Published:Updated:

`போலீஸ் டார்ச்சர் தாங்க முடியல..!' - டாஸ்மாக் எம்.டி-யிடம் புகார் வாசித்த ஊழியர்கள்

டாஸ்மாக் கடை
டாஸ்மாக் கடை

நாகை மாவட்டம் மட்டுமல்லாமல் பல மாவட்டங்களில் டாஸ்மாக் பணியாளர்கள் இதுபோன்ற பிரச்னைகளை எதிர்கொள்கின்றனர்.

`நாகை மாவட்டம் கீழ்வேளூர் பகுதியில் உள்ள ஒரு டாஸ்மாக் கடைக்குள் புகுந்த சில மர்ம நபர்கள், அங்கிருந்த பணத்தைத் திருடியுள்ளனர். இதுகுறித்து காவல்நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரில் கீழ்வேளூர் போலீஸார் குற்றவாளிகளைப் பிடிக்காமல் டாஸ்மாக் பணியாளர்களையே குற்றவாளிகளாக்கி வழக்கு விசாரணையை முடிப்பதற்கு முனைப்புக் காட்டியுள்ளனர். காவலர்களின் இந்த அத்துமீறலைத் தடுக்க வேண்டும்' எனத் தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர் சங்கத்தின் மாநிலத் தலைவர் பெரியசாமி, டாஸ்மாக் மேலாண்மை இயக்குநர் கிர்லோஷ்குமாரைச் சந்தித்து மனு அளித்திருக்கிறார்.

மதுபானம்
மதுபானம்

டாஸ்மாக் நிர்வாக இயக்குநரிடம் அவர் அளித்த மனுவில், `` கடந்த 4-ம் தேதி இரவு 9.40 மணியளவில் நாகப்பட்டினம், கீழ் வேளூர் காவல்சரகத்தில் உள்ள டாஸ்மாக் கடையில் சில மர்ம நபர்கள் அத்துமீறி நுழைந்து, பணியாளர்களை மிரட்டி, மதுபான விற்பனைப் பணத்தைக் கொள்ளை அடித்துச் சென்றுள்ளனர். இது தொடர்பாக டாஸ்மாக் பணியாளர், கீழ் வேளூர் காவல்நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். கடைக்கு வந்த காவல் ஆய்வாளர் முனிசேகர் குற்றச் சம்பவத்தில் ஈடுபட்டவர்களைக் கண்டறிய முற்படாமல், தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி, டாஸ்மாக் பணியாளர்களையே குற்றவாளிகளாக்கி வழக்கு விசாரணையை முடித்துக்கொள்வதில் முனைப்புக் காட்டியுள்ளார்.

இந்தச் சம்பவத்தைக் கேள்விப்பட்டு எங்கள் சங்கத்தின் நாகை மாவட்டச் செயலாளர் மகேந்திரன், சம்பவம் நடந்த கடைக்குச் சென்றுள்ளார். அவரைக் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விடிய, விடியத் துன்புறுத்தியிருக்கிறார் இன்ஸ்பெக்டர். மேலும், கடைப் பணியாளர்களையும் கடுமையாக அடித்து, வன்கொடுமை செய்திருக்கிறார். இதுபோன்ற அத்துமீறல்களை இனியும் அனுமதிக்கக் கூடாது. இதுதொடர்பாக மேலாண்மை இயக்குநர்தான், காவல்துறை உயர் அதிகாரிகளைத் தொடர்புகொண்டு பேச வேண்டும்’ எனக் குறிப்பிட்டிருந்தார்.

புகார் மனு
புகார் மனு

தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர் சங்க மாநிலத் தலைவர் பெரியசாமியிடம் பேசினோம். ``கீழ்வேளூர் டாஸ்மாக் கடையிலிருந்த இரு பணியாளர்களும் இரவு வேலை முடிந்த பிறகு, பணத்தை எண்ணும் பணியில் ஈட்டுப்பட்டிருந்தனர். அங்கு ஹெல்மெட் அணிந்தபடி வந்த இரு மர்மநபர்களில் ஒருவர், மதுபானம் கேட்டுள்ளார். ஒரு பணியாளர் மது எடுத்துக்கொண்டிருக்கும்போது மற்றொரு மர்ம நபர் பணம் எண்ணிக்கொண்டிருந்த ஊழியரிடம் ஆயுதத்தைக் காட்டி மிரட்டி அங்கிருந்த பணம் அனைத்தையும் கொள்ளையடித்துக்கொண்டு ஓடியுள்ளார்.

"சிறையில் இருக்கும் அந்தப் பெண்ணின் வாழ்க்கை ஓர் உதாரணம்!” - நந்தினி வேதனை #BanTasmac

இதனால் அதிர்ச்சியடைந்த பணியாளர்கள் கூச்சல் போட்டுள்ளனர். அதற்குள் மர்மநபர்கள் தப்பி ஓடியுள்ளனர். பின்னர், கீழ்வேளூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். சம்பவ இடத்துக்கு வந்த காவல் ஆய்வாளர், திருட்டில் ஈடுபட்டவர்களைப் பிடிக்காமல் டாஸ்மாக் பணியாளர்களை அடித்துத் துன்புறுத்தியுள்ளார். திருட்டு, வழிப்பறி போன்ற வழக்குகளில் காவலர்கள் மேற்கொள்ளும் விசாரணையில் எந்தத் தவறும் இல்லை. ஆனால், ஏதேனும் ஒரு கடையில் திருட்டு நடந்துவிட்டால், `அங்கு உள்ள பணியாளர்களே திட்டம்போட்டு சதி செய்துவிட்டனர்' என்றுகூறி அவர்களை அடித்து குற்றம் சுமத்தித் திருடிய பணத்தைக் கட்டச் சொல்கிறார்கள்.

போலீஸ்
போலீஸ்

திருட்டு நடந்த பிறகு, புகார் அளித்தால் எஃப்.ஐ.ஆரைப் பதிவு செய்யவும் மறுக்கிறார்கள். அதனால் டாஸ்மாக் நிர்வாகமே காணாமல்போன பணத்தைக் கட்ட வேண்டியுள்ளது. கடைகளில் சிசிடிவி கேமரா பொருத்தச் சொன்னார்கள். அந்த வேலைகள் தற்போது நடந்துகொண்டிருக்கின்றன. கேமரா மட்டும் பொருத்தப்பட்டால் யார் குற்றவாளிகள் என்பது தெரிந்துவிடும். டாஸ்மாக் கடைகளில் ஏதேனும் அசம்பாவிதங்கள் நடந்தால் அது தொடர்பான விசாரணைக்கு நாங்கள் முழுமையாக ஒத்துழைக்கத் தயார்.

ஆனால், செய்யாத தவற்றை செய்ததாகக் கூறி நடந்த சம்பவத்துக்கு தானும் உடந்தை எனப் பணியாளரை ஒப்புக்கொள்ளச் சொல்வது முறையல்ல. நாங்கள் நாகையில் நடந்த சம்பவம் பற்றித்தான் மேலாண்மை இயக்குநரிடம் புகார் அளித்தோம். `சம்பவம் தொடர்பாக மாவட்ட எஸ்.பியிடம் பேசினேன், டி.ஜி.பி-யிடமும் புகார் அளிக்கிறேன்' என அவர் எங்களுக்கு நம்பிக்கை தெரிவித்துள்ளார்” என்றார் ஆதங்கத்துடன்.

அடுத்த கட்டுரைக்கு