Published:Updated:

`கொள்ளையர்களால் படுகொலை செய்யப்பட்ட திருச்சி சிறப்பு எஸ்.ஐ குடும்பத்துக்கு 1 கோடி நிதி!' - முதல்வர் ஸ்டாலின்

21-11-2021 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!

21 Nov 2021 4 PM

`மத்தியக் குழுவினர் தலைமைச் செயலாளருடன் ஆலோசனை..!'

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையின் காரணமாக ஏற்பட்டிருக்கும் வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்வதற்காக மத்திய அரசின் 7 பேர் கொண்ட குழு இன்று சென்னை வந்தடைந்தது.

நாளையும், நாளை மறுநாளும் 2 குழுக்களாக பிரிந்து தமிழகத்தில் 11 மாவட்டங்களில் ஆய்வு மேற்கொள்ளவிருக்கும் மத்தியக் குழுவினர், தற்போது தலைமைச் செயலாளர் இறையன்பு மற்றும் அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திக் கொண்டிருக்கின்றனர்.

21 Nov 2021 12 PM

`கொள்ளையர்களால் படுகொலை செய்யப்பட்ட திருச்சி சிறப்பு எஸ்.ஐ குடும்பத்துக்கு 1 கோடி நிதி!' - முதல்வர் ஸ்டாலின்

திருச்சி மாவட்டம், நவல்பட்டு காவல்நிலையத்தில் சிறப்பு எஸ்.ஐ-யாக பணியாற்றி வந்தவர் பூமிநாதன். இவர் நேற்றிரவு வழக்கம் போல, ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, மர்ம நபர்கள் சிலர் ஆடுகளை இருசக்கர வாகனங்களில் திருடிக் கொண்டு எதிரில் வந்திருக்கின்றனர். அதைக் கண்ட பூமிநாதன், அவர்களை விரட்டி சென்றிருக்கிறார். அப்போது, இரண்டு பேரை வழிமறித்து பூமிநாதன் பிடித்திருக்கிறார். அதையடுத்து, கொள்ளையர்கள் தங்களை விட்டுவிடும் படி அவரிடம் கேட்டிருக்கின்றனர். ஆனால், பூமிநாதன் மறுக்கவே, மறைத்து வைத்திருந்த ஆயுதங்களால் பூமிநாதனைச் சரமாரியாக வெட்டி சாய்த்தனர். ரத்த வெள்ளத்தில் பூமிநாதன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

முதல்வர்   ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்

இந்த சம்பவம் தொடர்பாகத் தகவலறிந்து விரைந்த போலீஸார், எஸ்.ஐ பூமிநாதன் உடலை மீட்டுப் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், கொல்லப்பட்ட திருச்சி நவல்பட்டு சிறப்பு எஸ்.ஐ பூமிநாதனின் குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி நிதி வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருக்கிறார்.

21 Nov 2021 9 AM

மழை வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்தியக் குழு இன்று தமிழகம் வருகிறது!

மழை வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்தியக் குழு இன்று தமிழகம் வருகிறது. வடகிழக்கு பருவமழை காரணமாக ஏற்பட்ட சேதங்களைப் பார்வையிட மத்தியக் குழு தமிழகம் வரவேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியிருந்தார். அவரின் கோரிக்கையை ஏற்று மத்திய அரசின் 7 பேர் கொண்ட குழு இன்று தமிழகம் வருகிறது. சென்னைக்கு வரும் மத்திய குழுவினர் சென்னையில் தலைமைச் செயலாளர் இறையன்புடன் முதலில் ஆலோசனை நடத்திவிட்டு, பின்னர், நாளையும், நாளை மறுநாளும் 2 குழுக்களாகப் பிரிந்து பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்குச் சென்று ஆய்வு மேற்கொள்வார்கள் என்று கூறப்படுகிறது.

மழை வெள்ளம்
மழை வெள்ளம்

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சீபுரத்தில் ஒரு குழுவும், கன்னியாகுமரியில் ஒரு குழுவும் நாளை ஆய்வு செய்யவிருக்கிறது. அதைத் தொடர்ந்து, கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை ஆகிய மாவட்டங்களில் நாளை மறுநாள் ஒரு குழுவும், வேலூர், ராணிப்பேட்டையில் மற்றொரு குழுவும் ஆய்வு செய்கிறது. மொத்தம் 11 மாவட்டங்களில் மத்தியக் குழு நேரில் ஆய்வுசெய்யவிருப்பதாகக் கூறப்படுகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு