Published:Updated:

நூறு கண்களில் படிச்சேன்! - சிவில் சர்வீசஸ் தேர்வில் சாதித்த தங்கங்கள்!

அபிநயா
பிரீமியம் ஸ்டோரி
அபிநயா

சாதனை செல்வங்கள்

நூறு கண்களில் படிச்சேன்! - சிவில் சர்வீசஸ் தேர்வில் சாதித்த தங்கங்கள்!

சாதனை செல்வங்கள்

Published:Updated:
அபிநயா
பிரீமியம் ஸ்டோரி
அபிநயா
சமீபத்தில் வெளியான இந்தியக் குடிமைப்பணித் தேர்வு முடிவு, நாடெங்கிலும் பல எளிய குடும்பத்துப் பிள்ளைகளை தலைப்புச் செய்திகளாக்கியுள்ளது. ஐ.ஏ.எஸ், ஐ.எஃப்.எஸ், ஐ.பி.எஸ் உள்ளிட்ட பணிகளுக்கானவர்களைத் தேர்ந்தெடுக்க நடத்தப்படும் இந்த யு.பி.எஸ்.சி தேர்வில் இந்தியா முழுக்க 829 பேர் வெற்றிபெற்றுள்ளனர். இதில் தமிழகத்தைச் சேர்ந்த தங்கங்கள் 60 பேர். மேலும், முதல் 100 இடங்களுக்குள் ஏழு தமிழர்கள் இடம்பெற்றுள்ளனர். இவை எல்லாவற்றையும்விட பெருமையான செய்தி, தமிழகத்தைச் சேர்ந்த விழிச்சவால் மாற்றுத்திறனாளிகளான பால நாகேந்திரன், பூரண சுந்தரியின் வெற்றி.
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

தோல்வியைப் பயிற்சியா எடுத்துக்கிட்டேன்!

பூரண சுந்தரி

‘`என் பெற்றோரால நான் பெற்ற வெற்றி இது. மேலும், பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள், நண்பர்கள், என்னுடன் பயிற்சி எடுத்துக்கிட்ட சக நண்பர்கள், பயிற்சி மையத்தினர், பொருளாதார உதவி செய்த நல்லுள்ளங்கள்னு, என் வெற்றிக்குத் துணை நின்றவங்க பலர்’’ என்று தன் பயணத்தின் இருளை அகற்றிய விளக்குகளைக் குறிப்பிட்ட பின்னரே பேச ஆரம்பிக்கிறார் பூரண சுந்தரி.

 பூரண சுந்தரி
பூரண சுந்தரி

மதுரை, சிம்மக்கல் மணி நகரில் வசிக்கும் முருகேசன் - ஆவுடை தேவி தம்பதியின் மகள் பூரண சுந்தரிக்கு ஐந்து வயதில் பார்வை நரம்பு சுருங்கி, பார்வை பறிபோனது. ‘‘ஆனா, அந்தக் குறையை நான் அதிகம் உணர்ந்துடாம, எனக்குக் கண்களா ஆக ஆரம்பிச்சுட்டாங்க என் அம்மாவும் அப்பாவும். அவங்க என்னை உருவாக்கக்கொண்டிருந்த நம்பிக்கையையும் மேற்கொண்ட முயற்சிகளையும் வார்த்தை களில் சொல்ல முடியாது. ரெண்டு பேரும் அவங்க நேரம் முழுவதையும் எனக்காகச் செலவழிச்சாங்க.

எப்பவும் நான் வகுப்பில் முதல் மாணவி.

10-ம் வகுப்புப் பொதுத்தேர்வில் 471, 12-ம் வகுப்புப் பொதுத்தேர்வில் 1,092 மார்க்ஸ் வாங்கினேன். இளங்கலை இலக்கியம் படிச்சாலும், தமிழ் இலக்கியங்கள் மேல எனக்கு ரொம்ப ஈடுபாடு.

சின்ன வயசுலயிருந்தே அம்மா, அப்பா பாடம் வாசிக்க வாசிக்க, அதை நல்லா உள்வாங்கிப் படிப்பேன். போட்டித் தேர்வுகள்வரை அப்படித்தான். மேலும் பள்ளி, கல்லூரி, பயிற்சி மையங்கள்னு எல்லா இடங்களிலும் எனக்குக் கண்களாக இருந்தவங்களுக்கு எல்லாம் நான் எத்தனை நன்றிகள் சொல்றதுன்னு தெரியலை. தன் கண்களை என் கண்களாக்கி, நூறு கண்களில் என்னைப் படிக்க வெச்சவங்க அவங்க எல்லாரும்தான்’’ என்று நெகிழ்கிறார் பூரண சுந்தரி. ‘‘இன்னிக்கு தமிழக முதல்வர், சகாயம் ஐ.ஏ.எஸ் என்று பலரும் எங்க பொண்ணை வாழ்த்துறாங்க... என் பொண்ணுக்குத் துணையாயிருந்த எல்லாருக்கும் அந்த வாழ்த்தில் பங்கிருக்கு’’ எனும் அவர் அம்மா ஆவுடை தேவிக்குக் கண்கள் ஈரமாகின்றன.

‘‘மதுரை மாவட்டத்தில் ஆட்சியராக இருந்த சகாயம் ஐ.ஏ.எஸ், உதயச்சந்திரன் ஐ.ஏ.எஸ் இவங்களோட பணி நடவடிக்கைகளைப் பற்றியெல்லாம் என் அம்மா, அப்பா சொன்ன தைக் கேட்டப்போதான், நானும் ஐ.ஏ.எஸ் ஆகணும் என்ற ஆசை எனக்கு வந்தது. 2016-ல் சிவில் சர்வீசஸ் தேர்வை எழுதத் தொடங்கினேன். சென்னை உள்ளிட்ட நகரங்களில் பயிற்சிக்காகத் தங்கிப் படிச்சேன். எடுத்தவுடன் வெற்றி கிடைக்கலை. ஆனாலும் தோல்விகண்ட ஒவ்வொரு முயற்சியையும் பயிற்சியா எடுத்துக்கிட்டேன்.

சிவில் சர்வீசஸ் மட்டுமல்லாம, டி.என்.பி.எஸ்.சி, வங்கித் தேர்வுன்னு 20-க்கும் மேற்பட்ட போட்டித் தேர்வுகளை மனம் தளராமல் எழுதினேன். 2018-ல் வங்கித் தேர்வில் வெற்றி பெற்று, இப்போ அரசு ஊரக வளர்ச்சி வங்கியில் வேலைபார்த்துக்கிட்டிருக்கேன். வேலைசெய்துகிட்டே, சிவில் சர்வீசஸ் தேர்வுக்கும் தொடர்ந்து பயிற்சி எடுத்துக்கிட்டுருந்தேன். என் பெற்றோர், நண்பர்கள், உதவி செய்தவர்கள்னு யாருமே இதுவரை ஒரு வார்த்தைகூட என்கிட்ட எதிர்மறையா சொல்லாம, நான் வெற்றி பெறப்போகும் நாளுக்காகக் காத்துக்கிட்டிருந்தாங்க. 2019-ம் வருஷம் நாலாவது முறையா எழுதினப்போ, அவங்க நம்பிக்கையை எல்லாம் இந்த முறை காப்பாத்திடணும்னு உறுதியா இருந்தேன்.

இந்திய அளவில் 296-வது ரேங்க் வாங்கி இப்போ நான் பெற்றிருக்கும் இந்த வெற்றி, இந்த 25 வயதில் எனக்கு இன்னும் பெரிய நம்பிக்கை யையும் உத்வேகத்தையும் கொடுத்திருக்கு. இதை வெற்றியின் முடிவா எடுத்துக்காம, இன்னொரு பெரிய பயணத்துக்கான தொடக்கமா எடுத்துக்கிட்டு, என் பணியில் சிறப்பா செயல்பட்டு, இன்னும் உங்ககிட்ட இருந்தெல்லாம் பாராட்டுகள் வாங்கிக்கிட்டே இருக்கணும்’’ என்று மனம்முழுக்க மகிழ்ச்சி யுடன் சொல்கிறார் பூரண சுந்தரி. இவர் தம்பி சரவணனும் இப்போது அரசுப் போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சியில் இருக்கிறார்.

புன்னகை முகம் மாறாமல் பேசிக் கொண்டிருந்த தன் மகளைப் பெருமையுடன் பார்த்துக்கொண்டே இருந்த அவர் தந்தை முருகேசன், ‘‘நான் தனியார் நிறுவனத்தில் விற்பனை பிரதிநிதியா வேலைபார்க்கிறேன். வாழ்க்கையில நாங்க பட்ட கஷ்டங்களை எல்லாம் எங்க பொண்ணு உணர்ந்து படிச்சிச்சு. இன்னிக்கு எங்களுக்கு இவ்ளோ பெரிய பெருமையைக் கொடுத்திருக்கு. கீழ இருக்கிறவங்க மேல வர்றது, நம்மளை மாதிரி கீழ இருக்கிறவங்களையும் மேலே தூக்கிவிடத் தானே? எங்களை மாதிரி உள்ள ஏழை, எளிய மக்களுக்கு பூரண சுந்தரி அப்படி ஓர் ஏணியா இருக்கும். மாற்றுத்திறனாளிப் பிள்ளைங்களை எல்லாம் என் பிள்ளைங்களா நினைச்சு சொல்றேன்... உங்க எல்லாராலயும் இப்படி ஒரு வெற்றியைப் பெற முடியும்’’ என்கிறார் நெகிழ்ச்சியுடன்.

கோச்சிங் சென்டர் போகாமலேயே பெற்ற வெற்றி இது!

கணேஷ்குமார்

சிவில் சர்வீசஸ் தேர்வில் தமிழ்நாட்டில் முதலிடமும், தேசிய அளவில் ஏழாவது இடமும் பெற்று சாதித்திருக்கிறார் நாகர்கோவிலைச் சேர்ந்த கணேஷ்குமார். கோச்சிங் சென்டர் தவிர்த்து வீட்டிலிருந்து படித்தே அவர் பெற்றிருக்கும் வெற்றி இது என்பது சிறப்பு.

 கணேஷ்குமார்
கணேஷ்குமார்

“எங்க சொந்த ஊரு மதுரை. அப்பா மத்திய அரசு ஊழியர் என்பதால வேலையின் காரணமா நாகர்கோவில்ல இருக்கோம். கான்பூர் ஐஐடி-யில் பி.டெக் கம்ப்யூட்டர் சயின்ஸும் அகமதாபாத்தில் எம்.பி.ஏ-வும் முடிச்சிட்டு, ரெண்டு வருஷம் பெங்களூர்ல ஒரு தனியார் நிறுவனத்துல வேலைபார்த்தேன். 2018-ல் முதன்முதலா சிவில் சர்வீசஸ் தேர்வு எழுதினப்போ வெற்றிபெற முடியலை. அதனால, போன வருஷம் வேலையை விட்டுட்டு முழு நேரமா தேர்வுக்குப் படிச்சேன்.

சிவில் சர்வீசஸ் எக்ஸாம் டாப்பர்ஸ் எல்லாம், தங்களோட பிளாக்ல (Blog) அவங்க எப்படிப் படிச்சாங்க, என்ன புக்ஸ் படிச்சாங்கன்னு எழுதியிருப்பாங்க. ஒவ்வொரு வருஷமும் டாப் 10 ரேங்க்ல வர்றவங்க எழுதுற பிளாக்கை எல்லாம் நான் படிச்சிருவேன். அப்படி, வெற்றியாளர்களை ஃபாலோ பண்ணி படிச்சதால அந்த வழியைப் புரிஞ்சுக்க முடிஞ்சது.

என்னோட சீனியர்ஸ் சிலர் ஐ.ஏ.எஸ் எக்ஸாம் எழுதி இப்போ சர்வீஸ்ல இருக்காங்க. ‘கோச்சிங் க்ளாஸ் தேவையில்ல, நீயே படிக்கலாம்’னு எனக்கு நம்பிக்கை கொடுத்தவங்க அவங்கதான். கோச்சிங் க்ளாஸுக்கு ஒன்றரை லட்சம் ஃபீஸ், சென்டருக்குப் பக்கத்துலேயே ரூம் எடுத்துத் தங்குற செலவுனு இதையெல்லாம் தவிர்க்க, வீட்டுலயிருந்தே படிச்சேன். சில சென்டர்கள் 15,000 ரூபாய் கட்டணத்தில் ஆன்லைன்லேயே தேர்வு வைப்பாங்க. அந்தத் தேர்வுகளை எழுதி பயிற்சி எடுத்துக்கிட்டேன்.

யு.பி.எஸ்.சி தேர்வுக்கான முதல்படி, சிலபஸ் பத்தி நல்லா புரிஞ்சுக்கணும். அடுத்து, எக்ஸாம் பேட்டர்ன் பத்தி புரிஞ்சுக்கணும். சிலபஸ் ஃபுல்லா படிச்சாலும், தேர்வுப் பயிற்சி முக்கியம்னு முதன்முறை நான் தேர்வில் தோற்றப்போ தெரிஞ்சுக்கிட்டேன். சிலர் ஒரு டாப்பிக்குக்கு அஞ்சு புக்ஸ் படிப்பாங்க. ஆனா, ஒரு டாப்பிக்குக்கு ஒரு புக் மட்டும், முழுமையா படிச்சாலே போதும். சிவில் சர்வீசஸ்னா ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் மட்டுமல்ல... இதுல 24 பணிகள் இருக்கு.

மொத்தம் 800+ பணியிடங்களுக்கு 10 லட்சம் பேர் அப்ளை பண்ணுறாங்கனா, இதில் உள்ள போட்டியைப் புரிஞ்சு படிக்கணும். திட்டமிட்டுப் படிச்சா வெற்றி நிச்சயம். அடுத்த முறை தமிழ்நாட்டிலிருந்து இன்னும் நிறைய பேர்கள் ரேங்க் லிஸ்ட்டில் இடம்பிடிக்கணும்’’ என்கிறார் வாழ்த்துடன்.

பட்டிக்காட்டுல பிறந்தாலும் ஐ.ஏ.எஸ் ஆகலாம்!

அபிநயா

கரூர் மாவட்டம், க.பரமத்தி அருகில் உள்ள ஆதியப்பக்கவுண்டனூர் என்ற பின்தங்கிய கிராமத்தைச் சேர்ந்த அபிநயா, சிவில் சர்வீசஸ் தேர்வு முடிவில் இந்திய அளவில் 559-வது இடத்தைப் பிடித்திருக்கிறார்.

அபிநயா
அபிநயா

“அப்பா சதாசிவம், அம்மா சிவகாமி, என் படிப்புச் செலவுக்காகத் தன் படிப்பை பி.காம் உடன் நிறுத்திக்கிட்ட அண்ணன் விவேகானந்தன்னு சாதாரண விவசாயக் குடும்பம். இருக்கிற கொஞ்சம் நிலமும் வானம் பார்த்த பூமிங்கிறதால, ஆடு மாடு வளர்த்த வருமானத்தில்தான் எங்களைப் படிக்க வெச்சாங்க. கோவை வேளாண்மை பல்கலைக்கழகத்தில் பி.எஸ்ஸி அக்ரி முடிச்சதும் சூட்டோட சூடா, அம்மா நகையை அடகுவைத்துக் கொடுத்த பணத்தோடு சென்னைக்கு போய் ஐ.ஏ.எஸ் கோச்சிங் ஸ்கூல்ல சேர்ந்தேன்.

2015, 2016, 2017, 2018-னு நான்கு முயற்சிகளிலும் தோல்வி. முடியாத ஓர் இலக்கை துரத்திட்டிருக்கோமோனு நான் சோர்ந்துபோக, ‘27 வயசாச்சு, பொண்ணுக்குக் கல்யாணம் பண்ணுங்க’னு பேச்சு ஆரம்பிச்சிடுச்சு. ‘ஐ.ஏ.எஸ் ஆனதுக்கு அப்புறம்தான் அபிக்குக் கல்யாணம்’னு அம்மா எல்லார்கிட்டயும் சொன்னப்போ, என் மேல இவ்வளவு நம்பிக்கை வெச்சுருக்கிற இவங்களுக்காகவாவது ஜெயிக்கணும்னு நினைச்சேன். இதற்கிடையில், டிஎன்பிஎஸ்சி நடத்திய குரூப்-2 தேர்வில் வென்று பரமக்குடி வட்டார வேளாண்மைத்துறை அதிகாரி ஆனேன். ‘சரி இது போதும்’னு நானோ என் குடும்பமோ நினைக்கலை. 2019-ல் அடுத்த முயற்சி. இதோ இப்போ வெற்றிக்கோட்டைத் தொட்டுவிட்டேன்.

இந்த வெற்றி, எளிய கிராமத்துப் பெண்களின் வெற்றி. ‘பட்டிக்காட்டுல பிறந்தாலும் அபிபோல நாமளும் ஐ.ஏ.எஸ் ஆகலாம்’ என்ற நம்பிக்கையை அவங்களுக்கு நான் கொடுத்திருக்கிறதைத்தான் உண்மையில் என்னோட முக்கியமான வெற்றியா நான் உணர்கிறேன்!”

ஐஸ்வர்யா
ஐஸ்வர்யா

கல்யாணத்துக்கு அப்புறம் படிச்ச அம்மாதான் ரோல்மாடல்!

ஐஸ்வர்யா

சிவில் சர்வீசஸ் தேர்வில் தமிழக அளவில் 2-வது இடத்தையும், இந்திய அளவில் 47-வது இடத்தையும் பிடித்துள்ளார் ஐஸ்வர்யா. பண்ருட்டியை அடுத்த மருங்கூர் முந்திரி விவசாயி ராமநாதன், இளவரசி தம்பதியின் மகள். ‘‘2004-ம் ஆண்டு சுனாமியப்போ எங்க கடலூர் மாவட்டத்தில் ஐ.ஏ.எஸ் அதிகாரியா இருந்த ககன்தீப் சிங் பேடி, பாதிக்கப்பட்ட பகுதிகள்ல நிவாரணப் பணிகளை மிகவும் திறமையாகவும் துடிப்புடனும் செய்து மற்ற மாவட்டங்களுக்கும் முன்னோடியா இருந்தார். அவரைப்போல நாமளும் ஐ.ஏ.எஸ் ஆகணும்னு ஓர் இலக்கு மனசுக்குள்ள வேரூன்றியது. என் முயற்சிகளுக்கெல்லாம் துணையாகவும் வழிகாட்டியாகவும் இருந்தவங்க, அம்மா இளவரசி. அம்மாவுக்கு சின்ன வயசிலேயே திருமணமாகிட்டதால, அதுக்கு அப்புறம்தான் இளங்கலைப் படிப்பையே முடிச்சாங்க. நான் கல்லூரியில முதலாமாண்டு படிச்சுக்கிட்டு இருக்கும்போது, அவங்க டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 ஏ தேர்வெழுதி வெற்றி பெற்றாங்க. இப்போ தமிழக அரசின் கல்வித் துறையில வேலைபார்க்கிறாங்க. அரசுத் தேர்வுக்குத் தயாராவதில் என் அம்மா தான் எனக்கு ரோல்மாடல். என் வயதுத் தோழிகள் எல்லாருக்கும் திருமணமாகிடுச்சு. என்றாலும், என்னைத் திருமணத்துக்குக் கட்டாயப்படுத்தாம, ‘நீ படிம்மா’னு சொன்ன எங்கப்பா, அம்மா ரெண்டு பேருக்கும் இப்போ என் வெற்றி மூலமா நன்றி சொல்லிவிட்டேன்!”

பிரியங்கா
பிரியங்கா

பாதுகாப்புக்கும் வளர்ச்சிக்கும் உழைப்பேன்!

பிரியங்கா

சிவில் சர்வீசஸ் தேர்வில் தமிழக அளவில் மூன்றாம் இடத்தைப் பெற்றுள்ள பிரியங்கா பள்ளிப்படிப்பை கடலூர், பண்ருட்டியில் உள்ள தனியார் பள்ளியில் முடித்துவிட்டு, சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பயோ-மருத்துவப் பிரிவில் பொறியியல் படித்தவர். ‘‘2018-ம் வருஷம் தேர்வெழுதினேன், வெற்றி கிடைக்கலை. மறுபடியும் 2019-ம் வருஷம் எழுதி, இப்போ அகில இந்திய அளவில் 68-வது இடமும், தமிழக அளவில் மூன்றாவது இடமும் கிடைச்சிருக்கு. விவசாயிகள், விளிம்புநிலை மக்கள், பெண்கள்னு இவங்க பாதுகாப்புக்கும் வளர்ச்சிக்கும் உழைப்பேன்!”