Election bannerElection banner
Published:Updated:

Election Updates: தி.மு.க கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 இடங்கள்!

முத்தரசன்
முத்தரசன் ( ம.அரவிந்த் )

தமிழகத் தேர்தல் தொடர்பான செய்திகள் மற்றும் லேட்டஸ்ட் செய்திகளின் தொகுப்பு..!

05 Mar 2021 5 PM

தி.மு.க - சி.பி.ஐ உடன்படிக்கை கையெழுத்தானது!

தி.மு.க கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட கட்சிக்கு ஆறு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. கூட்டணிக்கான உடன்படிக்கை இன்று அண்ணா அறிவாலயத்தில் கையெழுத்தானது.

முன்னதாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மூன்று இடங்கள், மனிதநேய மக்கள் கட்சி இரண்டு இடங்கள், விடுதலைச் சிறுத்தைகள் ஆறு இடங்கள் என ஒதுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், காங்கிரஸ் உடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்துவருகிறது.

05 Mar 2021 2 PM

அ.தி.மு.க முதல் வேட்பாளர் பட்டியல் வெளியானது!

2021 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடவிருக்கும் அ.தி.மு.க வேட்பாளர்களின் முதல் பட்டியல் வெளியிடப்பட்டிருக்கிறது. அந்தப் பட்டியலில் முதலமைச்சார் பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உட்பட ஆறு பேரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

வேட்பாளர் மற்றும் தொகுதி விவரம்:

1. துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் - போடிநாயக்கனூர்

2. முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி - எடப்பாடி

3. அமைச்சர் சி.வி.சண்முகம் - விழுப்புரம்

4. அமைச்சர் ஜெயக்குமார் - ராயபுரம்

5. எம்.எல்.ஏ எஸ்.பி.சண்முகநாதன் - ஸ்ரீவைகுண்டம்

6. எம்.எல்.ஏ தேன்மொழி - நிலக்கோட்டை ( தனித் தொகுதி).

ஆறு வேட்பாளர்களும் 2016 சட்டமன்றத் தேர்தலில் இதே தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

05 Mar 2021 10 AM

இன்று முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்?!

தமிழகத்தில் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டது முதல் கட்சிகள் கூட்டணியை இறுதி செய்யும் பணிகளில் முழுமையாக ஈடுபட்டுவருகின்றன. தி.மு.க கூட்டணியில் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகியவற்றுடன் தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தாகியிருக்கிறது. காங்கிரஸுடனும், ம.தி.மு.க-வுடனும், மற்ற கட்சிகளுடனும் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுவருகிறது தி.மு.க.

இன்று தி.மு.க தலைவர் ஸ்டாலின் அந்தக் கட்சியின் மாவட்டச் செயலாளர்களுடன் காணொலிக் காட்சி மூலம் பேச்சுவார்த்தை நடத்திவருகிறார். திருச்சி மாநாடு குறித்தும் வேட்பாளர் தேர்வு குறித்தும் இதில் விவாதிக்கப்பட்டுவருகிறது. அப்போது ஸ்டாலின், சட்டப்பேரவைத் தேர்தலில் தி.மு.க சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் வரும் 10-ம் தேதி வெளியாகும் என தெரிவித்ததாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

அண்ணா அறிவாலயம்
அண்ணா அறிவாலயம்

அ.தி.மு.க-வைப் பொறுத்தவரை பா.ம.க-வுடன் மட்டும் தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்பட்டிருக்கிறது. பா.ஜ.க-வுடனும், தே.மு.தி.க-வுடனும், இதர கட்சிகளுடனும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்துவருகிறது.

அ.தி.மு.க -வில் விருப்ப மனு அளிப்பதற்க்காக வந்த தொண்டர்கள் அலுவலகத்தில் உள்ள எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைக்கு பால் அபிஷேகம் செய்தனர்.
அ.தி.மு.க -வில் விருப்ப மனு அளிப்பதற்க்காக வந்த தொண்டர்கள் அலுவலகத்தில் உள்ள எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைக்கு பால் அபிஷேகம் செய்தனர்.

முன்னதாக அ.தி.மு.க தரப்பில் தேர்தலில் போட்டியிட விரும்புவோர், விருப்ப மனு அளித்திருந்தனர். அ.தி.மு.க சார்பில் சுமார் 8,000 பேர் விருப்ப மனு அளித்திருந்த நிலையில், நேற்று அவர்களுக்கான நேர்காணல் ஒரே நாளில் நடைபெற்றது. இந்தநிலையில், இன்று அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமைச் செயலகத்தில் அ.தி.மு.க மாவட்ட செயலாளர்களுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். நேற்று நேர்காணல் நடந்து முடிந்த நிலையில் இன்றைய ஆலோசனைக்குப் பிறகு அ.தி.மு.க-வின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியாகும் என்று உறுதிப்படுத்தப்படாத தகவல் வெளியாகியிருக்கிறது.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு