Published:Updated:

வேதா நிலையத்தை தீபாவிடம் ஒப்படைக்க வேண்டும்! - சென்னை உயர் நீதிமன்றம்

24-11-2021 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!

24 Nov 2021 3 PM

வேளாண் சட்டங்களை ரத்து செய்வதற்கான மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

பிரதமர் மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம் டெல்லியில் நடைபெற்று வருகிறது. இதில் 3 புதிய வேளாண் சட்டங்களையும் ரத்து செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியிருக்கிறது.

மத்திய அரசு
மத்திய அரசு

முன்னுரிமை அடிப்படையில் வேளாண் சட்டங்களை ரத்து செய்வதற்கான மசோதா தாக்கல் செய்யப்படும் என மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்திருக்கிறார். முன்னதாக விவசாயிகளின் தொடர் போராட்டத்தை அடுத்து வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்படும் என பிரதமர் மோடி அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

24 Nov 2021 2 PM

ஜெயலலிதாவின் வேதா நிலையம் அரசுடைமையாக்கப்பட்டது செல்லாது! - சென்னை உயர் நீதிமன்றம்

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வேதா நிலையத்தை அரசுடைமையாக்கி, கடந்த அ.தி.மு.க ஆட்சியில் பிறப்பிக்கப்பட்ட சட்டம் செல்லாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது.

சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம்

ஜெ.தீபா, தீபக் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்து வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வேதா நிலையம் மற்றும் மெரினா நினைவிடம் என இரண்டு நினைவிடங்கள் எதற்கு என கேள்வி எழுப்பிய நீதிபதி, தமிழக அரசு 3 வாரங்களுக்குள் வேதா நிலையத்தை வாரிசுதாரர்களான ஜெ.தீபா, தீபக் ஆகியோர் வசம் ஒப்படைக்க வேண்டும் என்றும், கடந்த ஆட்சியில் வேதா நிலையம் அரசுடைமையாக்கப்பட்ட சட்டம் செல்லாது என்றும் உத்தரவு பிறப்பித்தார்.

24 Nov 2021 1 PM

ஐந்து நாள்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்பு..!

தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்திருக்கும் நிலையில் இன்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், ``ஐந்து நாள்களுக்கு தமிழ்நாட்டில் மிக கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.

சென்னை வானிலை ஆய்வு மையம்
சென்னை வானிலை ஆய்வு மையம்

தொடர்ந்து, ராமநாதபுரம், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யக்கூடும் எனவும், வரும் 27, 28-ம் தேதிகளில் சென்னையில் கனமழை பெய்யும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. வட கடலோர மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

24 Nov 2021 7 AM

வேதா இல்லம் யாருக்கு?

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த `போயஸ் தோட்டம்’ இல்லம் கடந்த ஆட்சியில் அரசுடைமையாக்கப்பட்டது. இதை ஜெயலலிதாவின் வாரிசுகளான தீபா, தீபக் ஆகியோர் எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்றுவந்த நிலையில், இன்று தீர்ப்பு வழங்கப்படவிருக்கிறது.

ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீடு
ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீடு

தீபா, தீபக் ஆகியோர் தனிநபர் சொத்துகளைக் கையகப்படுத்துவது தொடர்பாக சட்டமியற்ற அரசுக்கு அதிகாரம் இல்லை என வாதாடுகின்றனர். மேலும், தங்களிடம் ஆலோசிக்காமலேயே வீட்டுக்கு 67.9 கோடி ரூபாய் என இழப்பீடு நிர்ணயித்தது தவறு எனக் கூறுகின்றனர். அதேநேரத்தில் அரசு தரப்பில் இல்லத்தைக் கையப்படுத்தும் முன்பு அனைத்துத் தரப்பு கருத்துகளைக் கேட்டதாகவும், அரசியல்ரீதியாகவும், தனிப்பட்டவிதத்திலும் பல்வேறு பிரச்னைகளை ஜெயலலிதா எதிர்கொண்டபோது தீபா, தீபக் ஆகியோர் அவருக்கு உறுதுணையாக இருந்ததில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கில் இன்று பிற்பகல் தீர்ப்பு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு