Published:Updated:

Tamil News Today: `வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடியவர்கள்மீது பதியப்பட்ட வழக்குகள் வாபஸ்!” - முதல்வர் ஸ்டாலின்

சட்டமன்றத்தில் முதல்வர் ஸ்டாலின்
சட்டமன்றத்தில் முதல்வர் ஸ்டாலின்

28-08-2021 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!

28 Aug 2021 11 AM

``வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடியவர்கள்மீது பதியப்பட்ட வழக்குகள் வாபஸ்!”

தமிழக சட்டப்பேரவையில் மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், தற்போது முதல்வர் ஸ்டாலின் வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடியவர்கள்மீது பதியப்பட்ட வழக்குகள் வாபஸ் பெறப்படுவதாக சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார். சட்டமன்ற உறுப்பினர்கள் வேல்முருகன், ஜவாஹிருல்லா ஆகியோரின் கோரிக்கையை ஏற்று முதல்வர் ஸ்டாலின் இந்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்

28 Aug 2021 10 AM

வேளாண் சட்டங்களுக்கு எதிராகத் தீர்மானம்! - அதிமுக வெளிநடப்பு

இன்றைய தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒன்றிய அரசின் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராகத் தீர்மானம் கொண்டுவந்தார். இந்தத் தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த பாஜக வெளிநடப்பு செய்தது. பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த பா.ஜ.க எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன், `விவசாயிகளுக்கு எதிரான ஒரு தீர்மானத்தை சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் நிறைவேற்றியிருப்பதாக’த் தெரிவித்தார்.

ஓ. பன்னீர்செல்வம்
ஓ. பன்னீர்செல்வம்

முதல்வரின் தீர்மானத்துக்கு காங்கிரஸ், மதிமுக, பாமக, தவாக உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்தன. இந்தநிலையில், அதிமுக-வும், தமிழக அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராகக் கொண்டுவரப்பட்டுள்ள தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவிப்பதாகச் சொல்லி வெளிநடப்பு செய்திருக்கிறது. இது குறித்து அவையில் பேசிய அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், `அவசர கோலத்தில் எதிர்ப்பு தெரிவிப்பது ஏற்புடையது அல்ல. அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி, ஒருமனதாக முடிவெடுத்து விவசாயிகளின் கோரிக்கையை மத்திய அரசிடம் தெரிவிக்க வேண்டும். சந்தேகங்ளுக்கு மத்திய அரசிடமிருந்து பதில் வரும் வரை காத்திருக்க வேண்டும்’ என்ற கோரிக்கையை வைத்தார். தொடர்ந்து அ.தி.மு.க-வினர் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.

இதற்கிடையே, அ.தி.மு.க., பா.ஜ.க உறுப்பினர்கள் தவிர்த்து மற்ற கட்சி உறுப்பினர்களின் ஆதரவுடன் குரல் வாக்கெடுப்பு மூலம் சட்டப்பேரவையில் வேளாண் சட்டங்களுக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

28 Aug 2021 10 AM

சட்டப்பேரவையிலிருந்து பா.ஜ.க வெளிநடப்பு!

சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றுவரும் தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரில் இன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக தனித் தீர்மானத்தைக் கொண்டுவந்தார். அதைத் தொடர்ந்து தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜ.க உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். முதல்வர் கொண்டுவந்த தீர்மானத்துக்கு காங்கிரஸ், வி.சி.க., ம.தி.மு.க., பா.ம.க., த.வா.க உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

கலைவாணர் அரங்கம் - சட்டசபை
கலைவாணர் அரங்கம் - சட்டசபை

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த பா.ஜ.க எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன், ``விவசாயிகளுக்கு எதிரான ஒரு தீர்மானத்தை சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் நிறைவேற்றியிருக்கிறார்” எனத் தெரிவித்தார்.

28 Aug 2021 10 AM

ஒன்றிய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம்!

சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றுவரும் தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரில் இன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக தனித் தீர்மானத்தை முன்மொழிந்தார்.

சட்டப்பேரவையில் முதல்வர் மு.க. ஸ்டாலின்
சட்டப்பேரவையில் முதல்வர் மு.க. ஸ்டாலின்

சட்டப்பேரவையில் தீர்மானத்தை முன்மொழிந்து பேசிய மு.க.ஸ்டாலின், ``மண்ணையும் விவசாயிகளையும் காக்கும் வகையில் புதிய வேளாண் சட்டங்கள் இல்லை. வியர்வை சிந்தி விளைவிக்கும் பொருளுக்கு உரிய விலை கிடைக்க வேண்டும் என்பது விவசாயிகளின் கோரிக்கை. மாநில அரசுகளின் உரிமைகளைப் பறிக்கும் வகையில் இருக்கின்றன மூன்று வேளாண் சட்டங்களும். சுதந்திர இந்தியாவில் விவசாயிகளின் போராட்டம் போன்ற எழுச்சிமிகுப் போராட்டம் நடந்தது இல்லை. ஒன்றிய அரசின் சட்டத்தின் மூலம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் பெருமளவு வருவாய் இழப்பு ஏற்படும். மாநிலங்களுடன் ஆலோசிக்காமல் சட்டம் கொண்டுவந்தது கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிரானது” என்றார். ஒன்றிய அரசின் மூன்று வேளாண் சட்டங்களும் ரத்து செய்யப்பட வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்திருக்கிறார்.

28 Aug 2021 10 AM

மாணவிக்குப் பாலியல் தொல்லை! - 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்த மகிளா நீதிமன்றம்

புதுக்கோட்டை மாவட்டம், தாஞ்சூர் அருகே இலக்குப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கருப்பையா மகன், செல்வகுமார். அதே பகுதியைச் சேர்ந்த 12-ம் வகுப்பு மாணவியைப் பின்தொடர்ந்து தனக்கு முத்தம் கொடுக்கச் சொல்லித் தொடர்ந்து டார்ச்சர் செய்திருக்கிறார். அதோடு, பாலியல் தொந்தரவு செய்ததாகவும் கூறப்படுகிறது. இந்தநிலையில், மாணவியைத் தனக்குத் திருமணம் செய்துவைக்காவிட்டால், (சினிமா பாணியில்) சிறுமியைக் கடத்திச் சென்றுவிடுவேன் என்று சிறுமியின் பெற்றோரை செல்வக்குமார் மிரட்டியிருக்கிறார்.

செல்வக்குமார்
செல்வக்குமார்

இது பற்றி புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில், வழக்கு பதிவு செய்த போலீஸார் விசாரணை நடத்தி, செல்வக்குமாரைக் கைதுசெய்தனர். இந்த வழக்கின் விசாரணை, புதுக்கோட்டை மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்தது. வழக்கு இறுதி விசாரணைக்கு வந்தபோது, வழக்கை விசாரித்த நீதிபதி சத்யா, குற்றவாளியான செல்வக்குமாருக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.30,000 அபராதமும் விதித்தார். அபராதத்தைக் கட்டத் தவறினால் ஒரு மாத சிறைத் தண்டனை எனத் தீர்ப்பு வழங்கினார்.

28 Aug 2021 9 AM

இந்தியாவில் கொரோனா, தடுப்பூசி நிலவரம்!

இந்தியாவில் இரண்டாம் கொரோனா அலையின் தாக்கம் மிகப்பெரிய அளவில் இருந்தது. அதோடு, இந்தியாவில் தடுப்பூசி போடும் திட்டமும் மிகப்பெரிய அளவில் தொடங்கப்பட்டது. நாடு முழுவதும் தொடர்ந்து தடுப்பூசி போடும் பணிகள் வேகமாக நடைபெற்றுவந்தன. கடந்த சில மாதங்களில் நிலவிய தடுப்பூசி தட்டுப்பாடு தற்போது குறைந்திருக்கிறது.

தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் 24 மணி நேரமும் தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கப்பட்டிருக்கின்றன. இந்தியாவில் நேற்று ஒரே நாளில் ஒரு கோடி டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டிருக்கிறது. ஒரே நாளில் இந்தியாவில் ஒரு கோடி டோஸ் கையாளப்பட்டது இதுவே முதன்முறை. இது தொடர்பாக மகிழ்ச்சி தெரிவித்திருக்கும் பிரதமர் மோடி, ``ஒரே நாளில் 1 கோடியைத் தாண்டுவது ஒரு முக்கியமான சாதனை. தடுப்பூசி போடப்பட்டவர்களுக்கும், தடுப்பூசியை வெற்றிகரமாக நடத்துபவர்களுக்கும் பாராட்டுகள்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

இந்தியாவில், கடந்த சில நாள்களாக கொரோனா பாதிப்பு குறைவதும் அதிகரிப்பதுமாக மாறி மாறி இருக்கிறது. கடந்த சில நாள்களாக பாதிப்பு குறைந்துவந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில், புதிய பாதிப்புகளின் எண்ணிக்கை 46,759 -ஆக உயர்ந்துள்ளது. இதன் மூலம் இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு 3,26,49,947-ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா தடுப்பூசி
கொரோனா தடுப்பூசி

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 509 பேர் கொரோனா காரணமாக பலியாகியுள்ளனர். இந்தியாவில் மொத்த பலி எண்ணிக்கை 4,37,370-ஆக உயர்ந்திருக்கிறது. நேற்று ஒரே நாளில் 31,374 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர். இந்தியாவிலிருந்து இதுவரை 3,18,52,802 பேர் பாதிப்பிலிருந்து மீண்டிருக்கிறார்கள்.

இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 1,03,35,290 டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது. இந்தியாவில் இதுவரை 62,29,89,134 டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த கட்டுரைக்கு