அரசியல்
அலசல்
சமூகம்
Published:Updated:

டாஸ்மாக் கடை திறக்க நினைப்பதில் என்ன தவறு? - தி.மு.க எம்.எல்.ஏ-வின் ‘லாஜிக்’ கேள்வி!

மக்கள் போராட்டம்
பிரீமியம் ஸ்டோரி
News
மக்கள் போராட்டம்

தனிநபர் சம்பாதிப்பதை ஏன் அரசு சம்பாதிக்கக் கூடாது... மேலும் மது வாங்குவதற்காக வெளியூர் செல்பவர்கள் அடிக்கடி விபத்தில் சிக்கி இறந்துள்ளனர்.

‘மக்கள் போராட்டத்துக்கு எதிராக, டாஸ்மாக் கடை திறப்பதில் ஆர்வம் காட்டிவருகிறார் ஜெயங்கொண்டம் தி.மு.க எம்.எல்.ஏ’ எனக் கொந்தளிக்கின்றனர் சூரியமணல் கிராம மக்கள்!

கண்ணன்
கண்ணன்

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தை அடுத்துள்ளது சூரியமணல் கிராமம். இங்கு டாஸ்மாக் கடைக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட செல்வாம்பாள் பாட்டியிடம் பேசியபோது, “குடிச்சு குடிச்சே எம்புருசன் செத்துப்போயிட்டான். ஓட்டு வாங்க வர்றப்ப, ‘சாராயக் கடையை மூடுவோம்’னு சொன்னதாலதான் ஓட்டுப் போட்டோம். ஆனா இப்ப ‘குடிகாரங்க கேக்குறாங்க’னு சொல்லி இங்கன கடையைத் திறக்க முயற்சி செய்யுறாரு எம்.எல்.ஏ. இன்னும் எத்தனை பேரோட தாலியறுக்க காத்திருக்காங்கன்னு தெரியலையே?” என ஒப்பாரி வைத்தார்.

டாஸ்மாக் கடை திறக்க நினைப்பதில் என்ன தவறு? - தி.மு.க எம்.எல்.ஏ-வின் ‘லாஜிக்’ கேள்வி!

பா.ம.க நகரச் செயலாளர் பரசுராமன், “கடந்த ஆகஸ்ட் 15-ம் தேதியே ஊர் பஞ்சாயத்தைக் கூட்டி, இரண்டு முறை மதுவிலக்கு தீர்மானமும் நிறைவேற்றியிருக்கிறோம். ஆனால், சூரியமணல் கிராமத்தில் புதிதாக ஒரு டாஸ்மாக் கடையைத் திறக்க கடுமையாக முயன்றுவருகிறார் எம்.எல்.ஏ கண்ணன். கடந்த மாதம், திடீரென்று ஒருநாள் எங்கள் கிராமத்து வயல்வெளியில் புதிதாக ஒரு டாஸ்மாக் கடையைத் திறந்தபோது, 300 பெண்களுக்கும் மேல் அங்கு கூடி, கடையை மூடச்சொல்லி ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். வேறு வழியில்லாமல் கடையை மூடிவிட்டார்கள். ஆனால், அதற்கு மறுநாளே எம்.எல்.ஏ வற்புறுத்தலின் பேரில், பொதுமக்கள் மற்றும் பா.மக நிர்வாகிகள் 25 பேர்மீது கொலை முயற்சி வழக்கைப் பதிவுசெய்துவிட்டார்கள். ‘அமைதியான முறையில் போராட்டம் நடத்திய எங்கள்மீது எப்படிக் கொலை முயற்சி வழக்கு பதிவுசெய்ய முடியும்?’ என டி.எஸ்.பி-யிடம் கேட்டதற்கு, ‘அப்படித்தான் செய்வோம். உங்களுக்கு பதில் சொல்லவேண்டிய அவசியம் எனக்கில்லை’ எனச் சொல்லிவிட்டார். அதையடுத்து ‘டாஸ்மாக் கடை திறக்கக் கூடாது’ என்று உயர் நீதிமன்றத்தில் தடையாணை வாங்கியிருக்கிறோம். ஆனால், அதை உடைப்பதற்காக மாவட்ட நிர்வாகம், டாஸ்மாக்குடன் இணைந்து கடுமையாக முயன்று வருகிறார் எம்.எல்.ஏ” என்றார் ஆவேசமாக.

செல்வாம்பாள்
செல்வாம்பாள்
பரசுராமன்
பரசுராமன்

இதையடுத்து, ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ கண்ணனிடம் இந்த விவகாரம் குறித்து கேட்டபோது, ‘‘தற்போது ஜெயங் கொண்டம் நகர்ப்புறத்தில் மதுக்கடைகளே கிடையாது. எனவே, கடந்த ஆட்சியின்போது பா.ம.க மற்றும் அ.தி.மு.க -வினருக்குப் பணத்தைக் கொடுத்துவிட்டு சிலர் இங்கே சட்டவிரோதமாக மது விற்றுவந்தனர். இப்படி தனிநபர் சம்பாதிப்பதை ஏன் அரசு சம்பாதிக்கக் கூடாது... மேலும் மது வாங்குவதற்காக வெளியூர் செல்பவர்கள் அடிக்கடி விபத்தில் சிக்கி இறந்துள்ளனர். அதனால்தான் நகரின் அருகிலுள்ள சூர்யமணல் கிராமத்திலேயே டாஸ்மாக் கடை யைத் திறக்க நினைக்கிறேன். இதில் என்ன தவறு... பா.ம.க -வினர் அரசியல் செய்வதற்காக என்மீது களங்கம் ஏற்படுத்த நினைக்கிறார்கள். மற்றபடி போலீஸார் வழக்கு பதிவு செய்ததற்கும் எனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை” என்றார்.

மது வீட்டுக்கும் நாட்டுக்கும் கேடு என்றால், மது விற்கும் கடை வீட்டுக்கும் நாட்டுக்கும் கேடு இல்லையா?!