Published:Updated:

பார் டெண்டரை யார் எடுப்பது? - மல்லுக்கட்டும் ஆளுங்கட்சி புள்ளிகள்...

பார்
பிரீமியம் ஸ்டோரி
News
பார்

பார் உரிமையாளர்கள் அவ்வளவு ஒன்றும் நேர்மையானவர்கள் இல்லை; அவர்கள் செய்யும் விதிமீறல்களுக்கு அளவே இல்லை

டாஸ்மாக் கடைகளை ஒட்டியிருக்கும் பார்களுக்கான லைசென்ஸ் 2021, செப்டம்பர் மாதத்துடன் முடிந்துவிட்டதால், அதை மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டிக்க வேண்டும் என்று பார் உரிமையாளர்கள் கோரிக்கை வைத்திருந்தார்கள். அதை ஏற்க மறுத்த தமிழக அரசு, புதிய டெண்டருக்கான அரசாணையைப் பிறப்பித்திருக்கிறது. இதையடுத்து, டெண்டர் விண்ணப்பம் வாங்கச் சென்றாலே, ஆளுங்கட்சியின் மாவட்டச் செயலாளர் தொடங்கி எம்.எல்.ஏ வரை ‘படியளக்க’ சொல்கிறார்கள் என்கிற குற்றம்சாட்டு எழுந்துள்ளது!

தமிழகம் முழுவதும் 5,400 மதுபானக் கடைகளில் மது விற்பனை செய்துவரும் தமிழக அரசு, மதுக்கடைகளை ஒட்டியிருக்கும் 2,900 பார்களை தனியார் நடத்துவதற்கு அனுமதி கொடுத்துள்ளது. இதற்காக, இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை டெண்டர் விடப்படும். 2019, செப்டம்பர் மாதம் விடப்பட்ட டெண்டரின் காலம் 2021 செப்டம்பர் இறுதியுடன் முடிவடைந்தது. எனினும், இரண்டு மாதங்கள் நீட்டிப்பு கொடுத்த அரசு, டிசம்பர் 14-ம் தேதி இதற்கான டெண்டரை அறிவித்துள்ளது. இதில்தான் பல்வேறு தகிடுதத்தங்கள் நடந்துவருவதாகக் குற்றம்சாட்டுகிறார்கள் இதன் உள்விவரங்களை அறிந்தவர்கள்.

பார் டெண்டரை யார் எடுப்பது? - மல்லுக்கட்டும் ஆளுங்கட்சி புள்ளிகள்...

தமிழ்நாடு பார் உரிமையாளர்கள், பார் கட்டட உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் நலச்சங்கத்தின் மாநிலத் தலைவர் அன்பரசன் நம்மிடம் இது பற்றிப் பேசினார். ‘‘2019 செப்டம்பரில் பார்களை ஏலமெடுத்து, ஆறு மாதங்களில் கொரோனா முதல் அலை வந்துவிட்டதால் 2020, மார்ச் 17 அன்று மூடப்பட்ட பார்கள், 2020 டிசம்பர் 29 அன்றுதான் மீண்டும் திறக்கப்பட்டன. மீண்டும் கொரோனா இரண்டாவது அலையால் 2021, ஏப்ரல் 20 அன்று மூடப்பட்ட பார்கள், அக்டோபர் 30 அன்றுதான் திறக்கப்பட்டன. டெண்டர் எடுத்த 24 மாதங்களில் 16 மாதங்கள் பார்களை மூடியே வைத்திருந்தோம். எனினும், இடம் விட்டுப்போய்விடக் கூடாது என்பதற்காக, பார் கட்டடத்துக்கு வாடகை கட்டினோம். அதனால்தான், தற்போது மீண்டும் டெண்டர் விடாமல், இரண்டு ஆண்டுகள் லைசென்ஸை நீட்டித்துத் தர வேண்டும் என்று கேட்டோம். ஆனால், டெண்டர் அறிவித்துவிட்டார்கள்.

அதிலும் முறைகேடுகளைச் செய்வதுதான் அதிர்ச்சியாக இருக்கிறது. டெண்டர் விண்ணப்பங்களைப் பெறுவதற்கு கலெக்டர் அலுவலகம் சென்றால் ஆளுங்கட்சியின் மாவட்டச் செயலாளர், தொகுதி எம்.எல்.ஏ-வைப் பார்த்துவிட்டு வரச் சொல்கிறார்கள். அவர்களுக்கு கமிஷன் கொடுக்க வேண்டும் என்று அதிகாரிகளே நிர்பந்திக்கிறார்கள். சில இடங்களில், ‘நாங்கள்தான் பார் நடத்துவோம். நீங்கள் காலி செய்தாக வேண்டும்’ என்று ஆளுங்கட்சியினர் மிரட்டுகிறார்கள். பார்களில் விற்கப்படும் 300 மி.லி தண்ணீர் பாட்டில்களை 3.50 ரூபாய்க்கு மொத்த விலைக்கு வாங்கிவந்தோம். இப்போது, அதைக் குறிப்பிட்ட ஒருவரிடம்தான் வாங்க வேண்டும் என்று டாஸ்மாக் அதிகாரிகள் கட்டாயப்படுத்துகிறார்கள். அங்கு, அதே பாட்டில் 5 ரூபாய் என்கிறார்கள். தற்போது டெண்டர் நடத்தியே ஆக வேண்டுமென்றால், கட்டட உரிமையாளர்களிடமிருந்து தடையில்லாச் சான்றை மட்டும் பெற்றுக்கொண்டு, கமிஷன் பெறாமல் நேர்மையான முறையில் டெண்டர் விட வேண்டும். இது குறித்த புகாரை டாஸ்மாக் எம்.டி., தலைமைச் செயலாளர், முதல்வர் ஆகியோருக்கு அனுப்பியிருக்கிறோம். டெண்டரை ரத்துசெய்ய வலியுறுத்தி சென்னை உயர் நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்திருக்கிறோம்” என்றார்.

ஆனால், “பார் உரிமையாளர்கள் அவ்வளவு ஒன்றும் நேர்மையானவர்கள் இல்லை; அவர்கள் செய்யும் விதிமீறல்களுக்கு அளவே இல்லை” என்று கொந்தளிக்கிறார் தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர்கள் சங்க (ஏ.ஐ.டி.யூ.சி) மாநிலத் தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ-வுமான பெரியசாமி. ‘‘தமிழகத்தில் 2,900 பார்கள் அரசு அனுமதியுடன் இயங்குகின்றன என்றால், சுமார் 1,600 பார்கள் சட்டவிரோதமாகத்தான் இயங்குகின்றன. பார் நடத்துவதற்கான விதிமுறைகளில், ‘அடுப்பே வைக்கக் கூடாது’ என்பது முக்கியமானது. ஆனால், எல்லா பார்களிலும் ஹோட்டலே நடத்துகிறார்கள். பாரில் மதுபானங்களை விற்கக் கூடாது. ஆனால், கூலிங் பீர் என்ற பெயரில் 50 ரூபாய் வரை அதிகம்வைத்து விற்கிறார்கள். பார் சுத்தமாக இருக்க வேண்டும். கழிவறை கட்டாயமாக இருக்க வேண்டும். ஆனால், பாரே கழிவறைபோலத்தான் இருக்கிறது. நுழைவுக் கட்டணம் வசூலிக்கவே கூடாது. ஸ்நாக்ஸ், குடிநீர் நியாயமான விலைக்கு விற்க வேண்டும். ஆனால், எந்த பாரில் இதையெல்லாம் பின்பற்றுகிறார்கள்? 24 மாதங்களில் 16 மாதங்கள் பார்களை மூடியிருந்தோம் என்று சொல்லி காதில் பூ சுற்றப் பார்க்கிறார்கள். நகரின் மையப்பகுதிகள் தவிர மற்ற எல்லா இடங்களிலும் பார்களை சட்டவிரோதமாக நடத்திக்கொண்டுதான் இருந்தார்கள். அதுவும் ஊரடங்கைக் காரணம் காட்டி, பல மடங்கு கட்டணம் அதிகம் வசூலித்தார்கள். இந்தக் காலகட்டத்தில் அவர்கள் அரசுக்கு மாதாந்தரக் கட்டணம் எதுவும் கட்டவில்லை என்பதையும் கணக்கில்கொள்ள வேண்டும். மற்றவர்களைக் குற்றம்சாட்டுபவர்கள், முதலில் தங்களைத் திருத்திக்கொள்ள வேண்டும்’’ என்றார்.

அன்பரசன், பெரியசாமி, சுப்ரமணியன்
அன்பரசன், பெரியசாமி, சுப்ரமணியன்

பார் உரிமையாளர் ஒருவரோ, ‘‘பார் லைசென்ஸ் வேண்டுமென்றால், துறையின் முக்கியப் பிரமுகருக்கு ஒரு லட்சம் கேட்கிறார்கள். மாவட்டச் செயலாளர், எம்.எல்.ஏ., ஒன்றிய, நகர, பகுதி, வட்டச் செயலாளர்களையும் ‘கவனிக்க’ வேண்டும். டாஸ்மாக் அதிகாரிகளுக்கு, போலீஸுக்கு அன்றாடம் மாமூல் தர வேண்டும். இதனாலேயே, சில விதிமீறல்களைச் செய்ய வேண்டியிருக்கிறது’’ என்றார்.

இது பற்றியெல்லாம் டாஸ்மாக் எம்.டி சுப்ரமணியனிடம் விளக்கம் கேட்டோம்... “எனக்கு இதுவரை புகார் வரவில்லை. அப்படி வந்தால், மாவட்ட மேலாளர்களை அழைத்து விசாரிக்கிறேன். கண்டிப்பாக டெண்டர் வெளிப்படைத் தன்மையுடன்தான் நடக்கும். டெண்டர் விடப்பட்டதும் பார்கள் விதிமீறல்களில் ஈடுபட்டால் கட்டாயம் நடவடிக்கை எடுக்கப்படும்” என்பதுடன் முடித்துக்கொண்டார்.

எந்த ஆட்சி வந்தாலும் நிலைமை மாறாதுபோலிருக்கிறது!