Published:Updated:

துரோகம் செய்துவிட்டது தி.மு.க அரசு... ‘தற்காலிகப் பணி’அறிவிப்பால் கொதிக்கும் ஆசிரியர்கள்!

vikatan
பிரீமியம் ஸ்டோரி
vikatan

டெட் தேர்வு எழுதிய 80,000 பேர், கடந்த ஒன்பது ஆண்டுகளாக என்ன செய்வது என்றே தெரியாமல் தவிக்கும் நிலையில், தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்குக்கூட எங்களைப் பணியமர்த்த இந்த அரசுக்கு மனது இல்லையா

துரோகம் செய்துவிட்டது தி.மு.க அரசு... ‘தற்காலிகப் பணி’அறிவிப்பால் கொதிக்கும் ஆசிரியர்கள்!

டெட் தேர்வு எழுதிய 80,000 பேர், கடந்த ஒன்பது ஆண்டுகளாக என்ன செய்வது என்றே தெரியாமல் தவிக்கும் நிலையில், தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்குக்கூட எங்களைப் பணியமர்த்த இந்த அரசுக்கு மனது இல்லையா

Published:Updated:
vikatan
பிரீமியம் ஸ்டோரி
vikatan

ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து, மனிதனைக் கடித்த கதையாக தூய்மைப் பணியில் தொடங்கிய தற்காலிகப் பணியாளர் நியமனத்தை ஆசிரியர் பணி வரையில் விரிவுபடுத்தியிருக்கிறது தி.மு.க அரசு!

தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையின்கீழ் இயங்கும் 37,554 அரசுப் பள்ளிகளில் 52 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் படித்துவருகின்றனர். இவர்களுக்குக் கற்பிக்கும் பணியில் சுமார் 2.2 லட்சம் ஆசிரியர்கள் இருக்கிறார்கள். 4,989 இடைநிலை, 5,154 பட்டதாரி, 3,188 முதுநிலை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருக்கின்றன. இந்த 13,331 பணியிடங்களையும் தற்காலிக ஆசிரியர்களைக் கொண்டு நிரப்ப பள்ளிக்கல்வித்துறை முடிவெடுத்திருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

துரோகம் செய்துவிட்டது தி.மு.க அரசு... ‘தற்காலிகப் பணி’அறிவிப்பால் கொதிக்கும் ஆசிரியர்கள்!

எப்படி வந்தது 13,331 காலிப்பணியிடம்?

மத்திய அரசின் புதிய சட்டப்படி, ஆசிரியர்களாகப் பணி நியமனம் செய்வதற்கு தகுதியானவர்களை நிர்ணயம் செய்வதற்காக, ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) நடத்துவது கட்டாய மானது. இதன்படி தமிழ்நாட்டில் முதன்முறையாக 2012-ம் ஆண்டு ‘டெட்’ தேர்வு நடத்தப்பட்டது. இப்போது 7.5 லட்சம் பேர் தேர்வெழுதியதில், சுமார் 2,000 பேர் மட்டுமே தேர்ச்சிபெற்றனர். இதனால், தேர்ச்சி பெறாதவர்களுக்கு அதே ஆண்டு மறுதேர்வு நடத்தப்பட்டது. இதில், 19,000 பேர் தேர்ச்சி பெற்றனர். இதையடுத்து, அந்த 21,000 பேருக்கும் பணி வழங்கப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக, 2013-ல் நடத்தப்பட்ட தேர்வில், 26,000 பேர் தேர்ச்சி பெற்றனர். இந்த ஆண்டுதான் ‘டெட்’ தேர்வில் முதல் குழப்பம் அரங்கேறியது. அதாவது, தேர்ச்சிக்கான தகுதிகளில் சில தளர்வுகளை அரசு மேற்கொண்டது. இதன் மூலம், கூடுதலாக 30,000 பேர் தகுதி பெற்றதால், 2013 ஆண்டில் கிட்டத்தட்ட 56,000 பேர் தகுதியானார்கள். இதைக் குறைக்க, தகுதி பெற்றவர்களின் வயது, 10, 12-ல் எடுத்த மதிப்பெண் ஆகியவற்றைக் கணக்கிட ‘வெயிட்டேஜ்’ என்ற முறை அறிமுகம் செய்யப்பட்டது. கிட்டத்தட்ட குரங்கு அப்பத்தைப் பங்குவைத்த கதைதான்!

இதன் மூலம், ஏற்கெனவே தகுதிபெற்ற பலர் பாதிக்கப்பட்டது மட்டுமல்லாமல், ‘டெட்’ தேர்வில் குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் பணி நியமனம் பெற்றனர். தேர்வின்போது எந்த அறிவிப்பும் கொடுக்காமல், திடீரென ‘வெயிட்டேஜ்’ முறை அறிமுகம் செய்யப்பட்டதால், பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இதன் பிறகு நான்கு ஆண்டுகள் பணி நியமனமும் நடக்கவில்லை, டெட் தேர்வும் நடக்கவில்லை. காலிப் பணியிடங்களும் கடுமையாக அதிகரித்தன. கொரோனா காலகட்டத்தில் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை மிக அதிகமானதால், ஆசிரியர் தேவை மேலும் அதிகரித்தது. இப்படியாக, இப்போது ஆசிரியர், மாணவர் விகிதாசாரத்தின்படி மொத்தம் 13,331 காலிப்பணியிடங்கள் இருக்கின்றன.

துரோகம் செய்துவிட்டது தி.மு.க அரசு... ‘தற்காலிகப் பணி’அறிவிப்பால் கொதிக்கும் ஆசிரியர்கள்!

தற்காலிக ஆசிரியர் நியமன அறிவிப்பு!

இந்த நிலையில்தான் கடந்த ஜூன் 23-ம் தேதி ஓர் அறிவிப்பை வெளியிட்டது பள்ளிக்கல்வித்துறை. மொத்த காலியிடங்களையும் தற்காலிக ஆசிரியர் களைக்கொண்டு நிரப்புவதாகவும், அவர்களில் இடைநிலை ஆசிரியருக்கு மாதம் 7,500 ரூபாயும், பட்டதாரி ஆசிரியருக்கு 10,000 ரூபாயும், முதுநிலை ஆசிரியருக்கு 12,000 ரூபாயும் ஊதிய வழங்கப்படும் என்றும் சொன்னது அந்த அறிவிப்பு.

அரசின் இந்த முடிவுக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியிருக்கின்றன. ‘டெட்’ தேர்ச்சிபெற்ற ஆசிரியர்கள், சென்னை நுங்கம்பாக்கத்திலுள்ள டி.பி.ஐ வளாகத்தில் மொட்டை அடித்தும், பிணம்போல் நடித்து ஒப்பாரி வைத்தும் நடத்திய நூதன போராட்டம் பொதுமக்கள் கவனத்தை ஈர்த்தது. இதற்கிடையே, ‘முறையான வழிகாட்டுதல்கள் இல்லாமல் தகுதியற்றவர்களை ஆசிரியர்களாக நியமிப்பது பெரும் ஆபத்தாக அமையும்’ என்று தற்காலிக ஆசிரியர்கள் நியமனத்துக்கு மதுரை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடைவிதித்தது. இதையடுத்து, வழிகாட்டு நெறிமுறையில் மாற்றம் கொண்டுவந்து, ‘டெட்’ தேர்வில் தேர்ச்சி பெற்றிருப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப் படுவதாகவும், ஆனால், ஒரு பணிக்கு இரண்டு பேர் விண்ணப்பிக்கும் நிலையில், ‘இல்லம் தேடிக் கல்வி திட்டத்’தில் பணியாற்றும் நபர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்றும் பள்ளிக் கல்வித்துறை அறிவித்திருக்கிறது. ஆனாலும், நீதிமன்றம் தடையைத் தளர்த்தவில்லை. பள்ளிக் கல்வித்துறையும் தற்காலிக ஆசிரியர் நியமனத்தைக் கைவிடவில்லை.

துரோகம் செய்துவிட்டது தி.மு.க அரசு... ‘தற்காலிகப் பணி’அறிவிப்பால் கொதிக்கும் ஆசிரியர்கள்!

துரோகம் செய்கிறது தி.மு.க அரசு!

தற்காலிக ஆசிரியர் நியமனத்துக்கு எதிராகப் போராடும் ‘டெட்’ தேர்வில் தேர்ச்சிபெற்றவர்களின் நலச் சங்க மாநில ஒருங்கிணைப்பாளர் பாசார் மு.புகழேந்தி-யிடம் பேசினோம். “டெட் தேர்வு எழுதிய 80,000 பேர், கடந்த ஒன்பது ஆண்டுகளாக என்ன செய்வது என்றே தெரியாமல் தவிக்கும் நிலையில், தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்குக்கூட எங்களைப் பணியமர்த்த இந்த அரசுக்கு மனது இல்லையா... தேர்தல் பிரசாரத்தின்போது, ‘டெட்’ தேர்வு எழுதிய ஆசிரியர்கள் நலன் காக்கப்படும் என்று போகிற இடமெல்லாம் வாக்குறுதி கொடுத்தார் இன்றைய முதல்வர் ஸ்டாலின். தி.மு.க தேர்தல் அறிக்கையின் 177-வது வாக்குறுதியும் அதுதான். வாக்குறுதியை நிறைவேற்றவில்லை யென்றால், எனது அறைக்கே வந்து கேள்வி கேட்கலாம் என்றார் ஸ்டாலின். ஆனால், ஆட்சிக்கு வந்ததும், அவர் இருக்கும் திசைக்குக்கூடச் செல்ல அதிகாரிகள் அனுமதிப்பதில்லை. நிரந்தரப் பணி நியமன ஆணை பெறவேண்டிய தகுதிபெற்ற எங்களை, தற்காலிகப் பணியாவது கிடைக்குமா என்று கெஞ்சவைத்துவிட்டார்கள். நான்கு முறை தொடர் போராட்டம் நடத்தியும் மனமிறங்காத தி.மு.க அரசு, எங்கள் போராட்டத்தை கலைக்கத்தான் முயல்கிறது. அ.தி.மு.க அரசு செய்த துரோகத்தைத்தான் தி.மு.க அரசும் செய்கிறது” என்றார் கோபமாக.

பள்ளிக்கல்வித்துறையின் அதிகாரிகள் சிலரோ, “அரசுப் பள்ளியில் பணிபுரியும் பகுதி நேர ஆசிரியர்களுக்கே ரூ.10,000 ஊதியம் வழங்கப் படுகிறது. எனவே, ‘டெட்’ தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.7,500 ஊதியம் என்பது நியாயமானதல்ல. கல்வித்துறையை நிர்வகிக்கும் பொறுப்பில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள்தான் நிறைந்திருக்கிறார்கள். அவர்கள் பிற துறையைப் போல பள்ளிக்கல்வித்துறையிலும் வரவு செலவு கணக்கு போடுகிறார்கள். கல்வித்துறைக்கான செலவினத்தை முதலீடாகப் பார்த்தால்தான், வருங்கால தமிழ்நாடு வளர்ச்சியை நோக்கிச் செல்லும்” என்றனர்.

புகழேந்தி
புகழேந்தி
பிரின்ஸ் கஜேந்திர பாபு
பிரின்ஸ் கஜேந்திர பாபு

முதல்வரையே ஏமாற்றுகிறார்கள்!

பொதுப் பள்ளிகளுக்கான மாநில மேடையின் பொதுச் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபுவிடம் கேட்டபோது, “சட்டப்படி எந்த அதிகாரமும் இல்லாத, பள்ளி மேலாண்மைக் குழுவுக்கு ஆசிரியர் பணியை நிரப்பும் அதிகாரம் வழங்கியது ஏன் என்பதுதான் தெரியவில்லை. இந்தத் தற்காலிக ஆசிரியர்கள் ஜூலை யிலிருந்து பிப்ரவரி வரை எட்டு மாத காலம்தான் பணியில் இருப்பார்களென்றால், அவர்கள் ஆசிரியர்களா அல்லது தொழிற்சாலையில் பணிபுரியும் அப்ரன்டீஸா... நாள் ஒன்றுக்கு ரூ.39 சம்பளம் வாங்கும் நபர், எந்த மனநிலையி லிருந்து பாடம் எடுப்பார்... தேசிய கல்விக் கொள்கையின் கூறுகளையே பல்வேறு வடிவங்களில், கவர்ச்சியான பெயர்களில் அமல்படுத்தி, அமைச்சரையும் முதல்வ ரையும் ஏமாற்றுகிறார்கள் சில அதிகாரிகள். அரசுப் பள்ளிகள் அழிவதற்கே இது வழிவகுக்கும்.

எதிர்க்கட்சியாக இருந்த போது தொகுப்பூதியம், மதிப்பூதியத்துக்கு எதிராகப் பேசிவந்த தி.மு.க., ஆட்சிக்கு வந்த பிறகு குறைந்த ஊதியத்தில் ஆசிரியர்களை நியமனம் செய்ய அதிதீவிர ஆர்வம் காட்டுகிறது. ஏற்கெனவே, ‘டெட்’ தேர்வு எழுதி ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் காத்திருக்கிறார்கள். இந்த நிலையில், தற்காலிக ஆசிரியர் நியமனம் என்கிற ‘கல்வியியல் செயல்பாடு’ குறித்து எந்தப் புரிதலும் இல்லாத ஒருவரின் முடிவாகத்தான் இதை நான் பார்க்கிறேன். தற்போதைய சூழலில் நமது மாணவர்களுக்கு ஆசிரியர்கள் தேவை. அதற்கு, ‘டெட்’ தேர்வில் தேர்ச்சிபெற்றவர்களை நிரந்தரமாக நியமிக்க வேண்டும். கடந்த ஆட்சியில் தற்காலிகத் தீர்வுதான், பல பிரச்னைகளுக்கு காரணமானது. அதே தவற்றை தி.மு.க அரசும் செய்யக் கூடாது” என்றார் உறுதியான குரலில்.

கடந்த சில வாரங்களாகத் தற்காலிக ஆசிரியர் கள் பணி நியமன விவகாரம் பள்ளிக்கல்வித்துறை வட்டாரத்தில் பெரும் புயலைக் கிளப்பியிருக்கும் நிலையில், இது குறித்து துறை அதிகாரிகளிடம் அமைச்சர் அன்பில் மகேஷ் இன்னும் ஓர் ஆலோசனைக் கூட்டத்தைக்கூட நடத்தவில்லை. தற்காலிக ஆசிரியர்கள் குறித்து அமைச்சர் அன்பிலிடம் விளக்கம் கேட்பதற்காகப் பலமுறை அவரைத் தொடர்புகொள்ள முயற்சி செய்தோம். ஆனால், அவர் கட்சிப் பணியில் ரொம்ப பிஸி-யாக இருப்பதாகவே பதில் கிடைத்தது.

அன்பில் மகேஷ் தாராளமாக கட்சிப் பணியாற்றட்டும். ஆனால், ஆசிரியர்கள், மாணவர்களின் எதிர்காலத்திலும் கவனம் செலுத்த வேண்டியது அமைச்சரான தனது முதல் கடமை என்பதை உணர வேண்டும்!