Published:Updated:

தாய் தெய்வச்சிலை... பெருங்கற்கால தமிழர் அடையாளம்... சிலிர்க்கவைக்கும் வரலாறு!

தாய் தெய்வச்சிலை
பிரீமியம் ஸ்டோரி
தாய் தெய்வச்சிலை

சிலையின் வரலாற்றுப் பெருமை பற்றி அறியாத அவ்வூர் மக்கள், அதைக் ‘கூத்தனார் அப்பன்’ என்று அழைத்து, மஞ்சள், குங்குமம் வைத்து எளிமையான முறையில் வழிபட்டு வருகிறார்கள்

தாய் தெய்வச்சிலை... பெருங்கற்கால தமிழர் அடையாளம்... சிலிர்க்கவைக்கும் வரலாறு!

சிலையின் வரலாற்றுப் பெருமை பற்றி அறியாத அவ்வூர் மக்கள், அதைக் ‘கூத்தனார் அப்பன்’ என்று அழைத்து, மஞ்சள், குங்குமம் வைத்து எளிமையான முறையில் வழிபட்டு வருகிறார்கள்

Published:Updated:
தாய் தெய்வச்சிலை
பிரீமியம் ஸ்டோரி
தாய் தெய்வச்சிலை

ஆதியிலிருந்து நாம் தாய்வழிச் சமூகம் என்பது, நம் இனக்குழுவுக்கான தனிச்சிறப்பு. அதற்கு மற்றுமொரு சான்றாக, முக்கிய வரலாற்று ஆவணமாக இருக்கிறது திருவண்ணாமலை அருகே கண்டுபிடிக்கப் பட்டுள்ள தாய் தெய்வச்சிலை. மூன்றாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த பெருங்கற்கால தமிழர் நாகரிகத்தை கண்முன் கொண்டுவந்து பிரமிப்பூட்டுகிறாள் அந்த மூத்தாள்.

திருவண்ணாமலை மாவட்டம், தானிப் பாடிக்கு அருகிலிருக்கிறது தா.மோட்டூர் கிராமம். இங்குள்ள, பசுமை படர்ந்த பயிர் நிலங்களுக்கு நடுவில் கம்பீராக வீற்றிருக்கிறது, தாய் தெய்வச்சிலை. கோயில் இல்லை; கோபுரமும் இல்லை. ஆனால், சிலை வழிபாடு நடக்கிறது. 10 அடி உயரம், இருபுறமும் கைகள் போன்ற அமைப்பு, வட்டமான தலைப் பகுதியுடன் தெய்வக்கல்லின் தோற்றம் இருக்கிறது. ஆணா, பெண்ணா என்ற பாலின வேறுபாடும், தெளிவான அங்க அமைப்புகளும் இல்லை. ஆனாலும், சிலையின் தோற்றம் வளமையைக் குறிக்கிறது. பெண்களே வளமைக் குரியவர்கள். அதனாலேயே, ‘தாய் தெய்வம்’ என்று சங்க காலத்தில் பெண்களை முன்னிலைப்படுத்தியிருக்கிறார்கள்.

தாய் தெய்வச்சிலை... பெருங்கற்கால தமிழர் அடையாளம்... சிலிர்க்கவைக்கும் வரலாறு!

மூன்றாயிரம் ஆண்டுகள் தொன்மையான இந்தச் சிலை, சிந்து சமவெளி நாகரிகத்துக்கு இணையானதொரு பண்டைய கலாசாரம் மற்றும் வாழ்க்கை முறையோடு ஒத்துப்போவ தாகவும் பிரமிப்புடன் சொல்கிறார்கள் தொல்பொருள் ஆய்வாளர்கள்.

சிலையின் வரலாற்றுப் பெருமை பற்றி அறியாத அவ்வூர் மக்கள், அதைக் ‘கூத்தனார் அப்பன்’ என்று அழைத்து, மஞ்சள், குங்குமம் வைத்து எளிமையான முறையில் வழிபட்டு வருகிறார்கள். சிலையைப் பராமரித்துக் கொள்ளும் விவசாயி ராமசாமி மற்றும் இதைப் பற்றிய விவரமறிந்த ஊர் பெரியவர்கள் சிலரிடம் பேசினோம்.

‘‘ ‘இந்தச் சாமி சக்தி வாய்ந்தது; பயபக்தியோட இருந்துக்கோங்க’னு பாட்டனும் முப்பாட்டனும் சொல்லிட்டுப் போனாங்க. நாங்களெல்லாம் இதை கூத்தாண்டவர் சாமினு கும்பிடுறோம். ஆடி மாசம் பொறந்திடுச்சினா போதும்... ஒண்ணாவது ஞாயித்துக்கிழமை இல்லைன்னா மூணாவது ஞாயித்துக்கிழமை விஷேசமா விழா நடத்திடுவோம். ஆடு, பன்னி, கோழியைப் பலி கொடுத்து முப்பூசை நடத்தி சாமிக்குப் படையல் போடுவோம்.

அதுக்கு முன்னாடி, சாமிக்கு அபிஷேகம் செய்யுறதுக்காக ஊர்ல இருக்கிற ஒவ்வொரு வீட்டுல இருந்தும் ஒரு குடம் தண்ணீர் எடுத்து வந்திடணும். எண்ணெய், சீயக்காய் தேய்ச்சு சிலையை சுத்தம் செஞ்சிடுவோம். 108 குடம் தண்ணியை வரிசையா வெச்சிக்குவோம். ஏணி போட்டு ஏறி ஒவ்வொரு குடமா எடுத்து சாமிக்கு அபிஷேகம் செய்வோம். அப்புறம், மஞ்சள், குங்குமத்தால பொட்டு வெச்சு அலங்கரிச்ச பின்னாடி முப்பூசை செய்வோம்.

இந்த சாமிகிட்ட நாங்க என்ன வேண்டுதல் வெச்சாலும் நடந்திடுது. மழைத்தண்ணி பெய்யுது. ஊரும் செழிப்பா இருக்கு. கல்யாணம் நடக்கணும், குழந்தை பாக்கியம் வேணும், நிலம் வாங்கணும், வீடு வாசல் கட்டணும்னு சுத்து வட்டாரத்துல இருக்குற வங்க நிறைய பேர் வந்து சாமிகிட்ட வேண்டிக்கிட்டுப் போவாங்க. சீக்கிரமாவே நெனச்சது நிறைவேறிடும்’’ என்று ஆர்வத் துடன் சொன்னவர்கள், கோயிலோ, கூரையோ இன்றி வானத்துக்குக் கீழ் இருக் கும் இந்தச் சிலையின் பாதுகாப்பு பற்றிப் பேசினார்கள்.

தாய் தெய்வச்சிலை... பெருங்கற்கால தமிழர் அடையாளம்... சிலிர்க்கவைக்கும் வரலாறு!

‘‘எங்க பாட்டனுங்க இந்தச் சாமியைப் பத்தி ஒரு கதையையும் சொல்லியிருக்காங்க. பக்கத்துல இருக்கிற நிலத்துல ரெண்டு விடலப் பசங்க மாடு மேய்ச்சிக்கிட்டு இருந்திருக்காங்க. அப்போ, இந்த தெய்வக் கல்லு மேல ஏறி உட்கார்ந்து குதிரை சவாரி மாதிரி விளையாடியிருக்காங்க. அடுத்த கொஞ்ச நாளிலேயே அவங்களுக்கு அசம்பாவிதம் நடந்துடுச்சுனு சொன்னாங்க. பாட்டன் சொன்னது உண்மையோ, பொய்யோ... அப்படி சொல்லி வெச்சிருக் கிறதுனால இத்தனை வருஷமாகியும் தெய்வக்கல்லை யாரும் சேதப்படுத்தல’’ என்கிறார்கள் பயபக்தியுடன்.

இந்தச் சிலைக்குப் பின்னால் புதையுண்டிருக்கும் பெருங்கற்கால தமிழர் நாகரிகத்தைக் கண்டுபிடிக்க, 40 ஆண்டு களுக்கு முன்னரே இந்திய தொல்லியல் துறையில் ஆய்வாளராக இருந்த

பி.நரசிம்மையா முயன்றார். 1978-1979 கால கட்டம் அது. ஓராண்டாகக் கல் வட்டங்களில் அகழ்வாய்வு நடத்திய நரசிம்மையாவுக்கு, பெருங்கற்கால மனிதர்கள் பயன்படுத்திய கறுப்பு, சிவப்பு நிற மண்கலன்கள், தாங்கிகள், கிண்ணங்கள் போன்ற தொல்லியல் படிமங்கள் கிடைத்துள்ளன. பெருங்கற்காலத்தில், இறந்தவர்களுக்கான தாழிகளைப்போல பயன்படுத்தப்பட்ட, கால்களைக்கொண்ட அமைப்புடைய ஈமப்பேழை ஒன்றையும் அவர் கண்டுபிடித்ததாகக் கூறப்படுகிறது.

நரசிம்மையாவுக்குப் பிறகு, பல அறிஞர்களும் இந்தப் பகுதியை ஆய்வு செய்திருக்கிறார்கள். இதையடுத்து, இந்திய தொல்லியல் துறை, தேசிய முக்கியத்துவம் வாய்ந்ததாக இந்தத் தாய்ச் சிலையை அறிவித்தது. சிலையின் பாதுகாப்புக் கருதி சேதப்படுத்தினாலோ, அதன் தோற்றப்பொலிவைச் சீர்குலைத்தாலோ ஒரு லட்சம் அபராதத்துடன் இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை என்று எச்சரித்து அருகிலேயே பலகையும் வைத்திருக்கிறது. ஆனால், இந்திய தொல்லியல் துறை முழுமையான அகழ்வாய்வை மேற்கொள்ளாமல் ஆண்டுகளைக் கடத்திக்கொண்டிருக்கிறது.

‘மத்திய, மாநில அரசுகள் இந்தச் சிலையைப் பாதுகாத்து அதன் வரலாற்றுச் சிறப்பை வெளிக்கொண்டு வர வேண்டும். அதற்கு முன், தாய்ச்சிலையை பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னமாக அறிவிக்க வேண்டும்’ என்று அ.தி.மு.க ஆட்சியின்போது, திருவண்ணா மலை மாவட்ட ஆட்சியராக இருந்த கந்தசாமி, அரசுக்கு முன்மொழிவு அறிக்கை அனுப்பி யிருந்தார். அ.தி.மு.க அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. என்றாலும், தமிழர் பெருமையை உணர்த்தும் வகையில் தாய் தெய்வச்சிலையின் மாதிரி வடிவமைப்பு திருவண்ணாமலை அரசு அருங்காட்சியக நுழைவு வாயிலில் நிறுவப்பட்டுள்ளது. இங்கு வரும் வரலாற்று ஆய்வாளர்களும், இளைஞர்கள் பலரும் சங்ககால தொடர்புடைய தாய்ச் சிலை வடிவமைப்பைப் பார்த்து வியப்படைந்து வருகிறார்கள். அதன் தொடர்ச்சியாக, தா.மோட்டூர் கிராமத்துக்கும் சென்று தொல்லியல் படிமங்களைத் தேடுகிறார்கள்.

தாய் தெய்வச்சிலை... பெருங்கற்கால தமிழர் அடையாளம்... சிலிர்க்கவைக்கும் வரலாறு!

இதுகுறித்து, திருவண்ணாமலை அருங் காட்சியகக் காப்பாட்சியர் சரவணனிடம் பேசினோம். ‘‘தாய் தெய்வம் என்பது உருவ வழிபாட்டுக்கெல்லாம் முந்தையது. பெருங் கற்காலத்தில் வாழ்ந்த மக்கள், இறந்தவர்களின் உடலுக்கு உரிய மரியாதை செலுத்தி நினைவுச் சின்னங்கள் எழுப்பியிருக்கிறார்கள். அதிலிருந்து, அவர்களின் வாழ்க்கை முறை, அணிகலன்கள், புழங்குப் பொருள்கள், வழிபாடு உள்ளிட்ட வரலாற்றுத் தகவல்கள் கிடைக்கின்றன. அப்படியானதொரு வரலாற்றுச் சிற்பம்தான் தா.மோட்டூரிலுள்ள தாய் தெய்வக்கல். பார்ப்பதற்கு விசிறி மாதிரி இருப்பதால் சிலர் விசிறி கல் என்கிறார்கள். உண்மையில், ஆதிகால மனிதனின் வாழ்வியலுக்கு இந்தச் சிலையே சிறந்த சான்று. பலகை போன்று சிலை இருப்பதால் கவனமாகப் பாதுகாக்க வேண்டும்.

உள்ளூர் மக்கள் இதை கூத்தாண்டவர் என்ற பெயரில் வழிபடுகிறார்கள். கூத்தாண்டவரோ, தாய் தெய்வமோ... எந்தப் பெயர் வைத்து வணங்கினாலும், இது தமிழர் வரலாற்றைக் கூறும் அரியவகை சிற்பம். தமிழகத்தில், வேறெங்கும் இதுபோன்ற சிலை கிடைக்க வில்லை என நினைக்கிறேன். இங்கு ஆய்வு செய்தால், மூன்றாயிரம் ஆண்டுகளுக்கு முன் தமிழன் எப்படியெல்லாம் வாழ்ந்துள்ளான் என்பதைக் கண்டறிய முடியும்’’ என்கிறார் நம்பிக்கையோடு.

தாய் தெய்வச்சிலை... பெருங்கற்கால தமிழர் அடையாளம்... சிலிர்க்கவைக்கும் வரலாறு!

ஆயிரமாயிரம் ஆண்டுகள் வெயில், மழையை வாங்கியபடி வெட்டவெளியில் வீற்றிருக்கிறாள் அந்த ஆதித்தாய்... உலகின் வரலாற்றுப் புத்தகமாக!