Published:Updated:

Tamil News Today: `ஒரே நாளில் 41,649 பேருக்குத் தொற்று; 593 மரணங்கள்!’ - இந்தியாவில் கொரோனா நிலவரம்

கொரோனா
கொரோனா

31-07-2021 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!

31 Jul 2021 10 AM

முன்னாள் அமைச்சர் அனில் தேஷ்முக்குக்கு 4-வது முறையாக அமலாக்கப் பிரிவு சம்மன்!

மகாராஷ்டிரா முன்னாள் உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் மீது முன்னாள் மும்பை போலீஸ் கமிஷனர் பரம்பீர் சிங் ரூ.100 கோடி லஞ்சப் புகார் சுமத்தி முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்குக் கடிதம் எழுதியிருந்தார். இது தொடர்பாக சி.பி.ஐ தனியாக விசாரணை நடத்திவருகிறது. அமலாக்கப் பிரிவு, அனில் தேஷ்முக் மீது பணமோசடி வழக்கு பதிவு செய்து விசாரித்துவருகிறது. அமலாக்கப் பிரிவு அனில் தேஷ்முக்கிடம் விசாரிக்க மூன்று முறை சம்மன் அனுப்பியது. ஆனால் அனில் தேஷ்முக் கொரோனா, உடல்நலக் கோளாறு போன்ற காரணங்களைக் கூறி அமலாக்கப் பிரிவில் ஆஜராகவில்லை. அனில் தேஷ்முக்கின் மகனுக்கும் மனைவிக்கும் சம்மன் அனுப்பப்பட்டது. அவர்களும் ஆஜராகவில்லை.

மனைவியுடன் அனில் தேஷ்முக்
மனைவியுடன் அனில் தேஷ்முக்

அனில் தேஷ்முக் வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் வாக்குமூலம் கொடுக்கத் தயாராக இருப்பதாகத் தெரிவித்தார். ஆனால் அனில் தேஷ்முக்கின் இந்தக் கருத்தை அமலாக்கப் பிரிவு ஏற்றுக்கொள்ளவில்லை. அனில் தேஷ்முக் வீட்டில் ரெய்டும் நடத்தப்பட்டது. தற்போது 4-வது முறையாக அமலாக்கப் பிரிவு அனில் தேஷ்முக்கை விசாரணைக்கு ஆஜராகும்படி கூறி சம்மன் அனுப்பியிருக்கிறது. அனில் தேஷ்முக் மட்டுமல்லாமல் அவரின் மனைவி மற்றும் மகனுக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. வரும் ஆகஸ்ட் 2-ம் தேதி ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

- மு.ஐயம்பெருமாள்

31 Jul 2021 9 AM

இந்தியாவில் கொரோனா நிலவரம்!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில், மேலும் புதிதாக 41,649 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது. இந்தியாவில், மொத்த கொரோனா பாதிப்பு 3,16,13,993 என்ற எண்ணிக்கையை எட்டியிருக்கிறது.

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 593. இந்தியாவில் இதுவரை கொரோனா பாதிப்பு காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 4,23,810-ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா
கொரோனா
Anupam Nath

இந்தியாவில் இதுவரை கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு வந்தவர்களின் எண்ணிக்கை 3,07,81,263-ஆக இருக்கிறது. தற்போது மருத்துவமனைகளில் 4,08,920 பேர் சிகிச்சையில் இருக்கிறார்கள். ஒரே நாளில் 37,291 பேர் பாதிப்பிலிருந்து மீண்டு வீடு திரும்பியிருக்கிறார்கள்.

இந்தியாவில் இதுவரை 46,15,18,479 டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு