Election bannerElection banner
Published:Updated:

Election Updates: இழுபறி முடிந்தது - காங்கிரஸுக்கு 25 தொகுதிகள், கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதி ஒதுக்கப்பட்டது

தி.மு.க - காங்கிரஸ்
தி.மு.க - காங்கிரஸ்

தமிழகத் தேர்தல் தொடர்பான செய்திகள் மற்றும் லேட்டஸ்ட் செய்திகளின் தொகுப்பு..!

07 Mar 2021 9 AM

தி.மு.க -காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு  கையெழுத்தானுது

நீண்ட இழுபறிக்கு பிறகு தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கான தொகுதிப் பங்கீடு அண்ணா அறிவாலயத்தில் இன்று கையெழுத்தானது. காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகளும், கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளன. முன்னதாக காங்கிரஸ் கட்சி, கடந்த தேர்தலில் போட்டியிட்ட 41 தொகுதிகளுக்கும் அதிகமான தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்று கேட்டது. ஆனால், அதிரும் அளவுக்கு குறைந்த எண்ணிக்கையை தி.மு.க கூறவே, அதிருப்தியில் இருந்தது காங்கிரஸ். ஆலோசனைக் கூட்டத்தில் கே.எஸ்.அழகிரி கண்ணீர்விடும் அளவுக்குச் சென்றது விவகாரம். இந்தநிலையில், இன்று இந்தத் தொகுதி பங்கீடு கையெழுத்தாகியிருக்கிறது.

06 Mar 2021 7 PM

`உதயசூரியன் சின்னத்தில் ம.தி.மு.க தேர்தலைச் சந்திக்கிறது!’

வைகோ - ஸ்டாலின்
வைகோ - ஸ்டாலின்
வைகோ - ஸ்டாலின்

நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க கூட்டணியில் ஆறு தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட ம.தி.மு.க சம்மதம் தெரிவித்திருக்கிறது. தி.மு.க கட்சித் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் மு.க.ஸ்டாலின், வைகோ முன்னிலையில் தொகுதிப் பங்கீடு கையெழுத்தானது.

06 Mar 2021 1 PM

வாக்களிக்க அழைப்பிதழ்!

வாக்களிக்க அழைப்பிதழ்
வாக்களிக்க அழைப்பிதழ்

வாக்காளர்கள் முழுமையாக வாக்களிப்பதை ஊக்குவிக்கும்விதமாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் `வாக்களிக்க அழைப்பிதழ்' ஒன்றைத் தயார்செய்து மக்களுக்குக் கொடுப்பதற்காக வைத்திருக்கிறது தேர்தல்துறை. இதில், `06/04/2021 செவ்வாய்க்கிழமை அன்று, காலை 7:00 மணி முதல் மாலை 5:00 மணிக்குள் 'இந்தியத் தேர்தல் ஆணையம் நடத்தும் வாக்களிக்கும் வைபோகம்' தங்கள் அருகாமையிலுள்ள வாக்குச்சாவடியில் நடைபெறவிருப்பதால் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள தங்கள் குடும்பத்திலுள்ள அனைவரும் தனிநபர் இடைவெளியைக் கடைப்பிடித்து, தவறாமல் தங்களின் வாக்கைப் பதிவு செய்யும்படி அன்புடன் அழைக்கிறோம். வாருங்கள்... வாக்களிப்போம்!’ என்று கள்ளக்குறிச்சி மாவட்ட தேர்தல்துறை, அழைப்பிதழை அச்சடித்து மக்களுக்குக் கொடுப்பதற்காகத் தயார்நிலையில் வைத்திருக்கிறது.

06 Mar 2021 11 AM

முக்குலத்தோர் புலிப்படை கட்சி அ.தி.மு.க கூட்டணியிலிருந்து விலகுகிறது. 84 தொகுதிகளில் தனித்து0 போட்டி! - கருணாஸ் எம்.எல்.ஏ அறிவிப்பு

கருணாஸ் செய்தியாளர் சந்திப்பு

Posted by Junior Vikatan on Friday, March 5, 2021
06 Mar 2021 11 AM

கன்னியாகுமரி இடைத்தேர்தல்!  

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுடன் கன்னியாகுமரி நாடாளுமன்ற இடைத்தேர்தலுக்கும் தேதி அறிவிக்கப்பட்டது. இந்தநிலையில், நேற்று அ.தி.மு.க கூட்டணியில் கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதி பா.ஜ.க-வுக்கு ஒதுக்கப்பட்டது. இன்று கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதிக்கான வேட்பாளரை பா.ஜ.க அறிவித்திருக்கிறது.

பொன்.ராதாகிருஷ்ணன்
பொன்.ராதாகிருஷ்ணன்

நாகர்கோவிலில் நாளை மத்திய அமைச்சர் அமித் ஷா பரப்புரை மேற்கொள்ளவிருக்கும் நிலையில், ஏற்கெனவே கன்னியாகுமரி தொகுதியில் பா.ஜ.க சார்பில் போட்டியிட்ட பொன்.ராதாகிருஷ்ணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கிறார். 2014 தேர்தலில் வெற்றி பெற்ற பொன்.ராதாகிருஷ்ணன், 2019 மக்களவைத் தேர்தலில் வசந்தகுமாரிடம் தோல்வியடைந்தார். வசந்தகுமார் மறைவால் தற்போது இந்தத் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

06 Mar 2021 11 AM

தி.மு.க ஒதுக்கும் தொகுதிகளின் எண்ணிக்கை போதுமானதாக இல்லை!

தி.மு.க உடனான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஈடுபட்டது. இந்தப் பேச்சுவார்த்தைக்குப் பின்னர் அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன், ``தி.மு.க ஒதுக்கும் தொகுதிகள் போதுமானதாக இல்லை’’ எனத் தெரிவித்தார்

கே.பாலகிருஷ்ணன்
கே.பாலகிருஷ்ணன்

``மீண்டும் மாலையில் தகவல் சொல்கிறோம் என்று தி.மு.க-வினர் தெரிவித்துள்ளனர். அ.தி.மு.க - பா.ஜ.க அமைத்துள்ள கூட்டணி, காயலாங்கடை இன்ஜின் மாதிரி. அது ஓடாது’’ எனவும் கூறினார். தி.மு.க கூட்டணியில் ம.தி.மு.க உள்ளிட்ட கட்சிகளுடனான தொகுதிகளின் பங்கீடு இன்னும் முடிவாகவில்லை.

06 Mar 2021 6 AM

அ.தி.மு.க., பா.ஜ.க - ஒப்பந்தம்!

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு தேதி அறிவிக்கப்பட்டது முதல் கட்சிகள் தங்கள் கூட்டணியை இறுதி செய்யும் பணியில் ஈடுபட்டுவருகின்றன. தமிழகத்தில் பிரதான கட்சிகளைப் பொறுத்தவரை கூட்டணிப் பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்துவந்தாலும், தொடர்ந்து பலகட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றுவருகிறது. இந்தநிலையில் 2021 சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க - பா.ஜ.க இடையே தொகுதிப் பங்கீடு கையெழுத்தாகியிருக்கிறது. இது தொடர்பான ஒப்பந்தத்தில், ``தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க-வும் பா.ஜ.க-வும் கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்திப்பது என்று முடிவெடுக்கப்பட்டிருக்கிறது.

அ.தி.மு.க - பா.ஜ.க உடன்படிக்கை
அ.தி.மு.க - பா.ஜ.க உடன்படிக்கை

அ.தி.மு.க-வுக்கும் பா.ஜ.க-வுக்கும் இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தின்படி அ.தி.மு.க தலைமையிலான கூட்டணியில் தமிழ்நாட்டில் 20 சட்டமன்றத் தொகுதிகள் ஒதுக்கப்படும் என்று தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. மேலும் இடைத்தேர்தலில் கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் பா.ஜ.க வேட்பாளருக்கு அ.தி.மு.க தனது முழு ஆதரவை அளிக்கும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது” என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்த ஒப்பந்தத்தில் அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, பா.ஜ.க சார்பில் தேசிய பொதுச் செயலாளர் சி.டி.ரவி, மாநிலத் தலைவர் எல்.முருகன் ஆகியோர் கையெழுத்திட்டிருக்கிறார்கள்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு