சமூகம்
Published:Updated:

‘டார்கெட் - 2024’: நீர்மிகு நகரமாக மாறுமா சென்னை?

கடல்நீர் குடிநீராக்கப்படுகிறது
பிரீமியம் ஸ்டோரி
News
கடல்நீர் குடிநீராக்கப்படுகிறது

சென்னை மாநகராட்சியின் குடிநீர்த் தேவை, நாள் ஒன்றுக்கு சுமார் 1,400 மில்லியன் லிட்டர்.

தலைப்பைப் படிக்கும்போதே புல்லரிக்கிறது அல்லவா! தண்ணீர் தரும் மகிழ்ச்சி அது. சரி, விஷயத்துக்கு வருவோம். சென்னை மாநகராட்சியின் குடிநீர்த் தேவை, நாள் ஒன்றுக்கு சுமார் 1,400 மில்லியன் லிட்டர். தற்போது, சென்னை குடிநீர் வாரியம் மூலமாக சுமார் 550 மில்லியன் லிட்டர் குடிநீர் மக்களுக்கு விநியோகிக்கப்படுகிறது. தனியார் மற்றும் நிலத்தடி நீர் மூலம் சுமார் 450 மில்லியன் லிட்டர் குடிநீர் கிடைக்கிறது. இவை போக, சுமார் 400 மில்லியன் லிட்டர் பற்றாக்குறையில் சென்னை தினமும் திண்டாடிக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில், 2020-ம் ஆண்டில் சென்னையின் குடிநீர்த் தேவை நாள் ஒன்றுக்கு 2000 மில்லியன் லிட்டராக இருக்கும் என்று இப்போதே சிலர் கணித்துச் சொல்கிறார்கள். என்ன செய்யப்போகிறோம் நாம்?

‘டார்கெட் - 2024’: நீர்மிகு நகரமாக மாறுமா சென்னை?

சென்னை மெட்ரோ மூலம் கடந்த 2017-ம் ஆண்டு 450 மில்லியன் லிட்டர் குடிநீர் விநியோகிக் கப்பட்டது. தற்போது, அது 550 மில்லியன் லிட்டராக உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையின் முக்கிய நீராதாரங்களான பூண்டி, செம்பரபாக்கம் உள்ளிட்ட ஏரிகள் வறண்டுவிட்டதால் ரெட்டேரி, அயனம்பாக்கம், எருமையூர் உள்ளிட்ட ஏரிகளிலிருந்து தலா 10 மில்லியன் லிட்டர் தண்ணீர் பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.

2017-ம் ஆண்டிலிருந்து கல்குவாரிகளில் இருந்தும் நீர் எடுத்து சுத்திகரித்து விநியோகிக்கிறது சென்னை மெட்ரோ. செம்பரம்பாக்கம் அருகில் உள்ள சிங்கராயபுரம் கல்குவாரியிலிருந்து நாள் ஒன்றுக்கு 30 மில்லியன் லிட்டர் தண்ணீர் எடுக்கப்படுகிறது. அத்துடன் தாமரைப்பாக்கம், மீஞ்சூர் சுற்று வட்டாரங்களில் 390 விவசாயக் கிணறுகளை குத்தகைக்கு எடுத்திருக்கிறது மெட்ரோ. வீராணத்திலிருந்து 180 மில்லியன் லிட்டர் வந்துகொண்டிருக்கிறது. கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டதில் 40 மில்லியன் லிட்டர் தண்ணீர் தொழில் நிறுவனங்களுக்குக் கொடுக்கப்பட்டுவந்தது. தற்போது கழிவுநீர் மூலம் பெறப்படும் 90 மில்லியன் லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட நீரை தொழிற்சாலை களுக்குக் கொடுத்துவிட்டு, கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம் மூலம் கிடைக்கும் நீரான 40 மில்லியன் லிட்டரை மக்களுக்குத் திருப்பிவிட்டிருக்கிறது மெட்ரோ. இதுவே சென்னைக்கான தற்போதைய சுருக்கமான குடிநீர் ஆதார டேட்டா.

கடல்நீர் குடிநீராக்கப்படுகிறது
கடல்நீர் குடிநீராக்கப்படுகிறது

குடிநீர்ப் பஞ்சத்தைச் சமாளிக்க 24 மணி நேரமும் டேங்கர் லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்கிறது மெட்ரோ. கடந்த இரண்டு மாதங்களில் கடுமையான குடிநீர்ப் பஞ்சம். சராசரியாக தினமும் 4,000 பேர் ஆன்லைனில் குடிநீருக்காக புக்செய்து காத்திருந்தார்கள். இடையே ஓரளவு மழை பெய்ததால் நிலைமை பரவாயில்லை. தினமும் ஆன்லைனில் புக் செய்பவர்களின் எண்ணிக்கை இரண்டாயிரத்துக்கும் கீழ் இறங்கிவிட்டது. இன்னொரு பக்கம் கண்டலேறு நீர்த்தேக்கத்திலிருந்து ஒவ்வோர் ஆண்டும் 12,000 மில்லியன் கன அடி கிருஷ்ணா நதிநீர் பெறப்பட வேண்டும். ஆனால், 2017-18 ஆண்டில் 2.22 ஆயிரம் மில்லியன் கன அடி நீர் மட்டுமே பெறப்பட்டது. இனி மாற்று ஆதாரங்களின் அடிப்படையில்தான் குடிநீர்த் தேவையை நாம் சமாளிக்க வேண்டும்.

‘டார்கெட் - 2024’: நீர்மிகு நகரமாக மாறுமா சென்னை?

சென்னை நீர்த்தேவையை சரிசெய்யும் திட்டங்கள் குறித்து விவரிக்கிறார், சென்னை மெட்ரோ குடிநீர் வாரியத்தின் கண்காணிப்புப் பொறியாளர் ராமசாமி. “தற்போது கடல்நீரைக் குடிநீராக மாற்றும் திட்டத்தின்படி நெம்மேலி அருகிலேயே மற்றொரு 150 மில்லியன் லிட்டர் சுத்திகரிப்பு திறன்கொண்ட ஆலைக்கு முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டியுள்ளார். 400 மில்லியன் லிட்டர் சுத்திகரிப்பு திறனுடன்கூடிய புதிய ஆலையைத் திறப்பது குறித்தும் பேச்சுவார்த்தை நடக்கிறது. சென்னையில் கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலைகள் நான்கு இடங்களில் செயல்படுகின்றன. தற்போது இரண்டுகட்ட சுத்திகரிப்புகள் மட்டுமே செய்யப்படும் நிலையில், விரைவில் மூன்றுகட்ட சுத்திகரிப்புகள் செய்து, கழிவுநீரைக் குடிக்கும் தன்மைக்கு மாற்றப்படும். பிறகு, அந்த நீர் சென்னை மற்றும் அதைச் சுற்றி உள்ள 210 ஏரிகளில் விடப்படும். இதனால் நிலத்தடி நீர்மட்டமும் உயர்ந்து, 90 எம்.எல்.டி நீர் கிடைக்கும்.

அதேபோல், அடுத்த ஆண்டு முதல் கூடுதலாக செங்கல்பட்டு, புலிப்பாக்கம், தலக்கனஞ்சேரி உள்ளிட்ட கல்குவாரிகளில் இருந்தும் தினமும் 50 மில்லியன் லிட்டர் குடிநீர் பெற திட்ட மிட்டுள்ளோம். மழைநீர் சேகரிப்பை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லவிருக்கிறோம். இதுவரை 71,000 கட்டடங்களில் மழைநீர் சேகரிப்புத் திட்டம் முறையாகச் செயல்படுகிறது. மழைநீர் சேகரிப்பு இல்லாத 41,000 கட்டடங்களுக்கு, மழைநீரைச் சேகரிக்க அறிவுறுத்தியுள்ளோம். சில கட்டடங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளோம்.

கழிவுநீர் சுத்திகரிக்கப்படுகிறது
கழிவுநீர் சுத்திகரிக்கப்படுகிறது

இனி நிலத்தடி நீர் எடுக்க வேண்டுமென்றால், முறையாக லைசென்ஸ் பெற வேண்டும். 0.5 ஹெச்.பி-யைவிட அதிக விசையுள்ள மோட்டாரைப் பயன்படுத்தி நிலத்தடி நீர் எடுக்க, கட்டாயம் லைசென்ஸ் பெற வேண்டும். இதையெல்லாம் செயல்படுத்தி முடித்தால், தினமும் 800 மில்லியன் லிட்டருக்கும் அதிகமாக குடிநீர் வழங்க முடியும். 2024-ம் ஆண்டுக்குள் சென்னையை நீர்மிகு நகரமாக மாற்றுவதே மெட்ரோவின் லட்சியம்!’’ என்றார்.

அரசு மட்டுமல்ல... நீரைச் சேமிக்க மக்களும் மனதுவைக்க வேண்டும்!