Published:Updated:

குறுக்கு வழியில் சரக்கு எக்ஸ்பிரஸ்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
குறுக்கு வழியில் சரக்கு எக்ஸ்பிரஸ்!
குறுக்கு வழியில் சரக்கு எக்ஸ்பிரஸ்!

சரக்குப் பெட்டிகளை அங்கேயே வைத்துவிட்டு, ‘உயிர் பிழைத்தால் போதும்’ என பின்னங்கால் பிடறியில்பட ஓட்டம் எடுத்திருக்கிறர்கள்.

பிரீமியம் ஸ்டோரி
ஊரடங்கில் பல கடைகளைத் திறந்து திறந்து மூடினாலும் டாஸ்மாக் கடைகளுக்கும் மொத்தமாகப் பூட்டுப்போட்டது தமிழ்நாடு அரசு. இதனால் தடுமாறிப்போன டாஸ்மாக்தாசன்கள் தமிழ்நாடு முழுக்க நடத்திய காமெடி களேபரங்களின் தொகுப்பு இது.
குறுக்கு வழியில் சரக்கு எக்ஸ்பிரஸ்!

ஓட்டையப் போடு... ஆட்டையப் போடு!

சிவகங்கை மாவட்டம் கல்லல் ரயில் நிலையம் அருகே காட்டுக்குள் செயல்பட்டு வந்தது ஒரு டாஸ்மாக் கடை. கழுகுக்கு மூக்கு வியர்த்த கதையாய் அந்த மதுக்கடையைச் சிலர் குறி வைத்தனர். கும்மிருட்டில் திருடச்சென்றவர்கள் சாவகாசமாக முன்பக்க இரும்பு கேட்டை ஆக்ஸா பிளேடு, வெல்டிங் கட்டர் வைத்துத் திறக்க முயன்றிருக்கிறார்கள். நேரம் செல்லச் செல்ல உடைக்க முடியாமல் சோர்ந்து போயிருக்கிறார்கள். பின்பு கடையின் பின்பக்கம் சென்று சுவரில் ஓட்டையைப் போட்டிருக்கிறார்கள். ஒற்றை ஆள் போகும் அளவுக்குத் துளை போட்டவர்கள், கடைக்குள் சென்று சிசிடிவி கேமராவின் கோணத்தைத் திருப்பி வைத்துவிட்டு தங்களுக்குப் பிடித்த சரக்குப் பெட்டிகளை எடுத்துக்கொண்டு எஸ்கேப் ஆனார்கள். அவர்கள் ஆட்டையைப் போட்ட சரக்குகளின் மதிப்பு ஒன்றரை லட்சம் ரூபாய்.

அதே சிவகங்கை மாவட்டத்தில் கொல்லங்குடி மதுக்கடையில் பக்காவான ஷட்டர் அமைத்து காவலாளி எல்லாம் போட்டிருந்தார்கள். ஆனால், நள்ளிரவு வந்த திருடர்கள் காவலாளியைக் கட்டிப் போட்டனர். கடையை உடைத்து சரக்குகள் இருந்த பெட்டிகளைத் தூக்கிக்கொண்டு எஸ்கேப் ஆனார்கள். இங்கேயும் ஒன்றரை லட்சம் ரூபாய் மதிப்புள்ள சரக்குகள் களவுபோயுள்ளன. ( இது என்ன கணக்கு என்று தெரியவில்லை!) திருடர்களை போலீஸ் இன்னமும் தேடிவருகிறார்கள்.

உசிரு முக்கியம் கொமாரு!

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே தாதம்பட்டியில் நள்ளிரவில் டாஸ்மாக் கடை ஷட்டரை உடைத்து உள்ளே புகுந்த ஒரு கும்பல், 21 பெட்டிகளில் இருந்த சரக்குகளை எடுத்துக்கொண்டு வெளியே வந்திருக்கிறது. இதை ஊர்க்காரர்கள் பார்த்துவிட்டு போலீஸுக்குத் தகவல் சொல்ல, சினிமா போலீஸ்போல இல்லாமல் வேகமாகக் கிளம்பி வந்திருக்கிறது வாடிப்பட்டி போலீஸ். ஒருபக்கம் கம்பு குண்டாந்தடிகளோடு ஊர்மக்கள் திரண்டு வருவதையும் இன்னொருபக்கம் காக்கிகள் நிற்பதையும் பார்த்து வெலவெலத்துப் போயிருக்கிறார்கள் மதுத் திருடர்கள். சரக்குப் பெட்டிகளை அங்கேயே வைத்துவிட்டு, ‘உயிர் பிழைத்தால் போதும்’ என பின்னங்கால் பிடறியில்பட ஓட்டம் எடுத்திருக்கிறர்கள்.

குறுக்கு வழியில் சரக்கு எக்ஸ்பிரஸ்!

ஜஸ்ட் மிஸ்ஸு!

மே 28-ம் தேதி சென்னை கொடுங்கையூர் போலீஸார், வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது ‘POLICE’ என்ற ஸ்டிக்கர் ஒட்டிய கார் சந்தேகப்படும்படி கடந்து சென்றிருக்கிறது. ஏதோ பொறிதட்டிய போலீஸார், காரை மடக்கி காரில் உள்ள 5 பேரிடம் விசாரித்துள்ளனர். முன்னுக்குப் பின் முரணாக உளறிய நிலையில் ஒருவர் மட்டும் ‘நானும் போலீஸ்தான்’ என்று கூறிவிட்டு, அந்த வட்டாரத்திலுள்ள போலீஸ் அதிகாரிகள் பெயரையெல்லாம் சொல்லி, ‘எல்லோரையும் எனக்குத் தெரியும்!’ என்று கெத்தாய்க் கூறியுள்ளார்.

‘உனக்கு எல்லோரையும் தெரியுறது இருக்கட்டும். அவங்களுக்கு உன்னைத் தெரியுமா?’ என்று கேட்டபடி, காரை சோதனை போட்டிருக்கிறார்கள். சீட்டுக்கு அடியில் ஒன்றல்ல இரண்டல்ல... 250 குட்டிக் குட்டி மது பாட்டில்களைப் பார்த்திருக்கிறார்கள். அப்படியே ‘அலேக்காய்’ அவர்களைக் காவல் நிலையம் கொண்டு சென்று விசாரித்தபோது, சஸ்பெண்ட் செய்யப்பட்ட போலீஸ் கான்ஸ்டபிள் பிரபாகரன்தான் அந்த டீமின் தலைவர் என்பதும் ஆந்திராவிலிருந்து சரக்குகளை வாங்கி வந்து ஊரடங்கு காலத்தில் ‘யாவாரத்தில்’ ஈடுபட்டது தெரிய வந்திருக்கிறது. அப்புறமென்ன.. அப்படியே தூக்கிக் கொண்டுபோய் உள்ளே தள்ளியிருக்கிறார்கள்.

குறுக்கு வழியில் சரக்கு எக்ஸ்பிரஸ்!

முட்டைக்கோஸுக்குள் சரக்கு கேஸ்!

மே 31-ம் தேதி பெங்களூரிலிருந்து காய்கறிகள் ஏற்றி வந்த லாரியைத் திருக்கோவிலூர் அருகே சோதனை செய்ய போலீஸ் நிறுத்தியுள்ளது. ‘கொரோனா நேரம் வியாபாரத்துக்காகக் காய்கறிங்க வாங்கிட்டுப் போறோம். சீக்கிரம் பார்த்துட்டு விட்டீங்கன்னா டயத்துக்கு போய்ச் சேர்ந்துடும் சார். இல்லைன்னா அழுகிடும்!’ என்று எக்ஸ்ட்ரா பவ்யமாக லாரிக்காரர்கள் பேசியதில் சந்தேகம் வந்திருக்கிறது. லாரியை சோதனை செய்ததில் முட்டைக்கோஸ் மூட்டைகளுக்குக் கீழே 900 மது பாட்டில்களைக் கைப்பற்றினர்.

குறுக்கு வழியில் சரக்கு எக்ஸ்பிரஸ்!

எக்ஸ்பிரஸ் ரயிலா... `சரக்கு’ ரயிலா?

மே 31-ம் தேதி தூத்துக்குடி செல்லும் மைசூர் எக்ஸ்பிரஸை ரயில்வே போலீஸ் சோதனை செய்ததில் 16 மது பாட்டில்களோடு மதுரைக்காரர்கள் மூவரைப் பிடித்துள்ளனர். அதே ரயிலில் மற்றொரு பெட்டியில் 136 மது பாட்டில்களைக் கைப்பற்றினர். ஆனால், அதைக் கடத்தியவர்கள் யார் என்பதைக் கண்டுபிடிக்கவில்லை. இதேபோல் கடந்த 2-ம் தேதி பெங்களூரிலிருந்து தூத்துக்குடி வந்த எக்ஸ்பிரஸில் விருதுநகர் ரயில் நிலையத்தில் சோதனை செய்த ரயில்வே போலீஸ், சீட்டுக்கு அடியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 47 ஃபுல் பாட்டில்களை எடுத்தார்கள். கடத்தியவர்கள் எஸ்கேப்.

காட்டிக் கொடுத்த காடி வாசனை!

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே மேட்டமலையில் செந்தில்குமார் என்ற இளைஞர் தலைமையில் ஐந்து பேர் சாராயம் காய்ச்சிக்கொண்டிருந்தபோது வாசம் ஏரியா முழுக்க வீசியிருக்கிறது. ஸ்மெல் செய்த போலீஸ், அவர்களைச் சுற்றி வளைத்துப் பிடித்தது. சாராய ஊறல் அழிக்கப்பட்டது. இதேபோல் சேத்தூர் அருகே 200 லிட்டர் சாராய ஊறலையும் அழித்தனர். இதைத் தயார் செய்தவர்கள் மட்டும் எஸ்கேப்.

குறுக்கு வழியில் சரக்கு எக்ஸ்பிரஸ்!

ஒயின் புரட்சி!

‘சாராயம் காய்ச்சினால்தானே போலீஸ் பிடிக்குது, வெள்ளைக்காரன் ஸ்டைலில் சாஃப்டான ஒயின் தயாரிப்போம்...மூளைக்காரய்ங்கடா நாங்க!’ என்று புரட்சி மோடில் வீட்டிலே பல்வேறு பழங்களைப் பானைகளில் போட்டு ஊறவைத்து ஒயின் ஊறல் போட்டார் மதுரையைச் சேர்ந்த கார்த்திக் என்பவர். எல்லாம் ரெடியாகி ஒயின் கைக்கு வரும்போது, பழ வாசம் அவர் திட்டத்தை நாசம் செய்துவிட்டது. இவர் வீட்டிலிருந்து மட்டும் கெட்ட வாடை வருவதை மோப்பம் பிடித்த ஏரியாவாசிகள், போலீஸில் போட்டுக்கொடுத்திருக்கிறார்கள். பாவம், ஆசை ஆசையாய் தான் தயாரித்த ஒயினை ருசி பார்க்க முடியாமலே கைதாகிப்போனார் கார்த்திக்.

குறுக்கு வழியில் சரக்கு எக்ஸ்பிரஸ்!

அண்ணன் ஸ்டைல் பாண்டி வாட்ஸ் அப் குரூப்!

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியில் ‘சரக்கு’ என்ற பெயரில் வாட்ஸ் அப் குழுவைத் தொடங்கி, அதில் 200 மதுப்பிரியர்களை உறுப்பினர்களாக இணைத்து வகைவகையான மதுபானங்களை விற்பனை செய்துவந்த இருவர் சிக்கியிருக்கிறார்கள். இந்தச் சம்பவத்தின் பின்னணி வடிவேலு காமெடியைத் தூக்கிச் சாப்பிடும் அளவுக்கு ரொம்ப சுவாரஸ்யமானது. பெருமாள்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த ஜனார்த்தனன் என்ற இளைஞர், ஊரடங்கிலும் கைநிறைய சம்பாதிக்கத் திட்டமிட்டிருக்கிறார். ‘மதுபான விற்பனையில்தான் பணம் கொட்டுகிறது’ என்று பூரிப்படைந்து, ‘சரக்கு’ என்ற பெயரில் வாட்ஸ் அப் குழு ஒன்றை சுபயோக சுபதினத்தில் தொடங்கி குழு உறுப்பினர்களுக்கு அறிமுக சலுகையையும் அறிவித்துள்ளார். மெல்ல மெல்ல குழுவும் ஆக்டிவாகியிருக்கிறது. வெளிநாட்டுச் சரக்கு, அண்டை மாநில மதுபானம் பதுக்கும் கும்பல், உள்ளூரில் சாராயம் காய்ச்சும் குண்டர்கள் எனத் தொடர்பு வைத்துக்கொண்டு கஸ்டமர்களைக் கவரத் தொடங்கினார் ஜனார்த்தனன்.

குழுவிலுள்ள மதுப்பிரியர்களும், தங்களுக்கு விருப்பப்பட்ட பிராண்ட் மதுபானத்தை செலக்ட் செய்து பதிவு செய்தால் போதும். அதற்குரிய பணத்தை கூகுள்பே, போன்பே மூலமாக உடனடியாகப் பெற்றுக்கொள்ளும் அட்மின், குறிப்பிட்ட லொக்கேஷன்களைச் சொல்லி, ‘‘அங்கேபோய் சுருட்டை முடி, செவப்பு சட்டை போட்ட தாட்டியான ஆளுகிட்ட ‘ஜனா உங்களை ரொம்ப விசாரிச்சார்ணே’ன்னு மட்டும் சொல்லு’’ என்று வாட்ஸ் அப் குழுவிலேயே கோட் வேர்டெல்லாம் தெரியப்படுத்தியிருக்கிறார். குழுவில் உறுப்பினர்களாக இருக்கும் மதுப்பிரியர்களும், அட்மினிடமிருந்து மதுபானங்களை அப்படி மொத்தமாகக் கொள்முதல் செய்து, தங்கள் பகுதிகளில் கூடுதல் விலைக்கு விற்று லாபமும் பார்த்துள்ளனர். இந்தத் தகவல் இணையத்தில் வைரலானதையடுத்து, அட்மின் ஜனார்த்தனனும், அவருக்கு உதவிய சரவணன் என்பவரும் தற்போது சிறையில் கம்பி எண்ணுகிறார்கள்.

குறுக்கு வழியில் சரக்கு எக்ஸ்பிரஸ்!

கள்ளச்சாராயம் டோர் டெலிவரி!

வேலூர் மாவட்டத்திலுள்ள மலையடிவாரங்களில், கள்ளச்சாராயம் கனஜோராகக் காய்ச்சப்படுகிறது. அரியூர் சிவநாதபுரம் மலைப்பகுதியிலுள்ள சாராய கும்பலைப் பிடிக்க போலீஸார் சென்றபோது, உணவு டெலிவரி நிறுவனத்தின் டிஷர்ட் அணிந்திருந்த ஒருவர் அங்கு நடமாடிக்கொண்டிருந்தார். அவரைப் பிடித்து விசாரித்தபோது, ‘ஆன்லைன் மூலம் இங்கு ஒருவர் டிபன் ஆர்டர் செய்திருந்தார் சார். அவருக்குக் கொடுத்துட்டு வர்றேன்’ என்று கூறியுள்ளார். ‘அடேய்... அத்துவானக் காட்டுக்குள்ள டோர் டெலிவரியா... கம்பி கட்டுற கதையா விடுறே... ஆளைக்காட்டு பார்ப்போம்?!’ என்று போலீஸார் கேட்டவுடன், திருதிருவென முழித்திருக்கிறார் அந்த இளைஞர். போலீஸார் தங்கள் ஸ்டைலில் விசாரித்தபோது, இளைஞர் உண்மையை ஒப்புக்கொண்டார். ‘டெலிவரி நிறுவனத்தின் உடையில் சாராயம் வாங்கி வெளியில் விற்பனை செஞ்சா போலீஸுக்கு சந்தேகம் வராதுன்னு நினைச்சுதான் டிரெஸ்ஸை ப்ரெண்ட்கிட்ட கடன் வாங்கிட்டு வந்தேன்!’ என்று சொல்லியிருக்கிறார்.

குறுக்கு வழியில் சரக்கு எக்ஸ்பிரஸ்!

கர்நாடகாவின் ஃப்ரூட்டி சரக்கு!

கோவை மாவட்டத்தில் கடந்த ஆண்டைப் போல பிளாக்கில் சரக்கு கிடைப்பது எளிதாக இல்லை. டாஸ்மாக், அரசியல் கட்சி பிரமுகர்கள் என்று கடந்த ஆண்டில் பிளாக்கில் சரக்கு ‘ஓட்டியவர்கள்’ பட்டியல் நீளமானது. ஊரடங்கு தொடங்கிய உடன் சிலர் சரக்கு வாங்கி பிளாக்கில் விற்றனர். ஆனால், அது சில நாள்களிலேயே முடிந்துவிட்டது. கோவை எல்லையில் உள்ள கேரளாவும் மூடப்பட்டுள்ளதால், தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் வழங்க மல்லுக்கட்டிக்கொண்டிருக்கும் கர்நாடகாதான் இந்த நேரத்தில் சரக்கைப் படியளக்கிறது. அத்தியாவசியத் தேவைக்காக மாநிலம் விட்டு மாநிலம் சரக்கு வண்டிகளை ஓட்டுபவர்கள்தான், ‘அந்த’ சரக்கு வருவதற்கு உதவியாக உள்ளனர். கர்நாடகாவில் ப்ரூட்டி டப்பா போல கட்டிங் சரக்கு ரொம்பவும் ஃபேமஸ். இங்கிருந்து கர்நாடகா செல்பவர்கள் கட்டிங் முதல் ஃபுல் வரை அள்ளி வந்துவிடுகின்றனர். விலை அதிகமாகச் சொல்வதால் பெரும்பாலான குடிமகன்கள் கட்டிங்குடன் நிறுத்திவிடுகின்றனர். அதுவே ரூ.250-300 வரை விற்கின்றனர். ‘ருசிக்கு இல்லாட்டியும் பசிக்கு சாப்பிட்டுக்குறோம்!’ என்று கட்டிங்கை வைத்து மனசைத் தேற்றிக் கொள்கின்றனர் ‘குடி’ மகன்கள்.

குறுக்கு வழியில் சரக்கு எக்ஸ்பிரஸ்!

மறுபக்கம் கோவையைச் சுற்றியுள்ள கிராமப்பகுதிகளில் பழைய போதைக்குத் திரும்பிவிட்டனர். வேறென்ன கள்ளுதான். ‘காட்டை வித்துக் கள்ளு குடிச்சவங்க’ என்ற சொலவடையே அந்தப்பகுதியில் உண்டு. ஆனால், கூட்டம் அதிகமாவதால் கள்ளுக்கும் டிமாண்ட் அதிகரித்துவிட்டது. காலை 6 மணிக்கு முன்பாகச் சென்றால்தான் கள்ளு கிடைக்கும். இதனால், அதிகாலை முதலே கள்ளுக்கு அடித்துக் கொள்கின்றனர். தடுப்பூசிக்கு நீண்ட வரிசையில் நிற்பதைப்போல கிராமங்களில் ஆங்காங்கே கள்ளு வாங்க வரிசை கட்டி நிற்கின்றனர். கள்ளுக்கும் உண்டோ அடைக்கும் தாழ்..!

குறுக்கு வழியில் சரக்கு எக்ஸ்பிரஸ்!
குறுக்கு வழியில் சரக்கு எக்ஸ்பிரஸ்!
குறுக்கு வழியில் சரக்கு எக்ஸ்பிரஸ்!
குறுக்கு வழியில் சரக்கு எக்ஸ்பிரஸ்!
குறுக்கு வழியில் சரக்கு எக்ஸ்பிரஸ்!
குறுக்கு வழியில் சரக்கு எக்ஸ்பிரஸ்!
குறுக்கு வழியில் சரக்கு எக்ஸ்பிரஸ்!
குறுக்கு வழியில் சரக்கு எக்ஸ்பிரஸ்!
குறுக்கு வழியில் சரக்கு எக்ஸ்பிரஸ்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு