Published:Updated:

சென்னையில் ‘சரக்கு’க்கு இல்லை ஊரடங்கு!

ஜூ.வி ஆக்‌ஷன் ஸ்டோரி
பிரீமியம் ஸ்டோரி
ஜூ.வி ஆக்‌ஷன் ஸ்டோரி

ஜூ.வி ஆக்‌ஷன் ஸ்டோரி

சென்னையில் ‘சரக்கு’க்கு இல்லை ஊரடங்கு!

ஜூ.வி ஆக்‌ஷன் ஸ்டோரி

Published:Updated:
ஜூ.வி ஆக்‌ஷன் ஸ்டோரி
பிரீமியம் ஸ்டோரி
ஜூ.வி ஆக்‌ஷன் ஸ்டோரி
மார்ச் 25-ம் தேதியிலிருந்தே, ‘முழு ஊரடங்கு’, ‘முக்கால் ஊரடங்கு’, ‘அரை ஊரடங்கு’ பழையபடி ‘முழு ஊரடங்கு’ என்று மாற்றி மாற்றி அறிவிக்கப்பட்டாலும், சென்னை பெருநகர காவல்துறை எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் டாஸ்மாக் மதுபானக் கடைகளுக்கு விதிக்கப்பட்ட தடை நூறு நாள்களுக்கும் மேலாகத் தொடர்கிறது.

ஆனால், ‘தடை இருந்தால் என்ன, இல்லாவிட்டால் என்ன... சென்னையில்தான் எங்களுக்கு 24 மணி நேரமும் சரக்கு கிடைக்கிறதே!’ என்பதே குடிநோயாளிகளின் குதூகலக் குரலாக ஒலிக்கிறது.

வட சென்னை, தென் சென்னை ஏரியாக்களில் சட்ட விரோதப் புள்ளிகளெல்லாம் கொரோனா ஊரடங்கு சீஸனில் டாஸ்மாக் சரக்கைக் கூடுதல் பணத்துக்கு விற்பனை செய்வதில் இறங்கி விட்டார்கள். இவர்கள் ஏரியாவின் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பலரையும் தங்கள் வலையில் விழவைத்து மதுபான விற்பனையில் ஈடுபடுத்திவருகிறார்கள். இதற்காக இவர்களுக்குப் பணமும் சரக்கும் தாராளமாகத் தரப்படுகின்றன.

சென்னையில் ‘சரக்கு’க்கு இல்லை ஊரடங்கு!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இப்படியான தகவல்கள் நமக்கு வரவே ‘ஸ்டிங் ஆபரேஷன்’ மூலம் இந்த கும்பலை அம்பலப்படுத்த முடிவு செய்து களத்தில் இறங்கினோம். இந்த ஆபரேஷனில் ஜூன் 25-ம் தேதி தொடங்கி ஜூலை 4-ம் தேதி வரை கடந்த 10 நாள்களாக நடந்த தொடர் நடவடிக்கைகளை லைவ்வாக இங்கே தருகிறோம்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஜூன் 25, பகல் 1 மணி

சென்னை மதுரவாயல் பைபாஸ் அருகேயுள்ள ஆலப்பாக்கம் ஏரிக்கரை ரோடு. அங்கிருக்கிறது அந்த டாஸ்மாக் கடை. அந்தக் கடையை ‘தளபதி ஒயின்ஸ்’ என்று அழைக்கிறார்கள். அந்தக் கடைக்கு அருகிலே பாருக்குப் போகும் சந்தில் ஜோராக நடந்துகொண்டிருந்தது சரக்கு விற்பனை. நமது டீம் சரக்கு வாங்குவதுபோல ரகசிய கேமராவுடன் ஸ்பாட்டுக்குச் சென்றது. துப்புக் கொடுத்த ஆசாமி ஒருவர்தான் நமக்கு இந்தக் கடையை அடையாளம் காட்டினார். நம்மைப்போலவே சாரை சாரையாகச் சரக்கு வாங்குவோர் அந்தப் பகுதிக்குச் சென்றார்கள். வழியில் ஆங்காங்கே அமர்ந்திருந்த சில இளைஞர்கள் அலைபேசியை நோண்டுவதுபோல கண்கொத்திப் பாம்பாக நிலவரத்தை ‘வாட்ச்’ செய்தார்கள்.

சென்னையில் ‘சரக்கு’க்கு இல்லை ஊரடங்கு!

பார் இருக்கும் சந்துக்குள் வழிநெடுகிலும் காலி பாட்டில்களின் குவியல்கள். அங்கு ஒரு டாய்லெட் இருந்திருக்க வேண்டும்போல. அதை லேசாகச் சுத்தம் செய்து, தகரத் தடுப்பு வைத்து ரகசியக் கடைபோல மாற்றியிருக்கிறார்கள். தடுப்புகள் நடுவே சதுர வடிவில் ஓட்டை. எட்டிப் பார்த்தோம். உள்ளே ஒரு டேபிளில் சரக்குகளின் மாதிரிகளை வைத்திருந்தனர். டிஸ்ப்ளேவாம்! உள்ளே வட நாட்டு இளைஞர் தோற்றத்தில் ஒருவரும், தமிழ் பேசும் நபரும் நின்றுகொண்டிருந்தனர்.

இரண்டு பிராந்தி பாட்டில்களைக் கேட்டோம். வந்தது. 300 ரூபாய் கூடுதல் விலை சொன்னார்கள். பணம் கைமாறியதும், சரக்கு கைக்கு வந்தது. மெதுவாகப் பேச்சுக் கொடுத்தோம். இதுதான் விலை என்றில்லையாம்... சரக்கின் டிமாண்டைப் பொறுத்து ஏறும், இறங்கும் என்றார்கள். திடீரென சுதாரித்துக்கொண்டவர்களாக... “வாங்கிட்டேல்ல, நகரு... நகரு...’’ என்று சவுண்டு விட்டார்கள்.

திரும்பி, வந்தவழியே நடந்தோம். நமக்கு துப்புச் சொன்ன நபரிடம், “இதெல்லாம் போலீஸுக்குத் தெரியாதா?’’ என்று கேட்டோம். அவர் பார்வையை வேறு பக்கம் திருப்பியபடி லேசாகச் சிரித்தார். அவர் பார்வை சென்ற திசையில் பார்த்தோம். நூறடி தூரத்தில் போலீஸ் ரோந்து வேன் நின்றுகொண்டிருந்தது.

அந்த ஏரியாவில் சோர்ஸ் சிலரிடம் பேசினோம். ‘‘தளபதி ஒயின்ஸ் மட்டுமல்ல... இதே ஏரியாவில் ‘பலமுகம்’ பெயர்கொண்ட பிரமுகர் ஒருவர் இருக்கிறார். அவருக்கும் சரக்கு விற்பனை செய்ய எழுதப்படாத லைசென்ஸை போலீஸ் கொடுத்திருக்கு. லட்சங்களில் மாமூல். வேறு யாரும் இந்தப் பகுதியில விற்க போலீஸ் அனுமதி இல்லை. இந்த இரண்டு பார்ட்டிங்களுக்கு மட்டும்தான் அனுமதி. அங்கே போலீஸ் ரோந்து வேன் நிக்குறது எதுக்காக.... புதுசா வேற யாரும் சரக்கு விற்காமல் பார்த்துக்கிறதுக்குத்தான். எல்லாம் ஒரு தொழில் பாதுகாப்பு’’ என்று சொல்லி `பகீர்’ கிளப்பினார்கள். நமது டீம் மூன்று நாள்களாக தினசரி இவற்றை யெல்லாம் பார்வையிட்டு உறுதிப்படுத்திக் கொண்டது.

ஜூன் 29

இந்தக் கொடுமைகளை, ‘போலீஸ் ஒத்துழைப்போடு நடக்கும் டாஸ்மாக் கொள்ளை! பிளாக் மார்க்கெட் ராஜ்ஜியம்!’ என்கிற தலைப்பில் விகடன் ‘யூ டியூப்’ சேனலில் https://www.youtube.com/watch?v=LeVqmH8rx4I வீடியோவாக வெளியிட்டோம். காவல்துறை தலைமையகத்தில் அதிர்வுகள் தென்பட்டன. டாஸ்மாக் எம்.டி., சென்னை போலீஸ் கமிஷனர், தமிழக உளவுத்துறை உயர் அதிகாரி... இவர்கள் அனைவரும் சம்மந்தப்பட்ட ஏரியாவின் போலீஸ் அதிகாரிகளைக் குடைய ஆரம்பித்தார்கள். இது குறித்து விசாரித்தபோது, ‘‘லோக்கல் ஸ்டேஷனில் கூப்பிட்டுப் பேசி, கடையை மூடிட்டாங்க. கேஸ் போட்டிருக்காங்களான்னு தெரியலை’’ என்றார்கள்.

காவல்துறையில் ஒரு வழக்கம் உண்டு. கண்துடைப்புக்காக மட்டும் ஓரிரு நாள்கள் நடவடிக்கை எடுப்பார்கள். திரும்பவும் ‘பழைய திருடி... கதவைத் திறடி!’ கதைதான். மாமூல் அவர்களுக்கு முக்கியமாயிற்றே. ஆனால், தொடர்ந்து விஷயத்தை ஃபாலோ-அப் செய்யும் வகையில் மீண்டும் அந்த ஸ்பாட்டுக்கு விசிட் அடித்தோம்.

சென்னையில் ‘சரக்கு’க்கு இல்லை ஊரடங்கு!

ஜூன் 4, மாலை 5 மணி

அதே இடம்... சரக்கு விற்ற இடம் மூடப்பட்டிருந்தது. கண்காணிப்பு ஆட்களும் இல்லை. ஆனால், சந்து முனையில் சந்தேகப்படும் வகையில் ஒரு தள்ளுவண்டி நின்றிருந்தது. சிலர் அங்கு வருவதும் போவதுமாக இருந்தார்கள். உற்றுப் பார்த்தபோது சரக்கு விற்பனை கண்ணில் பட்டது. அருகில் சென்றோம். ஏற்கெனவே சரக்கு விற்பனை செய்த அதே நபர்கள்தான் அங்கும் இருந்தார்கள்.

‘‘சரக்கு இருக்கா?’’ என்று கேட்டோம். ‘‘400 ரூவா சரக்குதான் இருக்கு” என்றார்கள். பணத்தை நீட்டினோம். தள்ளுவண்டிக்குக் கீழே சாக்குப் பையில் குவியலாக இருந்த பாட்டில்களில் ஒன்றை எடுத்துத் தந்தார். அடுத்து, அதே ரோட்டில் ஆர்.ஆர்.மஹால் அருகே இன்னொரு டாஸ்மாக் கடை இருந்தது. அதன் வாசலிலும் ஒருவர். ‘சரக்கு?’ என்ற நம் சைகைக்கு அவர் எதிரே கைகாட்டினார். அங்கே போனோம். பைக்கில் சிலர் நின்றிருந்தனர். சரக்கின் பெயரைச் சொன்னதும் 500 ரூபாய் கேட்டார்கள். கொடுத்ததும், அலைபேசியில் யாரிடமோ பேசினார்கள். அடுத்த மூன்றாவது நிமிடத்தில் ஒருவர் ஸ்பாட்டுக்கு வந்து சரக்கைக் கொடுத்துவிட்டுப் போனார்.

இதையடுத்து, மதுவிலக்குப் பிரிவு போலீஸ் அதிகாரி ஒருவரிடம் ஆலப்பாக்கம் ரோட்டில் நடக்கும் கூத்துகளையெல்லாம் விவரித்தோம். விசாரித்துவிட்டு, மீண்டும் லைனில் வந்தார். ‘‘அந்த ஏரியா போலீஸ் ஏ.சி-கிட்ட பேசினேன். இன்னைக்கு (ஜூலை 4-ம் தேதி) மத்தியானம்கூட ரோந்து போனாராம். சரக்கு விற்பனை எதுவும் இல்லைங்கிறாரே...’’ என்றவரை இடைமறித்து, ‘‘சார்... நாங்களும் அதே நாள் அங்கேதான் சரக்கு வாங்கினோம்’’ என்று சொன்னோம். எதிர்முனையில், சிறிது நேரம் மௌனம். போனை வைத்துவிட்டார் அவர்.

சென்னை காவல்துறையில் ஒரு பிரச்னை. இங்குள்ள மதுவிலக்குப் பிரிவு போலீஸார் அனைவரும் சென்னை மாநகர போலீஸ் கமிஷனரின் கட்டுப்பாட்டுக்குள் வருகிறார்கள். இவர்கள் மதுவிலக்கு போலீஸ் உயர் அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் இல்லை. அதனால், சுதந்திரமாக முடிவுகளை எடுக்க முடியவில்லை என்கிறார்கள்.

சம்பந்தப்பட்ட ஏரியா அம்பத்தூர் மதுவிலக்கு பிரிவின் கீழ் வருகிறது. அம்பத்தூர் மதுவிலக்கு பிரிவு இன்ஸ்பெக்டர் மில்லரிடம் பேசினோம். “இளவயசுப் பசங்க புற்றீசல்போலக் கிளம்பி பிளாக்குல சரக்கு விக்குறாங்க. அவங்க பெரிய நெட்வொர்க் எல்லாம் இல்லை. பிடிச்சா, `கொரோனா நேரத்துல வயித்துப் பொழப்புக்கு செய்யறோம்’னு அழறாங்க. இருந்தாலும், அங்கங்கே பிடிச்சு கேஸ் போடத்தான் செய்யறோம்” என்றார்.

சென்னை பெருநகர போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வாலிடம் பேசினோம். “நான் இப்பத்தான் புதுசா வந்திருக்கிறேன். அந்தச் சரக்கு விற்கிற லொகேஷனை அனுப்புங்க” என்றார்.

புதிய கமிஷனராக பதவி ஏற்ற கையோடு, ‘வீடியோ கால் மூலமாகவே மக்களிடம் நேரடியாகப் புகார்களைப் பெறுவேன்’ என்று அறிவித்த மகேஷ்குமார் அகர்வால், அதே சூட்டோடு புகார்களை வாங்கி அசத்துவும் ஆரம்பித்திருக்கிறார். ‘அதே வேகத்தில் நடவடிக்கையும் எடுத்து அதிரடி கிளப்புவார்’ என்கிற நம்பிக்கையோடு, திருட்டுத்தனமாக மதுபானங்கள் விற்கப்படும் வீடியோ பதிவுகளை அவருக்கு அனுப்பிவிட்டுக் காத்திருக்கிறோம்.

மேற்கண்ட இடங்கள் சிறு சாம்பிள்கள்தான். நிறைய இடங்களில் மதுபான விற்பனை ஜோராக நடக்கிறது.

இளைஞர்களே அதிகம் இதில் ஈடுபட்டிருக் கிறார்கள். எதிர்காலத்தில் இது மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்தும். நாளை இவர்கள் ரெளடிகளாக உருவெடுக்கலாம்; குடிநோயாளி களாக மாறலாம். மிகப்பெரும் சமூகக் கேடுகளை ஏற்படுத்தலாம். நேர்மையான அதிகாரிகள் இந்தத் தவறுகளை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும்!

`டாஸ்மாக் கொள்ளை! பிளாக் மார்க்கெட் ராஜ்ஜியம்!’ என்கிற தலைப்பில் வீடியோவாகக் காண...