Published:Updated:

`பள்ளிகள் திறப்பு அரசாணை நிறுத்திவைப்பு!’ - அக்டோபர் 31 வரை தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு

ஊரடங்கு தளர்வு - கத்திப்பாரா, சென்னை
ஊரடங்கு தளர்வு - கத்திப்பாரா, சென்னை ( ராகேஷ் பெ )

புதிய ஊரடங்கில் திரைப்படப் படப்பிடிப்புகளுக்கு 100 பேர் வரை அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. புறநகர் மின்சார ரயில் போக்குவரத்துக்குத் தடை தொடரும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

தமிழகத்தில் ஊரடங்கை நீட்டிப்பது, வேறு என்ன மாதிரியான தளர்வுகளை வழங்கலாம் ஆகியவை குறித்து மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்தினார். கொரோனா பாதிப்பு காரணமாக தமிழகத்தில் கடந்த மார்ச் 24-ம் தேதி முதல் ஊரடங்கு அமலில் இருந்துவருகிறது. நாளையுடன் 8-ம் கட்ட ஊரடங்கு முடிவடைய இருக்கும் நிலையில், 9-வது கட்ட ஊரடங்கு தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி புதிய அறிவிப்புகளை வெளியிட்டிருக்கிறார்.

அரசுப் பள்ளிகள்
அரசுப் பள்ளிகள்

பள்ளிகள் திறப்பு தொடர்பான அரசாணை நிறுத்திவைப்பு!

அதில், தமிழகத்தில் அக்டோபர் மாதம் 31-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு செய்யப்பட்டிருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஏற்கெனவே இருக்கும் சில தளர்வுகளில் சில கூடுதல் தளர்வுகளும் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி, சென்னை விமான நிலையத்தில் 100 விமானங்கள் தரையிறங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. உள்துறை அமைச்சகம் அனுமதித்த வழித்தடங்களில் மட்டுமே விமானப் போக்குவரத்து நடக்கும். மேலும், பள்ளிகள் திறப்பு தொடர்பான அரசாணை நிறுத்திவைக்கப்பட்டிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

உணவகங்களில் பார்சல் சேவைக்கு இரவு 10 மணி வரை அனுமதி!

புதிய ஊரடங்கில் திரைப்படப் படப்பிடிப்புகளுக்கு 100 பேர் வரை அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. புறநகர் மின்சார ரயில் போக்குவரத்துக்கு தடை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரம், உணவகங்கள், தேநீர் கடைகள் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் உணவகங்களில் பார்சல் சேவைக்கு இரவு 10 மணி வரை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு
ஊரடங்கு

அரசியல், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள், மதம் சார்ந்த கூட்டங்கள், ஊர்வலங்களுக்குத் தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. கடற்கரை, பூங்காக்கள், அருங்காட்சியகங்கள், சுற்றுலாத் தலங்கள் திரையரங்குகள், நீச்சல்குளங்கள், பொழுதுபோக்கு பூங்காக்களுக்கான தடை தொடரும். பொது இடங்களில் ஐந்து பேருக்கு மேல் கூட விதிக்கப்பட்டிருக்கும் தடை தொடரும். வாரச்சந்தைகள் மட்டும் உரிய வழிகாட்டு நெறிகளைப் பின்பற்றி இயங்க அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது” என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு