Published:Updated:

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனுக்கு கொரோனா தொற்று பாதிப்பு!

22-11-2021 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!

22 Nov 2021 3 PM

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனுக்கு கொரோனா நோய்த்தொற்று பாதிப்பு உறுதி!

அமெரிக்காவிலிருந்து சென்னை திரும்பிய மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனுக்கு கொரோனா நோய்த்தொற்று பாதிப்பு உறுதியாகியிருக்கிறது. இது தொடர்பாகத் தனது ட்விட்டரில் தெரிவித்திருக்கும் கமல், `அமெரிக்கப் பயணம் முடிந்து திரும்பிய பின், லேசான இருமல் இருந்தது.

பரிசோதனை செய்ததில் கோவிட் தொற்று உறுதியானது. மருத்துவமனையில் தனிமைப்படுத்திக் கொண்டிருக்கிறேன். இன்னமும் நோய்ப்பரவல் நீங்கவில்லையென்பதை உணர்ந்து அனைவரும் பாதுகாப்பாக இருங்கள்' என்று குறிப்பிட்டிருக்கிறார்.

22 Nov 2021 1 PM

முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் உரை!

கோவை தெற்குத் தொகுதியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று முதலமைச்சர் தலைமையில் கோவையில் நடைபெற்ற விழாவில் எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் பேசியிருக்கிறார்.

கோவை வ.உ.சி மைதானத்தில் அரசு நலத்திட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றுவருகிறது. இதில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் வானதி சீனிவாசன் உள்ளிட்ட மாவட்டத்தின் எம்.எல்.ஏ-க்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

விழா மேடையில் ஸ்டாலின், வானதி
விழா மேடையில் ஸ்டாலின், வானதி

இந்தச் சூழலில், இன்று விழா அரங்கத்துக்கு வந்த வானதி சீனிவாசனுக்கு விழா மேடையில் இருக்கை வழங்கப்பட்டு வாழ்த்துரை வழங்க வாய்ப்பு வழங்கப்பட்டது.

முதலமைச்சர் முன்னிலையில் எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் பேசுகையில், ``தமிழகத்தில் இரண்டாவது பெரிய நகராக கோவை இருக்கிறது. தொழில்நுட்பத்துக்குப் பெயர் பெற்ற ஊராக கோவை உள்ளது. ஒரு பிரச்னை என்றால் அரசு வருவதற்குள் பல்வேறு சமூக அமைப்புகள் மக்களுக்கு உதவும் ஊராக கோவை உள்ளது. கோவை தெற்குத் தொகுதியில் அரசு நலத் திட்டங்களை கொண்டு சேர்க்க உதவும் தமிழக அரசுக்கு நன்றி. தெற்குத் தொகுதியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

22 Nov 2021 12 PM

`தமிழகத்தில் ஐந்து மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!' - வானிலை ஆய்வு மையம்

ஈரோடு, சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்திருக்கிறது. மதுரை, தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

கனமழை
கனமழை

அதேபோல, தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் வரும் 24, 25 ஆகிய தினங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

22 Nov 2021 10 AM

ஸ்டாலினின் கோவை விசிட்... டிரெண்டாகும் ஹேஷ்டேக்!

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், அரசு நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்காக இன்று கோவை வருகிறார். விழா நடைபெறும் அரங்கில், அ.தி.மு.க கொறடா எஸ்.பி.வேலுமணி, பா.ஜ.க வானதி சீனிவாசன் உள்ளிட்ட 10 எதிர்க்கட்சி எம்.எல்.ஏ-க்களுக்கு முன்வரிசையில் இருக்கை போடப்பட்டுள்ளது.

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனுக்கு கொரோனா தொற்று பாதிப்பு!

இதற்கிடையே, முதல்வர் மு.க.ஸ்டாலின் கோவை வருகையை முன்னிட்டு, #GoBackStalin ஹேஷ்டேகையும், தி.மு.க-வினர் #KovaiWelcomesStalin என்ற ஹேஷ்டேகையும் டிரெண்ட் செய்துவருகின்றனர்.

22 Nov 2021 9 AM

சென்னையில் மழை..!

தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்திருக்கிறது. கடந்த இரண்டு வாரங்களாக தமிழகம் முழுவதும் பரவலாக கனமழை பெய்திருக்கிறது. பல இடங்களில் வெள்ளம் தேங்கியிருக்கிறது. தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்வதற்காக மத்திய குழு தமிழகம் வந்திருக்கிறது. அந்தக் குழு இரண்டு பிரிவுகளாகப் பிரிந்து ஆய்வு மேற்கொள்ளவிருக்கிறது. தொடர்ந்து சென்னையில் முதல்வர் ஸ்டாலினுடன் ஆலோசனை செய்யும் மத்திய குழு, வரும் 24-ம் தேதி டெல்லி புறப்பட்டுச் செல்லும்.

சென்னை மழை
சென்னை மழை

இந்த நிலையில், இன்று அதிகாலை முதல் சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட வட தமிழக மாவட்டங்களில் பரவலாக மழை பெய்துவருகிறது. இதனால் பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்லும் மாணவர்களும், பணிக்கு இரு சக்கர வாகனத்தில் செல்பவர்களும் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகியிருக்கிறார்கள். இந்த வாரமும் தமிழகத்தில் மழை நீடிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு