Published:Updated:

Tamil News Today: ``சசிகலா அல்லது ஓ.பி.எஸ் அதிமுக-வின் ஒற்றைத் தலைமையாகப் பொறுப்பேற்க வேண்டும்!’’ - புகழேந்தி 

28-10-2021 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!

28 Oct 2021 3 PM

``சசிகலா அல்லது ஓ.பி.எஸ் அதிமுக-வின் ஒற்றைத் தலைமையாகப் பொறுப்பேற்க வேண்டும்!’’ - புகழேந்தி 

அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட புகழேந்தி சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவரிடம் சசிகலாவை அதிமுக-வில் மீண்டும் இணைப்பது குறித்துக் கேட்கப்பட்ட கேள்விக்கு, ``அதிமுக சரிவை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது. எனவே, அந்தக் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ் விரைவில் சரியான முடிவை எடுக்க வேண்டும்.

புகழேந்தி
புகழேந்தி

எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்கியபோது சசிகலா அவருக்கு நல்லவராகத் தெரிந்தார். ஆனால், இப்போது கெட்டவராகத் தெரிகிறார். முதலில் எடப்பாடி பழனிசாமியைக் கட்சியைவிட்டு நீக்கிவிட்டு, சசிகலா அல்லது ஓபிஎஸ் யாராவது ஒருவர் தலைமையில் அதிமுக செயல்பட வேண்டும். கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு எதிராக முனுசாமி போன்றவர்கள் கட்சியில் கருத்து கூறுவது ஏற்புடையதல்ல" என்றார்.

28 Oct 2021 1 PM

``சசிகலாவுக்கு அதிமுக-வில் ஒருபோதும் இடமில்லை!'’ - ஜெயக்குமார் திட்டவட்டம்

ஜெயக்குமார்
ஜெயக்குமார்

``அதிமுக-வில் சசிகலாவுக்கோ, அவர் குடும்பத்தினருக்கோ இன்றைக்கும், என்றைக்கும் இடமில்லை. கட்சியிலிருந்து நீக்கப்பட்ட சசிகலாவுடன் கட்சி நிர்வாகிகள் யாரும் தொடர்பில் இருக்கக் கூடாது என்பதுதான் எங்களின் நிலைப்பாடு. அதிமுக என்ற எஃகு கோட்டையைக் கரையான்களால் ஒருபோதும் அரிக்க முடியாது’’ - செய்தியாளர்கள் சந்திப்பில் ஜெயக்குமார் கருத்து.

28 Oct 2021 12 PM

ஜெயலலிதா மரண வழக்கு: `ஆறுமுகசாமி ஆணையத்துக்கு வழக்கை விசாரிக்கத் தகுதியில்லை!' - உச்ச நீதிமன்றத்தில் அப்போலோ காட்டம்

`ஜெயலலிதா மரணம் குறித்த ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு இனி ஆஜராக முடியாது’ என்று நேற்று முன்தினம் அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது. இந்த நிலையில், இன்று மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக ஆஜரான அப்போலோ மருத்துவமனை நிர்வாகம், `ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க ஆறுமுகசாமி ஆணையத்துக்குத் தகுதியில்லை’ என்றும், ஆணையம் வரம்பு மீறி, ஒருதலைபட்சமாகச் செயல்படுவதாகவும் குற்றம்சாட்டியிருக்கிறது.

மேலும், `ஜெயலலிதா எந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார் என்பது தேவையற்றது’ என்றும், `மருத்துவமனையில் எப்படி சிகிச்சை அளிக்கப்பட்டது என்பதை மட்டும்தான் பார்க்க வேண்டும்’ என்றும் நீதிமன்றத்தில் தெரிவித்திருக்கிறது.

28 Oct 2021 10 AM

ஹரியானா: விவசாயிகள் போராட்டக் களத்தில் புகுந்த லாரி; அசுர வேகத்தில் மோதியதில் மூன்று பெண் விவசாயிகள் பலி!

மத்திய அரசு புதிதாக இயற்றியிருக்கும் மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி விவசாயிகள் சுமார் 11 மாதங்களாக நாடு தழுவிய போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். குறிப்பாக, டெல்லி எல்லையில் விவசாயிகள் வெயில், மழை பாராமல் தொடர்ச்சியாக மத்திய அரசுக்கு எதிராகப் போராடிக் கொண்டிருக்கின்றனர். அண்மையில் உத்தரப்பிரதேசத்தில் வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி லக்கிம்பூர் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த விவசாயிகள் மீது, மத்திய அமைச்சர் ஒருவரின் மகன் கார் ஏற்றியதில், ஒன்பது பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

விவசாயிகள் போராட்டக் களத்தில் புகுந்த லாரி
விவசாயிகள் போராட்டக் களத்தில் புகுந்த லாரி

இந்த நிலையில், டெல்லி - ஹரியானா எல்லையில் விவசாயிகள் போராட்டம் நடைபெற்றுக்கொண்டிருக்கும் பகுதிக்கு அருகில், இன்று காலை லாரி ஒன்று அதிவேகமாகக் கூட்டத்தில் புகுந்ததில் ஆட்டோவுக்காகக் காத்திருந்த மூன்று பெண் விவசாயிகள் உயிரிழந்திருக்கின்றனர். போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில், உயிரிழந்தவர்கள் பஞ்சாப் மாநிலம், மான்சா மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்று தெரியவந்திருக்கிறது. அந்தப் பெண்கள் விவசாயிகள் போராட்டத்தில் கலந்துகொள்வதற்காக வந்தவர்கள் என்றும் கூறப்படுகிறது.

28 Oct 2021 8 AM

`பாகிஸ்தானின் வெற்றியை கொண்டாடுபவர்கள் மீது தேசத்துரோக வழக்கு!’ - யோகி

இந்தியா-பாகிஸ்தான் அணி
இந்தியா-பாகிஸ்தான் அணி

டி20 உலகக் கோப்பை குரூப் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி இந்திய அணியை வீழ்த்தியது. இந்த நிலையில், இந்தியாவில் பாகிஸ்தானின் வெற்றியைக் கொண்டாடியவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படும் சம்பவங்கள் நடைபெற்றுவருகின்றன. உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் இதுவரை பாகிஸ்தானின் வெற்றியைக் கொண்டாடியதாகவும், பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷம் எழுப்பியதாகவும் ஏழு பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. இந்த நிலையில் `பாகிஸ்தானின் வெற்றியைக் கொண்டாடுபவர்கள் மீது தேசத்துரோக வழக்கு பாயும்’ என அந்த மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டிருக்கிறார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு