Published:Updated:

“மது வருமானத்துக்கு மாற்று வருமானம் இருக்கிறது!”

டாஸ்மாக்
பிரீமியம் ஸ்டோரி
News
டாஸ்மாக்

அணிவகுக்கும் வழிகாட்டுதல்கள்

‘டாஸ்மாக் கடைகளை மூடியிருப்பதால் வருமானம் பாதிக்கப்பட்டிருக்கிறது. எனவே, அவற்றைத் திறக்க அனுமதிக்க வேண்டும்!’ என்ற கோரிக்கையுடன் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து டாஸ்மாக் கடைகளை திறந்துவிட்டது தமிழக அரசு. ஆனாலும், மதுக்கடைகளுக்கு எதிரான குரல்கள் அடங்கவில்லை. ‘மதுக்கடைகளை நிரந்தர மாக மூட வேண்டும்’ என வலியுறுத்தும் பலர் மது வருமானத்துக்கு இணையாக மாற்று வருமானத்துக்கும் வழி சொல்கின்றனர்.

தமிழக அரசு ஆண்டுதோறும் ஐந்து லட்சம் கோடி ரூபாயை வருமானமாக ஈட்டுவதற்கான வழிமுறையைத் துண்டறிக்கையாக வெளியிட்டு, பரபரப்பு கிளப்பியிருக்கிறது தமிழ்நாடு பொதுப்பணித்துறை மூத்த பொறியாளர் சங்கம்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

இதுகுறித்து இந்தச் சங்கத்தின் மாநிலச் செயலாளர் வீரப்பனிடம் பேசினோம். ‘‘சொத்து வரி, சுற்றுலா வரியை முறையாகக் கணக்கிட்டு வசூலிப்பதுடன், உள்ளாட்சி அமைப்புகளின் நிதி இழப்பு விஷயங்களில் அரசு அக்கறை செலுத்த வேண்டும். அடுத்ததாக பார்க்கிங் வசதியின்றி, தெருவோரங்களில் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு அரசே மாதந்தோறும் பார்க்கிங் கட்டணம் வசூலிக்கலாம். நாட்டின் வளர்ச்சித் திட்டங்களுக்கு உலக வங்கியிடம் கடன் வாங்குவதை நிறுத்திவிட்டு, நபார்டு, எல்.ஐ.சி., தேசிய வங்கிகளிடமிருந்து கடன் பெறலாம். இதனால், ஆண்டுதோறும் வட்டித் தொகையாக நாம் செலுத்திவரும் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மிச்சமாகும். அரசு மின் உற்பத்தி நிலையங்களை நவீனப்படுத்தியும், புதிதாகக் கட்டமைத்தும் மின் உற்பத்தித்திறனை அதிகரித் தால் தனியாரிடமிருந்து கூடுதல் விலைக்கு மின்சாரம் வாங்குவதை நிறுத்திவிடலாம். இதை யெல்லாம் செய்தாலே டாஸ்மாக் வருமானத்தை நம்பியிருக்க வேண்டிய நிலை அரசுக்கு இருக்காது” என்றார் ஆவேசமாக.

வீரப்பன் -  தமிழருவி மணியன் - பாடம் நாராயணன்
வீரப்பன் - தமிழருவி மணியன் - பாடம் நாராயணன்

மதுவிலக்கு கொள்கையைத் தொடர்ந்து வலியுறுத்திவரும் காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியனிடம் பேசினோம். ‘‘40 நாள்களாக டாஸ்மாக் கடைகளை மூடியதால் 2,300 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டிருப்பதாக அரசே கணக்குச் சொல்கிறது. ஆக, மக்களின் மகிழ்ச்சியைவிட இவர்களுக்கு வருமானம்தான் முக்கியம். வருமானத்தைப் பெருக்க அரசுக்கு ஆயிரம் வழிகள் இருக்கின்றன. 2012-ம் ஆண்டு ‘மது வருமானத்துக்கான மாற்றுவழி’ என்ற பெயரில் தனியாகத் திட்ட அறிக்கையே தயார் செய்து அன்றைய அ.தி.மு.க அரசிடம் கொடுத்தோம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மது வருவாய் இல்லாத குஜராத் மாநிலத்தில் 100 விழுக்காடு விற்பனை வரியை முழுமையாக வசூலிக்கின்றனர். எனவே, வரி வருவாய் சீர்திருத்தம் மற்றும் முழுமையான வரி வசூல் ஆகியவற்றில் தமிழ்நாடு கவனம் செலுத்த வேண்டும். 2012-ம் ஆண்டு கணக்குப்படி, ஒரு யூனிட் மணலின் விலை 300 ரூபாய். இதே ஒரு யூனிட் மணல் பொதுமக்களின் கைகளுக்கு வந்துசேரும்போது அதன் விலை 3,000 ரூபாயாக உயர்ந்துவிடுகிறது. 10 மடங்குத் தொகை தனியார் கைகளுக்குப் போய்விடுகிறது. ஏன் அரசே மணல் வியாபாரம் செய்யக் கூடாது... மது விற்கும் அரசுக்கு மணல் விற்பது ஒன்றும் கேவலம் இல்லையே?

டாஸ்மாக்
டாஸ்மாக்

அதேபோல், கனிம வளத்துறையில் தினமும் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்களைத் தனியார் முதலாளிகளும் அரசியல்வாதிகளும் கூட்டுச் சேர்ந்து கொள்ளையடித்துக்கொண்டிருக்கின்றனர். அதையும் அரசே ஏற்று நடத்த வேண்டும். முத்திரை வரி வருவாயிலும் அரசு கவனம் செலுத்தலாம். ஏனெனில், அரசு நிர்ண யிக்கும் வழிகாட்டு விலைக்கும், சந்தை விலைக்கும் சம்பந்தமே இல்லை என்பது ஊரறிந்த உண்மை.

தொலைக்காட்சி, மின்விசிறி, மிக்ஸி, கிரைண்டர் என இலவசத் திட்டங்களுக்குச் செலவு செய்வதற்காகவே டாஸ்மாக் கடைகளைத் திறக்க வேண்டிய கட்டாயம் இவர்களுக்கு ஏற்படுகிறது. மதுக்கடைகளை மூடிவிட்டாலே இலவசத் திட்டங்களுக்கு அவசியம் இருக்காது. தங்கள் உழைப்பில் கிடைக்கும் வருமானத்தை விரயமாக்காமல் எளிய மக்கள் நிம்மதியாக நல் வாழ்வு வாழ்வார்கள்’’ என்கிறார் நம்பிக்கையுடன்.

மதுவிலக்கு கோரிக்கையை வலியுறுத்திப் போராடிவரும் சமூக ஆர்வலர் பாடம் நாராயணன், ‘‘மது வருமானமே இருக்கக் கூடாது என்பதுதான் என் கருத்து. கொரோனாவை முன்னிறுத்தித்தான் தற்போது மதுக்கடைகளைத் திறக்கலாமா, கூடாதா என்று விவாதிக்கின்றனர். ஆனால், இதயம், குடல், கல்லீரல் என உள்ளுறுப்புகள் சார்ந்த வாழ்வியல் நோய்கள் மற்றும் தற்கொலை எண்ணம், மன அழுத்தம் என உளவியல் பிரச்னைகளுக்கும்கூட மதுப்பழக்கம் மிகப்பெரிய காரணமாக இருக்கிறது. எனவே மதுவைத் தடைசெய்வதில் அரசுக்கு என்ன தயக்கம்?” என்கிறார்.

உச்ச நீதிமன்றத்துக்குச் சென்று, ‘மதுக்கடை களைத் திறப்பது அரசின் கொள்கை முடிவு’ என்று உரக்க வாதாடும் தமிழக அரசுக்கு இது புரியுமா?