Published:Updated:

Tamil News Today: கனமழை, மழை பாதிப்புகள் காரணமாக தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை!

20-11-2021 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!

20 Nov 2021 3 PM

"நாங்க இதைவிட்டு வரமாட்டோம்" - கொள்ளிடம் ஆற்றின் நடுவில் வசிக்கும் கிராமத்தினர் மறுப்பு

வடகிழக்கு பருவமழை காரணமாக கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால், மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கொள்ளிடம் ஆற்றுதிட்டுப் பகுதியில் அமைந்துள்ள நாதல்படுகை, முதலைமேடுதிட்டு ஆகிய கிராமங்களைத் தண்ணீர் சூழ்ந்துள்ளது. நாதல்படுகை கிராமத்தில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர்.

கொள்ளிடம் ஆற்றின் நடுவில் வசிக்கும் கிராமத்தினர்
கொள்ளிடம் ஆற்றின் நடுவில் வசிக்கும் கிராமத்தினர்

சுமார் ஒரு லட்சம் கன அடி நீர் கொள்ளிடம் ஆற்றில் வருவதால் ஆற்றின் நடுவில் திட்டுப் பகுதியில் வசித்து வரும் நாதல் படுகை, முதலைமேடுதிட்டு, ஆற்றின் கரையோரம் வசித்து வரும் அளக்குடி, வெள்ளமணல் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தற்போது அளக்குடியில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு முகாமில் தங்க வைக்கும் வகையில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

கொள்ளிடம் ஆற்றின் நடுவில் வசிக்கும் கிராமத்தினர்
கொள்ளிடம் ஆற்றின் நடுவில் வசிக்கும் கிராமத்தினர்

சீர்காழி கோட்டாட்சியர், டி.எஸ்.பி.லாமேக் உள்ளிட்ட அதிகாரிகள் நாதல்படுகை கிராம மக்களை பாதுகாப்பான முகாமிற்கு அழைப்பு விடுத்தும் சிலர், ஆடு, மாடு, மற்றும் உடைமைகளை விட்டு வர மறுக்கின்றனர். அவர்களை அப்புறப்படுத்திக் கொண்டு வருவது அதிகாரிகளுக்கு சவாலான காரியமாக உள்ளது.

- மு.இராகவன்

20 Nov 2021 7 AM

தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை!

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. அதன் காரணமாக மாநிலம் முழுவதும் பரவலாக நல்ல மழை பெய்துவருகிறது. கடந்த வாரம் பெய்த கனமழை காரணமாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் ஊருக்குள் மழை வெள்ளம் புகுந்தது. தமிழகத்திலுள்ள பெரும்பாலான அணைகள், ஏரிகள், குளங்கள் நிரம்பும் நிலையில் இருப்பதால் குளங்கள், ஏரிகள், ஆறுகளின் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையும் தொடர்ந்து வழங்கப்பட்டுவருகிறது.

மழை வெள்ளம்
மழை வெள்ளம்
ரா.ராம்குமார்

இந்த நிலையில் கனமழை காரணமாகவும், மழை பாதிப்பு காரணமாகவும் ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், காஞ்சிபுரம் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. திருவள்ளூர், செங்கல்பட்டு, திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

வாகனப் போக்குவரத்து மாற்றங்கள் குறித்த அறிவிப்பு
வாகனப் போக்குவரத்து மாற்றங்கள் குறித்த அறிவிப்பு

இதற்கிடையே வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு சென்னை பெருநகரில் வாகனப் போக்குவரத்தில் சிறு சிறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. மழைநீர்ப் பெருக்கு காரணமாகவும், தேங்கி நிற்கும் மழைநீரை வெளியேற்றும் பணி காரணமாகவும் இந்தப் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருப்பதாக சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையின் செய்திக்குறிப்பு குறிப்பிடுகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு