்பட்டு விசாரணை நடத்தப்பட்டுவந்தது. ராஜேந்திர பாலாஜி உறவினர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டுவந்தது.

ராஜேந்திர பாலாஜி.
ராஜேந்திர பாலாஜி.

இந்த நிலையில் இன்று காலை, ராஜேந்திர பாலாஜியைப் பிடிக்க கூடுதலாக மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டிருப்பதாக விருதுநகர் மாவட்ட எஸ்.பி தெரிவித்திருக்கிறார். ராஜேந்திர பாலாஜி தற்போது பெங்களூருவில் இருப்பதாகவும் போலீஸார் தரப்பில் சந்தேகிக்கப்படுகிறது. ராஜேந்திர பாலாஜியைக் கைதுசெய்வதில் தமிழக போலீஸ் தீவிரம் காட்டிவருகிறது. இது அவரின் ஆதரவாளர்களைக் கலக்கமடையச் செய்திருக்கிறது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS