Published:Updated:

Tamil News Today: `பெண்கள், பட்டியலினத்தவர்களை அமைச்சர்களாக்கியது பலருக்குப் பிடிக்கவில்லைபோல..!’ - பிரதமர் மோடி

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

19-07-2021 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!

19 Jul 2021 12 PM

``பட்டியலினத்தவர், பெண்களை அமைச்சர்களாக நியமனம் செய்தது பலருக்குப் பிடிக்கவில்லை” - பிரதமர் மோடி

நாடாளுமன்றத்தில் இன்று மழைகாலக் கூட்டத்தொடர் தொடங்கியது. கூட்டத்தில் புததாகப் பதவியேற்ற அமைச்சர்களை அவைக்கு பிரதமர் மோடி அறிமுகப்படுத்திவைக்க முயன்றார். அப்போது எதிர்க்கட்சிகள் பிரதமர் மோடியைப் பேசவிடாமல் கோஷம் போட்டனர்.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, ``பல பெண்கள், பட்டியலினத்தவர்கள். பழங்குடியினர் அமைச்சர்களாகிவிட்டதால் நாடாளுமன்றத்தில் உற்சாகம் இருக்கும் என்று நினைத்தேன். இந்த முறை விவசாய மற்றும் கிராமப்புறப் பின்னணியைச் சேர்ந்த எங்கள் சக ஊழியர்களான ஓபிசி சமூகத்துக்கு அமைச்சர்கள் குழுவில் இடம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் பெண்கள், விவசாயிகளின் மகன்கள் அமைச்சர்களாக மாறினால் சிலர் மகிழ்ச்சியடைய மாட்டார்கள்போல. அதனால்தான் அவர்கள் அறிமுகத்தைக்கூட அனுமதிக்க மாட்டார்கள்” என்றார்.

19 Jul 2021 10 AM

``தடுப்பூசி போட்டுக்கொண்டு பாகுபலி ஆகுங்கள்!’’ - மோடி

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் இன்று தொடங்கி ஆகஸ்ட் மாதம் 13-ம் தேதி வரை நடக்கிறது. முன்னதாக நாடாளுமன்றம் வந்த பிரதமர் மோடி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது மழை பெய்ததால், குடைபிடித்தபடியே செய்தியாளர்களிடம் பேசினார். ``மழைக்காலக் கூட்டத்தொடரைச் சிறப்பாக நடத்த அனைவரின் ஒத்துழைப்பும் தேவை. அனைத்து முக்கிய விவகாரங்கள் குறித்தும் விவாதிக்க அரசு தயாராக இருக்கிறது. ஆக்கபூர்வமான விவாதத்துக்கு எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

Tamil News Today: `பெண்கள், பட்டியலினத்தவர்களை அமைச்சர்களாக்கியது பலருக்குப் பிடிக்கவில்லைபோல..!’  - பிரதமர் மோடி

கொரோனா தொற்றுநோய் முன்னுரிமையில் விவாதிக்கப்பட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். இது தொடர்பாக அனைத்து எம்.பி-க்களிடமிருந்தும் ஆக்கபூர்வமான பரிந்துரைகளைப் பெற நினைக்கிறோம். இதனால் கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் ஒரு புதிய அணுகுமுறை வரும். குறைபாடுகள் சரிசெய்யப்பட வேண்டும். இதனால் அனைவரும் ஒன்றாகப் போராட்டத்தில் முன்னேறலாம்

இன்று நமது கைகளில் தடுப்பூசி இருக்கிறது. தடுப்பூசி போட்டுக்கொண்டு பாகுபலிபோல் வலுவானவர்களாக அனைவரும் உருவாக வேண்டும். இன்று வரை, 40 கோடி மக்கள் கொரோனாவுக்கு எதிரான போரில் பாகுபலியாக மாறியிருக்கிறார்கள்” என்றார்.

19 Jul 2021 9 AM

இந்தியாவில் கொரோனா நிலவரம்!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில், மேலும் புதிதாக 38,164 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது. இந்தியாவில், மொத்த கொரோனா பாதிப்பு 3,11,44,229 என்ற எண்ணிக்கையை எட்டியிருக்கிறது.

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 499. இந்தியாவில் இதுவரை கொரோனா பாதிப்பு காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 4,14,108-ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா சிகிச்சைப் பிரிவு
கொரோனா சிகிச்சைப் பிரிவு

இந்தியாவில் இதுவரை கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு வந்தவர்களின் எண்ணிக்கை 3,03,08,456-ஆக இருக்கிறது. தற்போது மருத்துவமனைகளில் 4,21,665 பேர் சிகிச்சையில் இருக்கிறார்கள். ஒரே நாளில் 38,660 பேர் பாதிப்பிலிருந்து மீண்டு வீடு திரும்பியிருக்கிறார்கள்.

இந்தியாவில் இதுவரை 40,64,81,493 டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது.

19 Jul 2021 9 AM

இன்று தொடங்குகிறது நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர்!

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் இன்று தொடங்கி ஆகஸ்ட் மாதம் 13-ம் தேதி வரை நடக்கிறது. இந்தக் கூட்டத்தொடரில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு, மூன்றாவது அலை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், ரஃபேல் விமான ஒப்பந்த முறைகேடு புகாா் தொடா்பாக பிரான்ஸ் விசாரணைக்கு உத்தரவிட்டிருப்பது, டெல்லியில் தொடரும் விவசாயிகள் போராட்டம், பெட்ரோல், டீசல் விலை உயர்வு உள்ளிட்ட விவகாரங்களை எதிா்க்கட்சிகள் எழுப்ப திட்டமிட்டுள்ளன. தமிழ்க எம்.பி-க்கள் இரு அவையிலும் கர்நாடகா மேக்கேதாட்டு-வில் அணை கட்டுவது தொடர்பான பிரச்னையை எழுப்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாடாளுமன்றம்
நாடாளுமன்றம்

இதற்கிடையே இந்த மழைக்காலக் கூட்டத்தொடரில் 40 மசோதாக்கள், ஐந்து அவசர சட்டங்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டிருக்கிறது என்றும் கூறப்பட்டிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு