Election bannerElection banner
Published:Updated:

`சசிகலா முடிவு சோர்வை ஏற்படுத்தியிருக்கிறது; எனினும் தேர்தலில் அ.ம.மு.க போட்டியிடும்!’ - தினகரன் #ElectionUpdates

சசிகலா, தினகரன்
சசிகலா, தினகரன்

தமிழகத் தேர்தல் தொடர்பான செய்திகள் மற்றும் லேட்டஸ்ட் செய்திகளின் தொகுப்பு..!

03 Mar 2021 10 PM

சசிகலா முடிவு... தினகரன் சொல்வதென்ன?

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையிலிருந்து திரும்பிய சசிகலா, தான் தீவிர அரசியலில் ஈடுபடப்போவதாக அறிவித்திருந்தார். இந்தநிலையில், பொது எதிரியான தி.மு.க-வை வீழ்த்த வேண்டும் என்றும், ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்கள் அனைவரும் ஒற்றுமையுடன் பணியாற்ற வேண்டும் என்றும் கூறிய சசிகலா, தான் அரசியலிலிருந்து விலகுவதாக அறிவித்திருக்கிறார்.

`ஒற்றுமையாகப் பணியாற்ற வேண்டும்; நான் அரசியலைவிட்டு ஒதுங்குகிறேன்!’ - சசிகலா

இது தொடர்பாக இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், சசிகலாவின் முடிவு தனக்கு சோர்வை ஏற்படுத்தியிருப்பதாகவும், அ.ம.மு.க தொண்டர்களுக்கும் இது சோர்வை ஏற்படுத்தியிருக்கும் என்றும் தெரிவித்திருக்கிறார். எனினும், வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் அ.ம.மு.க போட்டியிடும் என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்திருக்கிறார்.

சசிகலா, தினகரன்
சசிகலா, தினகரன்

``வரும் 10-ம் தேதி வேட்பாளர் பட்டியல் வெளியிட்ட பிறகு பிரசாரம் குறித்து முழுமையாகத் தெரிவிக்கிறேன். அனைவரும் ஒற்றுமையாக இருக்க, தான் அரசியலிலிருந்து ஒதுங்குவதாக சசிகலா தெரிவித்திருக்கிறார்’’ என டி.டி.வி.தினகரன் தெரிவித்தார்.

03 Mar 2021 1 PM

அ.தி.மு.க-வில் சசிகலா, தினகரனுக்கு இடமில்லை - அமைச்சர் ஜெயக்குமார்

``அ.தி.மு.க கூட்டணியில் அ.ம.மு.க., சசிகலா இணைவதற்கு எந்தவிதச் சாத்தியமும் இல்லை, 100% வாய்ப்பும் இல்லை. யாரும் எங்களுக்கு நெருக்கடி கொடுக்க முடியாது. பா.ஜ.க எங்கள் உட்கட்சி விவகாரத்தில் தலையிடுவதும் இல்லை. அ.தி.மு.க-வை பொறுத்தவரை கொள்கை வேறு, கூட்டணி வேறு. நாங்கள் ஏற்கெனவே எடுத்த முடிவுதான் இறுதி’’ என்று அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்கள் சந்திப்பில் கருத்து தெரிவித்திருக்கிறார்.

03 Mar 2021 1 PM

சசிகலாலின் பலம், பலவீனம்  இ.பி.எஸ் - ஓ.பி.எஸ்-க்கு தெரியும்

பா.ஜ.க தமிழகத் தேர்தல் பொறுப்பாளர் சி.டி.ரவியிடம் அ.தி.மு.க கூட்டணியில் சசிகலா மற்றும் அ.ம.மு.க இணைக்கப்படுமா என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, ``சசிகலாவின் பலம், பலவீனமெல்லாம் இ.பி.எஸ்., ஓ.பி.எஸ்-க்கு நன்றாகத் தெரியும். அவர்களைக் கூட்டணியில் இணைப்பது பற்றி, அ.தி.மு.க-தான் முடிவு செய்ய வேண்டும். பா.ஜ.க - அ.தி.மு.க தொகுதிப் பங்கீடு சுமுகமாக நடந்துகொண்டிருக்கிறது” என்றார்.

03 Mar 2021 1 PM

12 சீட் கேட்டிருக்கிறோம் - த.மா.க

அ.தி.மு.க கூட்டணியில், தமிழ் மாநில காங்கிரஸ் கூட்டணிப் பங்கீடு குறித்துப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. பேச்சுவார்த்தைக்கு பின் செய்தியாளர்களைச் சந்தித்த த.மா.க மூத்த நிர்வாகி கோவை தங்கம், ``அ.தி.மு.க கூட்டணியில் த.மா.க-வுக்கு 12 இடங்கள் சைக்கிள் சின்னத்தில் போட்டியிட ஒதுக்க வேண்டும் என்று கேட்டிருக்கிறோம்“ என்றார்.

03 Mar 2021 11 AM

சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார்!

சரத்குமார்
சரத்குமார்

தூத்துக்குடியில், சமத்துவ மக்கள் கட்சியின் 6-வது மாநிலப் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றுவருகிறது. இதில் கட்சியின் தலைவராகவும், பொதுச்செயலாளராகவும் மீண்டும் சரத்குமாரும், பொருளாளராக மீண்டும் சுந்தரேசனும் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்கள். ராதிகா சரத்குமாருக்கு முதன்மை துணைப் பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட்டிருக்கிறது. கடந்த பொதுக்குழுவில் பதவியேற்ற மாநில, மாவட்ட நிர்வாகிகள் அதே பதவியில் தொடர்வதாக தலைவர் மற்றும் பொதுச் செயலாளர் சரத்குமார் அறிவித்திருக்கிறார்.

- இ. கார்த்திகேயன்

03 Mar 2021 10 AM

கூட்டணியில் இழுபறி... தீவிர ஆலோசனையில் பா.ஜ.க!

கமலாலயம்
கமலாலயம்

அ.தி.மு.க கூட்டணியில் இன்னும் பா.ஜ.க-வுக்கான தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்படவில்லை. இந்தநிலையில், சென்னை பா.ஜ.க தலைமை அலுவலகத்தில் பா.ஜ.க நிர்வாகிகள் அவசர ஆலோசனையில் ஈடுபட்டிருக்கிறார்கள். தமிழக பா.ஜ.க தலைவர் எல்.முருகன், சி.டி.ரவி, கிஷன் ரெட்டி, தேசிய விநாயகம் உள்ளிட்டோர் இந்த ஆலோசனையில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

03 Mar 2021 10 AM

`தி.மு.க தேர்தல் அறிக்கை மார்ச் 11-ல் வெளியீடு!'

ஸ்டாலின்
ஸ்டாலின்

தமிழகத்தில் தேர்தல் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியிருக்கிறது. கட்சிகள் ஒருபுறம் தங்கள் கூட்டணியை இறுதி செய்யும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுவருகின்றன. இதன் அடுத்தகட்டமாக கட்சிகள் தற்போது தேர்தல் அறிக்கைப் பணிகளிலும் முழுமையாக ஈடுபட்டுவருகின்றன. அந்தவகையில் தி.மு.க தேர்தல் அறிக்கை, மார்ச் 11-ல் வெளியிடப்படும் என அந்தக் கட்சியின் தலைவர் ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான அறிக்கையை மார்ச் 11-ம் தேதி வெளியிடுவதாகவும், தமிழகத்தின் அனைத்துத் தரப்பு மக்களை ஈர்க்கும்விதமாக தேர்தல் அறிக்கை இருக்கும் எனவும் ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு