Published:Updated:

Tamil News Today: `அதிமுக-வை யாராலும் கைப்பற்ற முடியாது; தனிப்பட்ட குடும்பம் வழிநடத்த முடியாது!’ - ஓ.பன்னீர்செல்வம்

முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் டெல்லி பயணம்
முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் டெல்லி பயணம்

28-07-2021 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!

28 Jul 2021 1 PM

நெல்லை: `பொய் வாக்குறுதியால் வெற்றிபெற்ற தி.மு.க!’ - கொந்தளித்த அ.தி.மு.க-வினர்

`தேர்தல் நேரத்தில் தி.மு.க-வினர் கொடுத்த வாக்குறுதி எதையும் நிறைவேற்றவில்லை. தமிழக அரசு மக்களை ஏமாற்றுகிறது’ என நெல்லையில் அ.தி.மு.க-வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். கண்டனப் பதாகைகளை ஏந்தியபடி தொண்டர்கள் கோஷங்களை எழுப்பினார்கள்.

-

அ.தி.மு.க ஆர்ப்பாட்டம்
அ.தி.மு.க ஆர்ப்பாட்டம்

நெல்லை மாவட்ட ஜெ.பேரவைச் செயலாளர் கே.ஜே.சி.ஜெரால்ட், `தேர்தல் நேரத்தில் தி.மு.க-வினர் வாய்க்கு வந்தபடி வாக்குறுதிகளைத் தெரிவித்தார்கள். தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு வாக்குறுதி பற்றி வாய் திறக்காமல் மௌனமாக இருக்கிறார்கள். உண்மையை மறைத்து ஊர் ஊராகச் சென்று பொய் சொன்னார்கள். ஆட்சிக்கு வந்ததும் பெட்ரோல் விலையைக் குறைப்பதாகச் சொன்னார்கள். ஒவ்வொரு ரேஷன் அட்டைதாரருக்கும் காஸ் விலையில் 100 ரூபாய் குறைக்கப்படும் என அறிவித்தார்கள். நீட் தேர்வை ரத்து செய்வோம் என்றார்கள். இதுபோல சொன்ன எதையும் நிறைவேற்றவில்லை.

அவர்கள் கொடுத்த வாக்குறுதிகளை நினைவுபடுத்தும் வகையில் இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்துகிறோம். காஸ் விலையில் 100 ரூபாய் குறைப்பதாகச் சொன்னதை நினைவுபடுத்தும் நோக்கத்திலேயே இங்கு காஸ் சிலிண்டரை வைத்திருக்கிறோம்” என்று பேசினார். நெல்லை மாவட்டம் முழுவதும் பல்வேறு நகரங்களிலும் தமிழக அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

- ஆண்டனிராஜ்

28 Jul 2021 11 AM

`அதிமுக-வை யாராலும் கைப்பற்ற முடியாது; தனிப்பட்ட குடும்பம் வழிநடத்த முடியாது’ - ஓ.பி.எஸ்

தேனியில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில், `சட்டமன்றத் தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளை, திமுக ஆட்சிக்கு வந்ததும் நிறைவேற்றவில்லை’ எனக் கூறிப் போராட்டம் நடைபெற்றது. தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த ஓ.பன்னீர் செல்வம், ``அதிமுக-வை யாராலும் கைப்பற்ற முடியாது. அதிமுக-வைத் தனிப்பட்ட குடும்பம் வழிநடத்த முடியாது. கடந்த நான்கரை ஆண்டுகளாக நாங்கள் இருவரும் கட்சியை நடத்திவருகிறோம்!” என்றார்.

28 Jul 2021 10 AM

ஐந்து நாள் சுற்றுப்பயணமாக தமிழ்நாடு வருகிறார் குடியரசுத் தலைவர்!

ராம்நாத் கோவிந்த்
ராம்நாத் கோவிந்த்

வரும் ஆகஸ்ட் 2-ம் தேதி சட்டப்பேரவையில் முன்னாள் முதல்வர் கருணாநிதி உருவப்படத்தை திறந்துவைத்து, சட்டப்பேரவை நூற்றாண்டு விழாவில் பங்கேற்கிறார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த். தொடர்ந்து ஆகஸ்ட் 3-ம் தேதி கோவைக்குச் சென்று, ஹெலிகாப்டர் மூலம் ஊட்டி செல்கிறார். ஆகஸ்ட் 4, 5, 6-ம் தேதிகளில் அவர் ஊட்டியில் தங்கி அங்குள்ள ராணுவ வெலிங்டன் கல்லூரியில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.

28 Jul 2021 9 AM

இந்தியாவில் கொரோனா நிலவரம்!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில், மேலும் புதிதாக 43,654 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது. கடந்த சில நாள்களாக இந்தியாவில் ஒரு நாள் பாதிப்பு 40,000-க்கும் குறைவாகப் பதிவாகிவந்த நிலையில் இன்று மீண்டும் அதிகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது,

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 640. இந்தியாவில் இதுவரை கொரோனா பாதிப்பு காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 4,22,022-ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா ரிசல்ட் வாங்கக் காத்திருக்கும் பொதுமக்கள்
கொரோனா ரிசல்ட் வாங்கக் காத்திருக்கும் பொதுமக்கள்

இந்தியாவில் இதுவரை கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு வந்தவர்களின் எண்ணிக்கை 3,06,63,147-ஆக இருக்கிறது. தற்போது மருத்துவமனைகளில் 3,99,436 பேர் சிகிச்சையில் இருக்கிறார்கள். ஒரே நாளில் 41,678 பேர் பாதிப்பிலிருந்து மீண்டு வீடு திரும்பியிருக்கிறார்கள்.

இந்தியாவில் இதுவரை 44,61,56,659 டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது.

28 Jul 2021 8 AM

நள்ளிரவில் பேருந்து மீது லாரி மோதி விபத்து! -

உத்தரப்பிரதேச மாநிலம், பரபாங்கி என்னும் இடத்தில், தேசிய நெடுஞ்சாலையில் நள்ளிரவில் பேருந்துடன் அதிவேகமாக வந்த லாரி மோதியத்தில் 18 பேர் பலியாகினர். 19-க்கும் அதிகமானோர் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சையில் இருக்கிறார்கள். இந்த விபத்து குறித்து மாவட்ட காவல்துறை அதிகாரி பேசுகையில், லக்னோ - அயோத்தி நெடுஞ்சாலையில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. நள்ளிரவில் பேருந்தில் ஏற்பட்ட பழுது காரணமாக ஓட்டுநர் பேருந்தை நிறுத்திச் சரிபார்த்துகொண்டிருந்திருக்கிறார்.

விபத்து குறித்து காவல்துறை அதிகாரி
விபத்து குறித்து காவல்துறை அதிகாரி
ANI

பேருந்திலிருந்து இறங்கிய பயணிகளிடம், ``விரைவில் சரிசெய்து விடுவோம், நீங்கள் பேருந்திலே ஓய்வெடுங்கள்’’ எனச் சொல்லியிருக்கிறார். ஆனால் அடுத்த சில நிமிடங்களில் அதிவேகமாக வந்த லாரி, பேருந்தின் பின்பக்கமாக மீது மோதி விபத்து ஏற்பட்டது என்றார். விபத்து தொடர்பாக தீவிர விசாரணை நடைபெற்றுவருகிறது.

அடுத்த கட்டுரைக்கு