Published:Updated:

Tamil News Today: தமிழ்நாட்டின் 30-வது சட்டம், ஒழுங்கு டி.ஜி.பி-யாக சைலேந்திரபாபு ஐ.பி.எஸ் நியமனம்!

சைலேந்திரபாபு
சைலேந்திரபாபு

29-06-2021 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!

29 Jun 2021 7 PM

தமிழ்நாட்டின் 30-வது சட்டம், ஒழுங்கு டி.ஜி.பி-யாக சைலேந்திரபாபு ஐ.பி.எஸ் நியமனம்

சைலேந்திரபாபு
சைலேந்திரபாபு

தமிழ்நாட்டின் 30-வது சட்டம், ஒழுங்கு டி.ஜி.பி-யாக சைலேந்திரபாபு ஐ.பி.எஸ் நியமிக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. நாளை காலையுடன் தற்போதுள்ள டி.ஜி.பி திரிபாதி ஓய்வுபெறும் நிலையில், நாளை தமிழ்நாட்டின் 30-வது சட்டம், ஒழுங்கு டி.ஜி.பி-யாக சைலேந்திரபாபு ஐ.பி.எஸ் பதவியேற்கவுள்ளார்

29 Jun 2021 11 AM

`உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு முரணான நிலைப்பாட்டை தமிழக அரசு எடுக்க முடியாது!'

தமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிராக, புதிதாகப் பதவியேற்ற ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. அதன் முதற்கட்டமாக ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் நீட் தேர்வின் பாதிப்புகள் குறித்து ஆராய ஒரு குழு அமைக்கப்பட்டது. இந்தநிலையில், பா.ஜ.க-வின் கரு.நாகராஜன் சென்னை உயர் நீதிமன்றத்தில், ஏ.கே ராஜன் தலைமையிலான குழுவுக்கு எதிராக பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம்

இது தொடர்பான வழக்கு விசாரணையில் சென்னை உயர் நீதிமன்றம், `நீட் தேர்வு விவகாரத்தில் உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முரணான நிலைப்பாட்டை தமிழக அரசு எடுக்க முடியாது’ என்று கருத்து தெரிவித்துள்ளது. மேலும், ``நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆராய்வதற்கு குழு அமைக்க உச்ச நீதிமன்ற அனுமதி பெறப்பட்டதா?” எனவும் கேள்வி எழுப்பியது நீதிமன்றம். `தேர்தல் அறிக்கையில் அறிவித்ததன் அடிப்படையில் கொள்கை முடிவாகக் குழு அமைக்கப்பட்டதாக’ தமிழக அரசின் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. கரு.நாகராஜன் தாக்கல் செய்த வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்கவும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

29 Jun 2021 9 AM

இந்தியாவில் கொரோனா நிலவரம்!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில், மேலும் புதிதாக 37,566 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது. இந்தியாவில் சுமார் 102 நாள்களுக்கு பிறகு தினசரி பாதிப்பு 40,000-க்கு கீழ் பதிவாகி உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில், மொத்த கொரோனா பாதிப்பு 3,03,16,897என்ற எண்ணிக்கையை எட்டியிருக்கிறது.

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 907. இந்தியாவில் இதுவரை கொரோனா பாதிப்பு காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 3,97,637-ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பெருந்தொற்றுப் பேரிடர்/ மூன்றாம் அலை
கொரோனா பெருந்தொற்றுப் பேரிடர்/ மூன்றாம் அலை
Pixabay

இந்தியாவில் இதுவரை கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு வந்தவர்களின் எண்ணிக்கை 2,93,66,601-ஆக இருக்கிறது. தற்போது மருத்துவமனைகளில் 5,52,659 பேர் சிகிச்சையில் இருக்கிறார்கள். ஒரே நாளில் 56,994 பேர் பாதிப்பிலிருந்து மீண்டு வீடு திரும்பியிருக்கிறார்கள்.

அடுத்த கட்டுரைக்கு