Published:Updated:

ஓராண்டு... பத்து உயிர்கள்... முடிவுக்கு வருமா மனிதக்கழிவுகளை மனிதனே அகற்றும் கொடுமை?

கொடுமை
பிரீமியம் ஸ்டோரி
கொடுமை

திட்டம் ஆரம்பிச்சப்ப பார்த்ததோட சரி. அந்த மெஷினை அதுக்கப்புறம் பாக்கவேயில்லை

ஓராண்டு... பத்து உயிர்கள்... முடிவுக்கு வருமா மனிதக்கழிவுகளை மனிதனே அகற்றும் கொடுமை?

திட்டம் ஆரம்பிச்சப்ப பார்த்ததோட சரி. அந்த மெஷினை அதுக்கப்புறம் பாக்கவேயில்லை

Published:Updated:
கொடுமை
பிரீமியம் ஸ்டோரி
கொடுமை

கழிவுநீர்த் தொட்டியில் இறங்கியபோது விஷவாயு தாக்கி, கடந்த ஓராண்டில் மட்டும் தமிழ்நாட்டில் பத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கடந்த வருடம், ஜூன் மாதம் 16-ம் தேதி திருப்பத்தூரில் ஒருவர், 2022 ஜனவரி 19-ம் தேதி தாம்பரத்தில் இருவர், ஏப்ரல் 22-ம் தேதி மதுரையில் மூவர், மே 5-ம் தேதி ஆவடி அருகிலுள்ள பருத்திப்பட்டு பகுதியில் ஒருவர், ஜூன் 28-ம் தேதி சென்னை மாதவரத்தில் ஒருவர், ஜூன் 30-ம் தேதி சென்னை பெருங்குடி பகுதியில் இருவர் என்று பத்து பேர் உயிரிழந்திருக்கிறார்கள்.

ஓராண்டு... பத்து உயிர்கள்... முடிவுக்கு வருமா மனிதக்கழிவுகளை மனிதனே அகற்றும் கொடுமை?

ஸ்டாலினின் வாக்குறுதி

2021, மார்ச் மாதம் திருச்சியில் நடந்த, `தமிழ்நாட்டின் விடியலுக்கான முழக்கம்’ பொதுக்கூட்டத்தில், `மனிதக்கழிவுகளை மனிதரே அகற்றும் இழிவை முற்றிலுமாக ஒழித்தல்’ குறித்துப் பேசினார் மு.க.ஸ்டாலின். தி.மு.க ஆட்சிக்கு வந்தால் இந்தக் கொடுமை அறவே ஒழிக்கப்படும் என்பதே அவரது வாக்குறுதி.

கொஞ்சம் தாமதம்தான் என்றாலும், நடந்து முடிந்த சட்டமன்றக் கூட்டத்தொடரில் கழிவுநீர் அகற்றும் நடவடிக்கையை ஒழுங்குபடுத்த ஒரு சட்ட மசோதாவைத் தாக்கல் செய்தார் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு. அந்த மசோதாவில், `கழிவுநீர்த் தொட்டி அல்லது துப்புரவு அமைப்பில் அபாயகரமாகச் சுத்தம் செய்வதில் நேரடியாகவோ, மறைமுகமாகவோ எந்த நபரும் ஈடுபடவில்லை என்பதை உரிமையாளர்கள் உறுதி செய்ய வேண்டும். இந்தச் சட்டத்தின் விதிமுறைகளை அல்லது நிபந்தனைகளை மீறினால் முதன்முறை 25 ஆயிரம் ரூபாயும், இரண்டாவது முறை 50 ஆயிரம் ரூபாய் வரையும் அபராதமும், கூடவே சிறைத் தண்டனையும் விதிக்கப்படும்’ என்று கூறப்பட்டிருந்தது.

இப்படிச் சட்டத்துக்கு மேல் சட்டம்தான் வருகிறதே ஒழிய, இந்த அவலத்தை மாற்றுவதற்கான திட்டம் எதுவும் வரவில்லை. கழிவுநீர்த் தொட்டியை சுத்தம் செய்யும்போது இறப்பு என்கிற செய்தி தொடர்ந்து வந்துகொண்டுதான் இருக்கிறது.

ஓராண்டு... பத்து உயிர்கள்... முடிவுக்கு வருமா மனிதக்கழிவுகளை மனிதனே அகற்றும் கொடுமை?

காணாமல்போன இயந்திரம்

மனிதக்கழிவுகளை அகற்றும் இயந்திரத்தை சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியிலுள்ள கொய்யாத்தோப்பு பகுதியில், கடந்த 2021 ஜூனில் அந்தத் தொகுதியின் எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின் தொடங்கிவைத்தார். அப்போது விரைவில் தமிழ்நாடு முழுவதும் இந்த இயந்திரங்கள் செயல்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதன் பிறகு வேறெங்கும் இந்த இயந்திரங்கள் பயன்பாட்டுக்கு வரவில்லை. அவ்வளவு ஏன், சேப்பாக்கம் திருவல்லிக்கேணியில்கூட அது பயன்பாட்டில் இல்லை!

இது குறித்து திருவல்லிக்கேணியைச் சேர்ந்த அ.ம.மு.க மத்திய சென்னை கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர் எல்.ராஜேந்திரன் நம்மிடம் கூறுகையில், “திட்டம் ஆரம்பிச்சப்ப பார்த்ததோட சரி. அந்த மெஷினை அதுக்கப்புறம் பாக்கவேயில்லை. நான் பார்க்குறப்பல்லாம் மனுஷங்கதான் இறங்கிச் சுத்தம் பண்ணிட்டிருக்காங்க” என்றார்.

ஓராண்டு... பத்து உயிர்கள்... முடிவுக்கு வருமா மனிதக்கழிவுகளை மனிதனே அகற்றும் கொடுமை?

இழப்பீடும் இல்லை!

நாட்டின் பல நகரங்களிலும் செலவு குறையும் என்பதற்காகப் பலரும் மனிதர்களைத்தான் பயன்படுத்துகிறார்கள். அவர்களும் வாழ்வாதாரத்துக்காக வேறு வழியின்றி இந்த வேலையைச் செய்கின்றனர். தூய்மைத் தொழிலில் ஈடுபட்டுள்ள 50 சதவிகிதத்துக்கும் அதிகமானோர் தீண்டாமையை எதிர்கொள்வதாகவும், 36 சதவிகிதம் பேர் வன்முறையை அனுபவிப்பதாகவும் ஓர் ஆய்வு சொல்கிறது.

கையால் மனிதக்கழிவுகளை அள்ளுதல், உலர்கழிப்பறை தடைச்சட்டம் 1993-லேயே அமலுக்கு வந்துவிட்டது. 29 வருடங்களுக்கு மேல் ஆகியும் அது ஏட்டளவிலேயே இருக்கிறது.

“எந்த நாடும் தெரிந்தே தங்களின் குடிமகன்களைச் சவக்குழிக்குள் அனுப்புவதில்லை. ஆனால், இங்கே மாதம்தோறும் நான்கைந்து பேர் கழிவுக்குழிக்குள் உயிரிழக்கிறார்கள்.” - இது மனிதக்கழிவுகளை மனிதர்களே அகற்றும் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தெரிவித்திருந்த கருத்து. கழிவுநீர்த் தொட்டிகளைச் சுத்தம் செய்யும்போது இறந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று 2014-ல் உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. அதுவும் நடைமுறையில் இல்லை.

‘பாடம்’ நாராயணன்
‘பாடம்’ நாராயணன்

இந்த விவகாரம் தொடர்பாக சமூக ஆர்வலர் ‘பாடம்’ நாராயணனிடம் பேசினோம். ``இறப்பு ஒரு பக்கம் வேதனை என்றால், இறந்தவர்களுக்கு இழப்பீடுகூடச் சரிவரக் கிடைப்பதில்லை. மலக்குழிக்குள் மனிதனை இறக்கும் தவற்றை அரசே செய்கிறது என்று சொல்லவில்லை. ஆனால், இந்தப் பிரச்னைக்கு தீர்வு காணவேண்டியது அரசின் கடமை. தமிழ்நாட்டில் கழிவுநீர் மேலாண்மைக்கான சட்டதிட்டங்கள் அனைத்தும் ஏற்கெனவே இருக்கின்றன. அவற்றை அரசு முறையாகப் பின்பற்றத் தொடங்கினாலே போதும். இங்கே ஒவ்வொரு நகருக்கும் அடியில் நரம்பு மண்டலம்போலப் பரவியிருக்கும் பல்லாயிரம் கிலோமீட்டர் நீள பாதாளச் சாக்கடைகள் வெறும் சிமென்ட், ஜல்லி, கம்பியைவைத்து மட்டும் கட்டப்படவில்லை. பாதிக்குப் பாதி ஊழலும் சேர்ந்திருக்கிறது. இந்தப் பாதாளச் சாக்கடைகள் அனைத்தும் வரும் காலத்தில் பெரும் சிக்கலை ஏற்படுத்தும். அதைச் சரிசெய்வதற்கான தொலைநோக்குத் திட்டங்களையும் இப்போதே அரசு வகுக்க வேண்டும்” என்றார்.

ஓராண்டு... பத்து உயிர்கள்... முடிவுக்கு வருமா மனிதக்கழிவுகளை மனிதனே அகற்றும் கொடுமை?

ஒருமுறை உள்ளே இறங்கிப் பார்த்தால்தான், நம்முடைய ஆட்சியாளருக்கு இந்தக் கொடுமையின் வீரியம் புரியும் போல!