Published:Updated:

மகாத்மா காந்தி ஒரு மனிதக் கடவுள்! - கோயில் கட்டி வழிபடும் கிராமங்கள்!

செந்தாம்பாளையம்  கிராம மக்கள்
பிரீமியம் ஸ்டோரி
செந்தாம்பாளையம் கிராம மக்கள்

ஊர் காரியக்காரரான பழனிசாமி, ‘‘எங்க ஊர்க்காரரான வையாபுரி முதலியார்தான் இந்தக் கோயில் அமையுறதுக்கு முழுக்காரணம்.

மகாத்மா காந்தி ஒரு மனிதக் கடவுள்! - கோயில் கட்டி வழிபடும் கிராமங்கள்!

ஊர் காரியக்காரரான பழனிசாமி, ‘‘எங்க ஊர்க்காரரான வையாபுரி முதலியார்தான் இந்தக் கோயில் அமையுறதுக்கு முழுக்காரணம்.

Published:Updated:
செந்தாம்பாளையம்  கிராம மக்கள்
பிரீமியம் ஸ்டோரி
செந்தாம்பாளையம் கிராம மக்கள்

தேச விடுதலைக்காகப் போராடி மறைந்த தலைவர்கள் பலரும் புத்தகங்களில் வரலாறாக மட்டுமே எஞ்சி நிற்கின்றனர். ஆனால், தேசப்பிதா மகாத்மா காந்திக்குக் கோயில் கட்டி, தினமும் வழிபாடு செய்து அசத்தி வருகின்றனர் ஈரோடு மாவட்டம், கவுந்தப்பாடி அருகிலுள்ள செந்தாம்பாளையம் கிராம மக்கள். தேனி மாவட்டம், கம்பம் அருகே உள்ள காமயகவுண்டன்பட்டி கிராமத்திலும் காந்தி கோயில் இருக்கிறது.

செந்தாம்பாளையம் கிராமத்தின் மையமாகக் கட்டப்பட்டிருக்கிறது ‘தேசப்பிதா மகாத்மா காந்தி, அன்னை கஸ்தூரிபாய் திருக்கோயில்.’ கோயிலின் உள்ளே 5 அடி உயரத்தில் கையில் தடியை ஊன்றியபடி, பொக்கைவாய்ச் சிரிப்புடன் நிற்கிறார் மகாத்மா. கஸ்தூரிபாய் அம்மையாருக்கும் தனிப் பீடத்தில் சிலை இருக்கிறது. வழக்கமான கோயிலைப் போலவே இந்தக் கோயிலில் தினமும் மூன்று கால பூஜைகளை நடத்துகின்றனர். இதற்கெனத் தனி அர்ச்சகரையும் நியமித்துள்ளனர். காந்தி ஜெயந்தி, சுதந்திர தினம், குடியரசு தினம் ஆகிய நாள்களில் சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் பூஜைகள் செய்யப்படுகின்றன. இந்தக் கோயிலில் சிவன், மகா கணபதி, துர்க்கை அம்மன், லட்சுமி, சரஸ்வதி, நவகிரகங்கள் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.

காந்தி
காந்தி

ஊர் காரியக்காரரான பழனிசாமி, ‘‘எங்க ஊர்க்காரரான வையாபுரி முதலியார்தான் இந்தக் கோயில் அமையுறதுக்கு முழுக்காரணம். ‘நாட்டுக்காகக் கடுமையாகப் போராடி சுதந்திரம் வாங்கிக் கொடுத்த காந்தி ஒரு தெய்வம் மாதிரி’ன்னு சொல்லிக்கிட்டே இருப்பாரு. ஒருநாள் ஊர் முக்கியஸ்தர்களைக் கூப்பிட்டு ‘காந்திக்கு நாடு முழுக்க பல இடங்கள்ல சிலை வச்சிருக்காங்க. எல்லாம் வெட்டவெளியில இருக்கு. காக்கை, குருவிங்க எச்சம் காந்தி சிலை மேல அசிங்கத்தை ஏற்படுத்துது. நாட்டுக்காக உழைச்ச அந்தத் தியாகியை நாம கடவுள் மாதிரி வணங்கணும். காந்திக்கு ஒரு கோயில் கட்டலாம்னு இருக்கேன். இடம் மட்டும் கொடுத்தீங்கன்னா போதும்’ எனக் கேட்டாரு. ஊர் மக்கள் ஒரு மனசாக் கூடி, மாரியம்மன் கோயிலுக்குச் சொந்தமான இடத்தைக் கொடுத்தோம். அவருடைய பெருமளவு பணத்திலும், ஊர் மக்களின் ஒத்துழைப்புடனும் காந்திக்கு 6.2.1997-ல் கோயில் கட்டப்பட்டது. ஊரே திரண்டு வந்து காந்தி கோயில் கும்பாபிஷேகத்தைத் திருவிழா மாதிரி செஞ்சாங்க” என்றார்.

கஸ்தூரிபாய்
கஸ்தூரிபாய்

காந்தி கோயில் விழா கமிட்டியைச் சேர்ந்த மாரிமுத்து என்பவரோ, “காந்தி ஜெயந்திதான் இந்தக் கோயிலோட மிகப்பெரிய விசேஷமான நாள். அக்டோபர் 1-ம் தேதி சாயங்காலமே பெருந்தலையூர்ல இருக்கிற வாணி ஆற்றில் இருந்து ஊர்ப் பொதுமக்கள் குடங்களில் தீர்த்தம் எடுத்துட்டு வருவாங்க. காந்தி ஜெயந்தி அன்னைக்குக் காலையில அபிஷேகம் ஆராதனை பூஜைகள் நடக்கும். அதுல சுத்துப்பட்டு ஊர்ல இருக்கிற மக்களும் வந்து கலந்துக்குவாங்க. 500 பேருக்குக் குறைவில்லாம அன்னதானம் நடக்கும். அன்றைய தினம் காந்தி பற்றிச் சொற்பொழிவுகள் நடக்கும்'' என்றார்.

காந்தி கோயில் அர்ச்சகரான கண்ணன் ஐயர், “கோயில் கட்டப்பட்டபோது மூலவராக காந்தியும், கஸ்தூரிபாய் அம்மையாரும் மட்டும்தான் இருந்தாங்க. சுதந்திர தினம், குடியரசு தினம், காந்தி ஜெயந்தி சமயங்கள்ல மட்டும்தான் மக்கள் இந்தக் கோயிலுக்கு காந்தியைப் பார்க்க வந்தாங்க. மற்ற கடவுள்களும் இருந்தாதான் மக்கள் தினமும் கோயிலுக்கு வருவாங்கன்னு, அதன்பிறகு பிரதிஷ்டை செய்தோம். மற்ற கடவுள்கள் வைக்கப்பட்டாலும், காந்தியைக் காண பல ஊர்களில் இருந்தும் மக்கள் வர்றாங்க. காந்தியை வணங்கிச் செல்லும் பொதுமக்கள் தங்களுக்கு பெரும் மன அமைதி கிடைப்பதாகச் சொல்கிறார்கள்” என்றார்.

செந்தாம்பாளையம்  கிராம மக்கள்
செந்தாம்பாளையம் கிராம மக்கள்
செந்தாம்பாளையம்  கிராம மக்கள்
செந்தாம்பாளையம் கிராம மக்கள்

வையாபுரி முதலியாரின் மூத்த மகனும், தற்போது காந்தி கோயில் நிர்வாகத்தை கவனித்து வருபவருமான தங்கராஜிடம் பேசினோம். “அப்பா மூணாங்கிளாஸ் வரைதான் படிச்சாரு. தறி வேலைக்குக் கூலித் தொழிலாளியாகப் போனவரு, தன் உழைப்பால வெளி மாநிலங்களுக்குப் போய் வியாபாரம் செய்ற அளவுக்கு வளர்ந்தாரு. சுதந்திரப் போராட்டத்தின்போது காந்தி ரெண்டு தடவை கவுந்தப்பாடிக்கு வந்திருக்காரு. அப்போ அப்பா காந்தியை நேர்ல சந்திச்சதா சொல்லியிருக்காங்க. அதுல இருந்து அப்பாவுக்கு காந்தி மேல பெரிய பற்று உண்டாச்சு. காந்திக்குக் கோயில் கட்டணும்ங்கிறது அப்பாவுக்குப் பெரிய கனவு. அப்பா இறந்த பின்னாடியும் காந்தி கோயிலை நல்லமுறையா பராமரிச்சுக்கிட்டு இருக்கோம். கோயிலுக்கு பெருசா யாரும் உதவ முன்வர்றது இல்லை. அதனால கோயிலை அரசாங்கம் எடுத்து நடத்துனா நல்லா இருக்கும்னு எதிர்பார்க்குறோம். இதுசம்பந்தமாக அரசுக்கும் கோரிக்கை மனு கொடுத்திருக்கோம்” என்றார்.

மகாத்மா காந்தி ஒரு மனிதக் கடவுள்! - கோயில் கட்டி வழிபடும் கிராமங்கள்!

காமயகவுண்டன்பட்டியில் ஊரின் ஆரம்பத்திலேயே மகாத்மா காந்தி கோயில் இருக்கிறது. உலக வரைபடத்துக்கு முன்னே அமைக்கப்பட்டிருந்த பீடத்தில் கையில் புத்தகத்துடன் நிற்கும் வெண்கலச் சிலையாகச் சிரிக்கிறார் காந்தி. கோயில் வளாகத்தில் நேரு, சுபாஷ் சந்திர போஸ் உள்ளிட்ட தேசியத் தலைவர்களின் படங்களும், காமயகவுண்டன்பட்டியைச் சேர்ந்த 14 சுதந்திரப் போராட்டத் தியாகிகளின் படங்களும் வரிசையாகத் தொங்கவிடப்பட்டிருந்தன. கோயிலுக்கு வருவோர் படிப்பதற்காக காந்திய சிந்தனைகளை வளர்க்கும் விதமான புத்தகங்கள் கொண்ட ஒரு அலமாரியும் இருந்தது.

மகாத்மா காந்தி ஒரு மனிதக் கடவுள்! - கோயில் கட்டி வழிபடும் கிராமங்கள்!

காமயகவுண்டன்பட்டியைச் சேர்ந்த மகேந்திரபாபுவிடம் பேசினோம். ‘‘நாட்டின் விடுதலைக்காக காந்தி போராட்டங்களை முன்னெடுக்கத் தொடங்கிய 1928 முதலே எங்கள் ஊரில் விடுதலை இயக்கம் வளரத் தொடங்கியது. எங்கள் ஊரைச் சேர்ந்த சக்திவடிவேல், பாண்டியராஜ், ஈசப்பன், பரமசிவம், சுப்புசாமி, ஏ.எம்.கே.கிருஷ்ணசாமி, சாமாண்டி, வீராச்சாமி, சி.ராமசாமி, ஜெ.கிருஷ்ணசாமி, சுப்பிரமணியன், சுருளியாண்டி, குந்தளி ராமசாமி ஆகியோர் போராட்டங்களில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டனர்.

கள்ளுக்கடை மறியல், உப்புச் சத்தியாகிரகப் போராட்டங்களில் பங்கெடுக்க ஆங்கிலேயரின் கண்களில் படாமல் தினமும் 30, 40 கிலோ மீட்டர் நடந்து சென்று கலந்துகொண்டுள்ளனர். சிறைக்கும் சென்றுள்ளனர். குறிப்பாக சக்திவடிவேல் அந்தமான் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் பின்னாளில் எம்.எல்.ஏ-வாகவும் எம்.பி-யாகவும் இருந்தார். எங்கள் ஊரைச் சேர்ந்த பாண்டியராஜ் எம்.எல்.ஏ ஆனார்.

1948-ல் காந்திஜியின் உடல் தகனம் செய்யப்பட்ட பிறகு அவரின் அஸ்தி பல பாகங்களாகப் பிரிக்கப்பட்டு இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கு மக்கள் அஞ்சலி செலுத்துவதற்காகக் கொண்டு செல்லப்பட்டது. எம்.பி-யாக இருந்த சக்திவடிவேல் முயற்சியால் எங்கள் ஊருக்கும் அஸ்தி கொண்டுவரப்பட்டது. அப்போது எங்கள் ஊர் மட்டுமல்லாது, பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் அஞ்சலி செலுத்திச் சென்றனர். இதையடுத்து அந்த அஸ்தி சுருளி அருவியில் கரைக்கப்பட்டது. காந்திஜியின் அஸ்தி வைக்கப்பட்டிருந்த இடத்தில் கோயில் எழுப்ப வேண்டும் என எங்கள் ஊர்த் தியாகிகள் கூறினர்.

காமயகவுண்டன்பட்டி காந்தி கோயில்
காமயகவுண்டன்பட்டி காந்தி கோயில்
மகாத்மா காந்தி ஒரு மனிதக் கடவுள்! - கோயில் கட்டி வழிபடும் கிராமங்கள்!

சக்திவடிவேல், பாண்டியராஜ் ஆகியோர் முயற்சியில் மக்களிடம் நிதி திரட்டி 1985-ல் கோயில் எழுப்பப்பட்டது. வழக்கமான கோயில்களில் கடவுள் சிலை எவ்வாறு நிறுவப்படுமோ, அதேபோல முறையாக பூஜை, அபிஷேகம், ஆராதனைகள் செய்யப்பட்டன. அப்போதைய துணை ஜனாதிபதி ஆர்.வெங்கட்ராமன் குடும்பத்துடன் வந்து இந்தக் கோயிலைத் திறந்து வைத்தார்.

வாரா வாரம் திங்கள் மற்றும் வெள்ளியன்று பஜனை நடக்கும். காந்திக்கு வழிபாடு செய்வார்கள். காந்திய சிந்தனைகளை வளர்க்கும்விதமான சொற்பொழிவுகளும் நடக்கும். காலப்போக்கில் இந்த வழக்கம் மாறியது. காந்தி ஜெயந்தி, காந்தி நினைவு நாள், சுதந்திர தினம், குடியரசு தினம் ஆகிய தினங்களில் சிறப்பாக விழா நடத்தப்படுகிறது. பிற நாள்களில் சாதாரண வழிபாடு மட்டுமே நடக்கிறது.

இந்தியா சுதந்திரம் பெற்ற நள்ளிரவில் எங்கள் ஊரில் தியாகிகளால் கொடியேற்றப்பட்டது. ஒவ்வொரு சுதந்திர தினம், குடியரசு தினத்தன்றும் அந்தக் கம்பத்தில்தான் கொடியேற்றப்படுகிறது'' என்று சிலிர்ப்பாகச் சொன்னார்.

காந்தி இன்னமும் கிராமங்களில் வாழ்கிறார் என்பது உண்மைதான்.