Published:Updated:

Tamil News Today: தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்த 4 மாதம் அவகாசம்! - உச்ச நீதிமன்றம் உத்தரவு

27-09-2021 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

27 Sep 2021 11 AM

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடத்த நான்கு மாதம் அவகாசம்!

தமிழ்நாட்டில் அக்டோபர் மாதம் 6, 9 தேதிகளில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் விடுபட்ட ஒன்பது மாவட்டங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இன்னும் நடத்தப்படாமல் இருக்கும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்துவது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையில் இருந்துவருகிறது. இன்று அந்த வழக்கின் விசாரணையின்போது நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடத்துவதற்கான பணிகள் அனைத்தும் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் நிறைவடைந்துவிடும். அதனால் தேர்தலை நடத்துவதற்கு மார்ச் மாதம் வரையில் கால அவகாசம் வழங்க வேண்டும் என தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.

உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

மார்ச் மாதம் வரை கால அவகாசம் மாநில தேர்தல் ஆணையம் கோரியிருந்த நிலையில், அடுத்த நான்கு மாதங்களில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவு பிறப்பித்திருக்கிறது.

27 Sep 2021 8 AM

வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு... நாடு தழுவிய முழு அடைப்பு!

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் கடந்த ஆண்டு நவம்பரிலிருந்து விவசாயிகள் போராட்டம் நடத்திவருகின்றனர். பல்வேறு சிக்கல்கள், இடையூறுகளைக் கடந்து விவசாயிகள் போராட்டம், 300 நாள்களைத் தாண்டி நீடித்துவருகிறது. விவசாயிகளின் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர மத்திய அரசு இதுவரை 11 கட்ட பேச்சுவார்த்தை நடத்திவிட்டது. ஆனால் இதுவரை உடன்பாடு ஏற்படவில்லை.

டெல்லி விவசாயிகள் போராட்டம்
டெல்லி விவசாயிகள் போராட்டம்

இந்தநிலையில், மத்திய அரசின் வேளாண் சட்டங்கள் மற்றும் விலைவாசி உயர்வைக் கண்டித்து இன்று நாடு தழுவிய அளவில் முழு அடைப்புக்கு விவசாய சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன. 'சம்யுக்தா கிசான் மோர்ச்சா' விவசாய சங்கம் அழைப்பு விடுத்துள்ள நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டத்துக்கு பல்வேறு கட்சிகள், அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன. காலை 6 மணி முதல் மாலை 4 மணி வரை 10 மணி நேர போராட்டம் நடைபெறும் என அறிவித்துள்ளனர். பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி இந்தப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார். மேலும் பாஜக ஆட்சி செய்யாத மாநிலங்கள், ஆந்திரா, தமிழ்நாடு, கேரளா மாநிலங்களும் ஆதரவு தெரிவித்துள்ளன. தமிழகத்தில் சில பகுதிகளில் ரயில்மறியல் போன்ற சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. கேரளாவில் அரசு, தனியார் பேருந்துகள் இயக்கப்படவில்லை. புதுச்சேரியில் தனியார் பேருந்துகள் இயக்கப்படாத நிலையில் மிகக் குறைந்த அளவில் அரசுப் பேருந்துகள் இயக்கப்படுவதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு