Published:Updated:

“16 வருடங்களாக பாலியல் தொல்லை!” - கண்டுகொள்ளாத கல்வித்துறை.. கதறிய மாணவிகள்!

சேகர்

வகுப்பெடுக்கும்போது ரெட்டை அர்த்தத்துல பேசுறது, சோஷியலாகப் பழகுறதுபோல மாணவிகளோட தோள்ல கைபோடுறது, கன்னத்தைக் கிள்ளுறதுனு அத்துமீறல்களில் ஈடுபட்டிருக்கார்

“16 வருடங்களாக பாலியல் தொல்லை!” - கண்டுகொள்ளாத கல்வித்துறை.. கதறிய மாணவிகள்!

வகுப்பெடுக்கும்போது ரெட்டை அர்த்தத்துல பேசுறது, சோஷியலாகப் பழகுறதுபோல மாணவிகளோட தோள்ல கைபோடுறது, கன்னத்தைக் கிள்ளுறதுனு அத்துமீறல்களில் ஈடுபட்டிருக்கார்

Published:Updated:
சேகர்

157 ஆண்டுகள் பாரம்பர்யம்கொண்டது கும்பகோணம் நகர மேல்நிலைப்பள்ளி. கணித மாமேதை ராமானுஜன் படித்த பள்ளியும்கூட. இந்தப் பள்ளியின் கணித ஆசிரியரான சேகர்மீது குவிந்திருக்கும் பாலியல் புகார்கள், நம்மைத் திகிலடையச் செய்கின்றன. 23 மாணவிகள் அளித்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தில் கைதுசெய்யப்பட்டிருக்கிறார் சேகர். இதைப் பற்றி விசாரிக்கச் சென்றால், ‘தொடந்து 16 ஆண்டுகளுக்கும் மேலாக அந்த ஆசிரியர் மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுவந்திருக்கிறார்’ என்றும் ‘இப்போதுதான் அவர்மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது’ என்றும் சொல்லி நம்மை அதிரவைத்தார்கள்!

“16 வருடங்களாக பாலியல் தொல்லை!” - கண்டுகொள்ளாத கல்வித்துறை.. கதறிய மாணவிகள்!

காமவெறி பிடித்த கணக்கு ஆசிரியர்!

இது குறித்து சமூக ஆர்வலர் கண்ணன் பேசியபோது, ‘‘இந்தப் பள்ளியில 20 வருஷத்துக்கும் மேலாக சேகர் பணிபுரிஞ்சுட்டு வர்றார். வகுப்பெடுக்கும்போது ரெட்டை அர்த்தத்துல பேசுறது, சோஷியலாகப் பழகுறதுபோல மாணவிகளோட தோள்ல கைபோடுறது, கன்னத்தைக் கிள்ளுறதுனு அத்துமீறல்களில் ஈடுபட்டிருக்கார். சேகரோட அருவருக்கத்தக்கச் செய்கைகளால பள்ளிக்குப் போகவே மாணவிகள் பயந்திருக்காங்க. இதைக் கேள்விப்பட்டு ஆத்திரத்தோட பல பெற்றோர் பள்ளிக்கே போயிருக்காங்க. அப்படிப் பெற்றோர்கள் போகும்போதெல்லாம், ‘நான் தப்பான எண்ணத்துல உங்க பிள்ளைகிட்ட பழகலை. என்னை நீங்க தவறா நினைச்சிருந்தா மன்னிச்சுக்கோங்க’ என்று அவர்களின் கால்ல விழுறதை வழக்கமா வெச்சுருக்கார் சேகர். ஒருசில பெற்றோர் அவரை அடிச்சு உதைச்ச சம்பவங்களும் நடந்திருக்கு.

பள்ளி நிர்வாகத்துக்குப் பலமுறை புகார் போயிருக்கு. கல்வித்துறை அதிகாரிகளுக்கும் தகவல் தெரிஞ்சிருக்கு. ஆனா, யாருமே அவர் மேல நடவடிக்கை எடுக்கலை. பள்ளிக்கூடத்துல மட்டுமில்லாம, கும்பகோணம் ரயில்வே ஸ்டேஷன் கேன்டீன்ல வேலை செஞ்ச பெண்கிட்டயும் தவறா நடந்துக்கிட்டு பஞ்சாயத்தான சம்பவமும் நடந்தது. சில வருஷங்களுக்கு முன்பு, அவரைப் பள்ளி நிர்வாகம் சஸ்பெண்ட் செஞ்சுது. ‘நான் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவன் என்பதால, பள்ளி நிர்வாகம் பழிவாங்குது’ என்று சிலரைக் கூட்டிக்கிட்டு வந்து பள்ளி முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தினார். நீதிமன்றத்துக்கும் போனார். அதனால, பயந்துபோன பள்ளி நிர்வாகம், அவரை மறுபடியும் பள்ளியில் சேர்த்துக்கிச்சு. மறுபடியும் அவர் ஆட்டத்தை ஆரம்பிச்சிருக்கார்’’ என்றார் கோபத்தோடு.

“16 வருடங்களாக பாலியல் தொல்லை!” - கண்டுகொள்ளாத கல்வித்துறை.. கதறிய மாணவிகள்!

ஆபாச ஆசிரியரை ஆதரித்த அதிகாரிகள்!

“பள்ளி நிர்வாகத்துக்குத் தெரிந்தேதான், 16 ஆண்டுகளுக்கும் மேலாக ஆசிரியர் சேகர் இத்தகைய இழிவான செயலில் ஈடுபட்டு வந்ததிருக்கிறார்” என்று முன்னாள் மாணவிகளின் பெற்றோர்களும் குற்றம் சாட்டினார்கள். பள்ளியின் செயலாளரான வேலப்பனிடம் இது குறித்துக் கேட்டோம், ‘‘ஆசிரியர் சேகர்மீது எங்களுக்குப் பல வருஷங்களாகவே புகார் வந்தது உண்மைதான். அவரைக் கூப்பிட்டு விசாரிச்சா, ‘இனிமே இதுபோலச் செய்ய மாட்டேன்’னு மன்னிப்புக் கடிதம் எழுதிக்கொடுப்பார். திருந்துறதுக்குப் பல வாய்ப்புகளைக் கொடுத்தும் அவர் மாறலை. மூணு வருஷத்துக்கு முன்பு, 25 மாணவிகள் சேகர் மீது புகார் கொடுத்தாங்க. அதைப் பள்ளிக் கல்வித்துறைக்கு அனுப்பினோம். அவரைப் பணிநீக்கம் செய்யச் சொல்லியும் பரிந்துரைச்சோம். மாவட்டக் கல்வி அலுவலர் பள்ளிக்கே வந்து 25 மாணவிகள்கிட்டேயும் பெற்றோர்கள்கிட்டேயும் விசாரிச்சாங்க. அதையெல்லாம் வீடியோவாவும் பதிவுசெஞ்சாங்க. ஆனாலும், அவர்மேல நடவடிக்கை எடுக்கலை.

நாலு மாசத்துக்கு முன்னாடிகூட சேகர் மீதான புகார்களை ஆதாரங்களோட மாவட்டக் கல்வி அலுவலர் அண்ணாதுரைக்கு அனுப்பிவெச்சோம். அவர் சேகருக்கு வேண்டப்பட்டவர் என்பதால், எந்த நடவடிக்கையும் எடுக்காததோடு, நாங்க அனுப்பிய புகார் மனுவை மறுபடியும் எங்களுக்கே அனுப்பிவெச்சார். சேகருக்கு அதிகாரிகள் ஆதரவாகவும் பாதுகாப்பாகவும் இருந்ததாலதான், எங்களால அவர்மீது நடவடிக்கை எடுக்க முடியலை. ஊரடங்கு முடிஞ்சு பள்ளி திறந்ததும், மறுபடியும் அவர் மாணவிகள்கிட்ட தவறாக நடக்க ஆரம்பிச்சிருக்கார். 23 மாணவிகள் எழுத்துபூர்வமா புகார் கொடுத்திருக்காங்க. மாணவிகளோட புகார்களோட எங்ககிட்ட இருந்த வீடியோ பதிவுகள் உள்ளிட்ட ஆதாரங்களையும் சேர்த்து, மாவட்ட எஸ்.பி ரவளிபிரியாவிடம் புகார் கொடுத்தோம். அதை விசாரிச்ச போலீஸார், போக்சோ சட்டத்துல சேகரைக் கைதுசெஞ்சுருக்காங்க’’ என்றார்.

கும்பகோணம் மாவட்ட கல்வி அலுவலரான அண்ணாதுரையிடம் பள்ளியின் செயலாளர் வேலப்பனின் குற்றச்சாட்டு குறித்துக் கேட்டதற்கு, ‘‘பள்ளி நிர்வாகம் அனுப்பிய புகாரை முதன்மைக் கல்வி அலுவலகத்துக்கு அனுப்பிவிட்டேன். ஆசிரியர்மீது நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் எனக்குக் கிடையாது. ஆசிரியர் சேகர் எனக்குத் தெரிந்தவர் என்பதால் நடவடிக்கை எடுக்க வில்லை என்பதில் உண்மையில்லை’’ என்றார்.

தஞ்சாவூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சிவக்குமாரிடம் பேசியபோது, ‘‘பள்ளி நிர்வாகத்தின் சார்பில் சேகர் மீதான புகார்களும், அதற்கு ஆதாரமாகச் சில ஆவணங்களும் கிடைத்துள்ளன. அதையெல்லாம் ஆய்வுசெய்து வருகிறோம். மாணவர்கள் நலன்தான் எங்களுக்கு முக்கியம். சேகர்மீது நிச்சயமாகத் துறைரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று உறுதியளித்தார்.

கண்ணன்
கண்ணன்

கும்பகோணம் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் உமா மகேஸ்வரி, ‘‘மாணவிகளுக்கு ஆசிரியர் சேகர் பாலியல் தொல்லை கொடுத்தது விசாரணையில் உறுதிசெய்யப்பட்டது. மாணவிகளிடம் தனித்தனியாக விசாரித்தபோது அவரின் அத்துமீறலைச் சொல்லி மாணவிகள் பலரும் கதறி அழுதார்கள். அவரது செயல்களை வெளியில் சொன்னால் ஃபெயில் ஆக்கிவிடுவதாக மிரட்டியிருக்கிறார். அவரை போக்சோ சட்டத்தில் கைதுசெய்து சிறையில் அடைத்திருக்கிறோம். நிச்சயமாக தண்டனை வாங்கிக்கொடுப்போம்” என்றார் அழுத்தமாக.

தாய்மடிக்குப் பிறகு பாதுகாப்பான இடம் பள்ளிதானே? ஒரு கணிதமேதை படித்த பள்ளியின் கணித ஆசிரியரே செய்திருக்கும் இந்தக் கொடூரம், நம் பிள்ளைகளின் பாதுகாப்பு குறித்த கவலையை, அச்சத்தைக் கூட்டுகிறது!